322 அழுக்கோடு அழிபொருளால் அகங்கொளல் வீணே - செல்வச் செருக்கு 1
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
கா 4 / மா தேமா
மணிக’ள்’பல வகைக்கல்லாம் பொன்முதலு லோகமின்னு
..மண்ணாங் கட்டி
துணிபட்டா டைகள்பருத்தி நூல்பூச்சிக் குடர்நாயின்
..தோலு ரோமம்
அணிபுழுகு க’த்’தூரிமுத லியபூனை யின்மலம்பால்
..ஆவி ரத்தந்
தணிவில்தேன் வண்டெச்சில் இவைசெல்வ மெனச்செருக்கல்
..தகுமோ நெஞ்சே. 1
- செல்வச் செருக்கு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நெஞ்சே! ஒன்பது வகையாக வழங்கும் மணிகள் பலவகைக் கற்களாம். பொன் முதலிய உலோகங்கள் மின்னுகின்ற மண்ணாங்கட்டிகள். துணி, பட்டுஆடைகள் முதலியன செய்யப் பயன்படும் பருத்திநூல் பூச்சிக்குடலும், நாயின்தோல் விலங்கு முதலியவற்றின் மயிர்களும் ஆகும்.
அணியப்படும் புனுகு, கத்தூரி முதலியன பூனையின் மலம் ஆகும். பால் ஆவின் குருதியாகும். சிறந்த தேன் வண்டின் எச்சில் ஆகும். இப் பொருள்களை நிலையான செல்வமென்று கருதி வீண் பெருமை கொள்ளுதல் தகுமோ?” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
மணி-இரத்தினம். புழுகு-புனுகு. ஆ-பசு.
செருக்கல்-வீண் பெருமை கொள்ளுதல்.