339 இகழ்ந்தார் தமக்கும் இனியவே இயற்றுக - பிழை பொறுத்தல் 4
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
உனையொருவர் இகழ்ந்தனரேல் ஏதுக்கா விகழ்ந்தனரென்
..றுன்னி யுன்பால்
தினையளவு தப்புளதே லதைநீக்காய் தப்பின்றேற்
..சினமு றாதே
கனைகழையை வேம்பென்னிற் கழைக்குமோர் குறையுண்டோ
..கல்லின் மோதித்
தனையுடைப்போர்க் குணவுதரும் தேங்காய்போ லெவர்க்குநன்மை
..தனைச்செய் நெஞ்சே. 4
- பிழை பொறுத்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சே! உன்னை ஒருவர் இகழ்ந்தாரானால், அவர் எதற்காக இகழ்ந்தாரென்று நீ உன்னிடமே நினைத்துப் பார். உன்னிடம் குற்றம் தினையளவு இருப்பினும் அதை நீக்கிவிடு. குற்றமில்லை யானாலும் இகழ்ந்ததற்காகச் சினம் கொள்ளாதே.
செறிந்த கரும்பினை வேம்பென்று சொல்வதால் கரும்புக்கு ஏதாவது குறை உண்டாகுமா? கல்லின் மேல் அடித்து உடைத்தாலும் தேங்காய் உண்ணும் பருப்பினைத் தருவது போல இகழ்ந்தவர்க்கு நன்மையே செய்” என்று அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.