487 பொதுமகளிடஞ் செயல் பொன்றுவித்தால் புகழ்வம் – கணிகையரியல்பு 14

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

விடமுண்டான் கூற்றுதைத்தான் அலகைவென்றான் புரமெரித்தான்
..விடையோ னென்னக்
கடலுலகிற் சைவரவன் புகழ்விரிப்பார் கணிகையர்கட்
..கடுவை யுண்டு
குடமுலையாங் கூற்றுதைத்துத் தாய்க்கிழவி யெனும்பேயைக்
..கொன்றன் னார்வாழ்
இடமென்னும் புரமெரித்தா னெனில்யாமும் அவன்புகழை
..இயம்பு வோமே. 14

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

செந்நெறியாளர்கள் தங்கள் முழுமுதல்வராம் ஆனேறு ஊரும் அம்மையப்பரை, `நஞ்சுண்டார்; காலனைக் காலாலுதைத்தார்; பேயை வென்றார்; திரிபுரமெரித்தார் எனக் கடல் சூழுலகில் அவருடைய மெய்ப்புகழை எடுத்துரைப்பர்.

நாமும் அவரைப் புகழ வேண்டுமானால், அவர் பொதுமகளிருடைய கண்ணாகிய நஞ்சையுண்டு, கொங்கைக் கூற்றை யுதைத்து, தாய்க்கிழவியாகிய பேயைக் கொன்று, அவர்கள் இருக்கும் இடமாகிய புரத்தை யெரித்து உலகுக்கு இன்பத்தை அருளவேண்டும்; அப்பொழுது நாமும் புகழ்வோம்.

விடம் - நஞ்சு. அலகை - பேய். புரம் - முப்புரம். விடை - ஆனேறு. சைவர் - செந்நெறியாளர்; சிவனடியார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Dec-22, 9:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே