406 துன்பெலாம் பெருக்கும் பொருள் தூயபொருள் ஆகாது - பொருளாசை ஒழித்தல் 2

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

ஒப்பருநற் குணத்தவர்க்குங் கொலைகாமங் கட்களவை
..உபதே சிக்கும்
அப்பனாக நட்பினர்க்குட் பகைவிளைக்குஞ் சத்துருவாய்
..அகிலத் துற்ற
செப்பரிய துயர்க்கெல்லா மாதாவாய்த் தீவினைக்கோர்
..செவிலி யாய
இப்பொருளை நற்பொருளென் றெப்படிநீ யொப்புகின்றாய்
..ஏழை நெஞ்சே. 2

- பொருளாசை ஒழித்தல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அறிவில்லாத நெஞ்சே! ஒப்பில்லாத நல்ல பண்புள்ளவர்க்கும் கொலை காமம் கள் திருட்டு முதலிய தீமைகளைப் போதிக்கும் அப்பனாக, நண்பர்களுக்குள் பகையை உண்டாக்கும் விரோதியாக, உலகிலுள்ள சொல்ல முடியாத துன்பங்களுக்கு எல்லாம் அன்னையாக, கொடிய செயல்களுக்கு ஒரு வளர்ப்புத் தாயாக இருக்கும் ’இப்பொருளை’ இன்பமும் துணையும் தரும் நல்ல பொருளென்று நீ எப்படி ஒப்புக் கொள்கிறாய்” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

சத்துரு - விரோதி. ஏழை - அறியாமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Dec-22, 9:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே