183 உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றுரைப்பது வெளிமயக்கமே - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 10

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)

ஒளிமுடி யொடும்பி றந்தே
..உலகமாண் டவரும் இல்லை
எளியராய் ஓடொன் றேந்தி
..இங்குதித் தவரும் இல்லை
குளிர்கட லுடுத்த பாரில்
..குறைந்தவர் மேலோர் என்னல்
வெளிமயக் கன்றிச் சற்றும்
..மெய்யல வுணர்வாய் நெஞ்சே. 10

- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சே! ஒளிமிகுந்த மணிமுடியுடன் பிறந்து நாடு ஆண்டவரும் இல்லை. பிறக்கும் பொழுதே எளியவராய் கையில் ஓடேந்திப் பிறந்தவரும் இல்லை.

குளிர்ச்சியான கடல் சூழ்ந்த இவ்வுலகில் தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்று பாகுபடுத்திக் கூறுவது வெளிமயக்கமே அல்லாது அதில் சிறிதும் உண்மையில்லை என உணர்ந்து கொள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
.
கடலுடுத்த - கடல் சூழ்ந்த. பார் - உலகம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-22, 10:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே