338 குற்றத்தைப் பொறுத்தல் அறிவோர் குணமே - - பிழை பொறுத்தல் 3
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
நாவையே கடித்ததெனப் பல்தகர்க்கும் பேருளரோ
..நடக்கும் வேளை
பூவையே பொருவுகழல் சருக்கியதென் றதைக்களைவோர்
..புவியி லுண்டோ
காவையா ருலகமெனும் பேருடலி னவயவம்போல்
..கலந்த சீவர்
தாவையே செய்யினுமிக் கறிவுடையோர் கமைசெய்தல்
..தகுதி யாமால். 3
பிழை பொறுத்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பல் நாக்கைக் கடித்துவிட்டதென்று அதனை யாராவது உடைப்பார்களா? பூப்போன்ற கழலணிந்த கால் நடக்கும்போது வழுக்கி விட்டதென்று அதனை வெட்டுவார் இப்பூமியில் உண்டா? கிடையாது.
எனவே, சோலைகள் சூழ்ந்த உலகமாகிய பெரிய உடம்பினுக்கு உறுப்புப் போல் கூடியுறையும் மக்கள் குற்றம் செய்யினும் சிறந்த அறிவுடையார் பொறுத்தல் முறைமையாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தகர்த்தல் - உடைத்தல். சருக்கல் - வழுவுதல்.
கா - சோலை. கமை - பொறுமை.