104 உடன் பிறந்தார்க்குத் தந்தை, தாய் வீடொன்றே - உடன் பிறந்தார் இயல்பு 1
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தந்தைதா யொருவர் தம்மைத்
..தாங்கிய உதர மொன்று
முந்தவின் பால ருந்து
..முலையொன்று வளரு மில்லொன்(று)
இந்தவா றெல்லா மொன்றாய்
..இயைந்தசோ தரரன் புற்றுச்
சிந்தையு மொன்றிப் பாலுந்
..தேனும்போல் விளங்கல் நன்றே. 1
- உடன் பிறந்தார் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
உடன் பிறந்தார்க்குத் தந்தை தாயார் ஒருவர்; அவர்களைத் சுமந்த வயிறும் ஒன்று; அவர்கள் பால் பருகிய இனிய மார்பும் ஒன்று; இளம் பருவத்தில் வளரும் வீடும் ஒன்று. இவ்வாறெல்லாம் பலவும் ஒன்றாக இயல்பாகவே அமையப்பெற்ற உடன் பிறந்தார் அன்பு கொண்டு உள்ளமும் ஒன்றாகப் பொருந்தி, பாலும் தேனும் போல் இனிது வாழ்வது நன்மை பயக்கும் என்று அன்புடன் கூறுகிறார்.
இன்று உடன் பிறந்தார்கள் அன்பு கொண்டு உள்ளமும் ஒன்றாகப் பொருந்தி வாழ்கிறார்களா?
இரண்டாம் பாடலில் ’எல்லோரும் உடன்பிறப்பேல் இயைந்தாருக்கு அளவு எவன்’ என்று, உடன் பிறந்தார் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வதற்கு அளவு ஏது என்று கேட்கிறார்.