சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய் - பழமொழி நானூறு 241

இன்னிசை வெண்பா

மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க்(கு) என்கொலோ?
மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய். 241

- பழமொழி நானூறு

பொருளுரை:

மை பூசப்பெற்றுப் பொருந்தி இருக்கின்ற கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய்!

தம்முட் பகைகொண்டு போர் செய்யும் பொருட்டுச் சேனைகள் வீரத்தோடு நிற்கின்ற போரிடத்தில் பகைவர் கூறும் பொய்யான உரைகளைக் கேட்டு கீழறுக்கப்பட்டுத் திரிபவர்களுக்கு மெய்யுரையால் என்ன பயனுண்டு? ஒரு பயனும் இல்லை;

ஆகையால், அறிவு நிறைந்தோர் பிறர் கைப்பொருளை உண்டாராயினும் உண்மையே கூறுவார்கள்.

கருத்து:

பெரியோர்கள் பிறர்கைப் பொருளை உண்டாராயினும் உண்மையையே கூறுவார்கள்.

விளக்கம்:

அறைபோதல், கீழறுக்கப்படுதல் என்பன லஞ்சம் பெற்றுப் பகைவரை யடைதல் என்ற பொருளைக் கொடுப்பனவாம்.

'சான்றவர் கையுண்டும் கூறுவர் மெய்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-22, 6:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கட்டுரைகள்

மேலே