486 பசிமண் ஓடு பற்றலால் முத்தேவர் பாங்கானோம் – கணிகையரியல்பு 13

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

பசையறவெம் மாவியன்னாள் கைப்பொருளெ லாம்பறிக்கப்
..பசியால் நான்கு
திசைமுகமும் நோக்கலினாற் றிசைமுகனா னோம்வாயில்
..தீயாள் இட்ட
வசையிலான மண்ணுண்டு மாயனுமா னோங்கையின்
..வாங்கும் ஓட்டால்
இசைமேவும் ஈசனுமா னோம்புவியில் நமையொப்பார்
..எவர்தாம் அம்மா. 13

– கணிகையரியல்பு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

எம் உயிரையொத்த பொதுமகள் எம்முடைய கைப்பொருள் எல்லாங் கவர்ந்து யாம் வெறுமையானபின் பசியால் நாற்புலமும் நோக்கலானேம்; அதனால் நான்முகனானோம்.

அக்கொடியாள் வைது திட்டி வாயில் மண்ணை யள்ளியிட்டாள். அதனால் மண் உண்ட மாயவனானோம்.

அவள் தரும் ஓட்டைக் கையில் வாங்கியதால் புகழ் மிக்க முதல்வனாம் ஆண்டவனானோம்.

ஆதலால், முத்தேவராகிய நம்மை ஒப்பவர் இவ்வுலகில் யாவருளர்?

பசையற - பொருள் நீங்க; வறுமையுற. ஈசன் - முதல்வன்; ஆண்டான், புவி - உலகம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-22, 9:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே