ஒரு அரசியல் தலைவர் ஒரு சந்நியாசியை சந்தித்துப் பேசியபோது

அரசியல் தலைவர்: வணக்கம் ஐயா, எப்படி இருக்கீங்க?
சந்நியாசி: நான் மட்டும் என்ன, நாட்டில் அனைவரும் நன்றாகவே இருக்கிறார்கள்.
அரசியல் தலைவர்: எல்லோரும் நன்றாக இருந்தால் பின் நாங்கள் எதற்கு, மருத்துவர்கள் எதற்கு ஐயா?
சந்நியாசி: அரசியல்வாதிகள் இருப்பதால்தான் மக்களுக்கு சோர்வில்லாமல் இருக்க கொஞ்சம் கேளிக்கை கிடைக்கிறது. ஒரு ரூபாயை கோயில் உண்டியலில் போட்டால், உங்களுக்கு அஞ்சு ரூபாய்
லஞ்சப்படி அளக்கவேண்டியிருக்கு. அதே நேரத்தில் அரசியல்வாதி ஒருவரை ஒருவர் கடிந்துகொள்ளும்போது மக்களுக்கு நல்ல நகைச்சுவையையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. அது நல்லதுதானே?
அரசியல் தலைவர்: நான் என் எதிர் கட்சி அரசியல்வாதிகளை அதிகம் கடிந்துகொள்ளமாட்டேன், தேர்தல் நேரம் தவிர.
சந்நியாசி: ஓ எனக்கு நன்றாகத்தெரியுமே, போன சட்டசபை தேர்தலின்போது, உங்கள் எதிர்கட்சி தலைவர் திரு செல்லப்பனை " கொஞ்ச நாள் முன்வரை செல்லக்காசாக இருந்த செல்லப்பன் இப்போது செல்லாக்காசாய் போய்விட்டார்" என்று சாடியவர்தானே நீங்கள்.
அரசியல்வாதி: பின்னே அவர்மட்டும் சும்மாவா. ஏதோ நான் தமாஷாக அப்படிச்சொன்னதற்கு " நமது பாண்டிராஜ் எப்போதுமே ஆண்டிராஜ் தான் . ஆனால் இப்போது மொத்தமாக போண்டிராஜ் ஆகிவிட்டார்" என்று என்னை சீண்டிவிட்டார்தானே.
சந்நியாசி: நான் உங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே சொன்னேன், அரசியலை விட்டுவிடுங்கள் என்று. ஆனால் ஆசை உங்களை விடவில்லை. எனவே நீங்களும் அரசியலை விடவில்லை.போன முறை நீங்கள் சதி அமைச்சராய் இருந்தபோது...
அரசியல்வாதி: ஐயா, சதி அமைச்சரில்லை, நிதி அமைச்சராய் இருந்தேன்.
சந்நியாசி: சரி , எதோ ஒரு அமைச்சராக இருந்தீங்க. அந்த இரண்டு வருஷத்துல நீங்கள் இருபது கோடி பணம் பண்ணிவிட்டீர்கள் என்று ஊரெல்லாம் பேச்சாக இருந்தது.
அரசியல்வாதி: இருபது கோடி என்பதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
சந்நியாசி: ஏன்?
அரசியல்வாதி: உண்மையில் அது இருபதுகோடிக்கு இருபதாயிரம் கம்மி.
சந்நியாசி: அதாவது நீங்க பண்ண பணம் இருபது கோடி அல்ல ஆனால் பத்தொன்பது கோடியே நொனூற்றுஒன்பது லட்சத்து எண்பதாயிரம், அப்படித்தானே.
அரசியல்வாதி: இதை என்னோட ஆடிட்டர் கன்பார்ம் பண்ணுவார்.
சந்நியாசி: உங்களைபோன்றவர்கள் இந்தமாதிரி பணம் குவிப்பதால்தான் பல ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
அரசியவாதி: நானும் ஒரு காலத்தில் ஏழையாத்தான் இருந்தேன். இந்த ஏழைகளும் என்னைமாதிரி அரசியல்வாதியாக மாறி சம்பாதிக்கட்டுமே. நான் வேணான்னா சொல்றேன்.
சந்நியாசி: என்னைப் பாருங்க. என்னிடம் இப்போது இருக்கும் பணம் ஐநூற்று பதினெட்டு ரூபாய். வேறு எந்த பணமும் இல்லை. பேங்க் அக்கௌன்ட் இல்லை.நகை இல்லை நட்டு இல்லை. நிலன் இல்லை புலன் இல்லை.
அரசியல்வாதி: உங்களுக்கு கல்யாணமும் ஆகவில்லை, அதனால மனைவியும் இல்லை.
சந்நியாசி: நீங்க சொல்றது உண்மைதான். ஆனால் நான் சுமார் பத்து வருடங்களாக ஆறு பெண்களை காதலித்தேன். ஆனால் ஒருத்திகூட என்னைக் கல்யாணம் பண்ணிகொள்ளவில்லை. அந்த விரக்தியில் சந்நியாசம் வாங்கிட்டேன். எனக்கு ஏன் கல்யாணம் ஆகவில்லை, ஒரு மனைவி இல்லை என்பதற்கு இதுதான் உண்மையான காரணம்.
அரசியல்வாதி: பாவம், உங்களை மாதிரி காதலில் படுதோல்வி அடைந்தவர்கள் ஒருவர் இருவர் இருந்தால் பெரிய விஷயம். சரி பழையதை விடுங்க. என் விஷயத்துல பாருங்க. எனக்கு காதல்னா என்னன்னே தெரியாது.
சந்நியாசி: அப்படியா, ஆச்சரியமாக இருக்கே, ஆனால் உங்களுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்களே?
அரசியல்வாதி: கொஞ்சம் பொறுங்க சாமி. நான் இன்னும் முடிக்கவில்லை . கல்யாணம் பண்றவரைக்கும் காதல் இல்லை. ஆனால் அதுக்கு அப்புறம்தான் காதல் செய்ய ஆரம்பித்தேன். அதுவும் நானாக இல்லை. நான் வேலைவாய்ப்பு வாங்கித்தந்த சில நல்ல பெண்கள் என் உதவும் தன்மையைக்கண்டு என்மேல் காதல் கொண்டார்கள்.
சந்நியாசி: ஐயோ, அப்படீன்னா நீங்க உங்க மனைவியை காதலிக்கவில்லையா?
அரசியல்வாதி: அவளை காதலிக்காமலேயா நான்கு பிள்ளைகள் பெத்துப் போட்டேன். நான் சொல்றது இந்த வேலை வாங்கித்தந்த பெண்கள் விஷயத்தில்.
சந்நியாசி: உங்களுக்கு நானே பரவாயில்லை. எனக்கு மனைவியும் இல்லை, பிள்ளைகளும் இல்லை, வேறு பெண்கள் தொடர்பும் இல்லை.எப்போதும் எல்லாமே எனக்கு இறைவன் தான்.
அரசியவாதி: அதனால்தான் உங்களில் அந்த இறைவனைக்கண்டு அவனை வழிபட்டு, எனக்கு அந்த இறைவனின் ஆதரவை பெற்றுக்கொள்ளவே உங்களிடம் வந்துள்ளேன். அடுத்த வருடம் பொதுத்தேர்தலில் எனது அ.ஆ. இ.ஈ கட்சி அமோக வென்றி பெற்று மீண்டும் அரசு அமைக்க நீங்கதான் அந்த இறைவனிடத்தில் சிபாரிசு செய்யவேண்டும்.
சந்நியாசி: அந்த இறைவன் அ.ஆ. இ.ஈக்கு மேலே. அவன் உ ஊ எ ஏ. பரந்த மனம் படைத்தவன். அவன் எல்லோருக்கும் அருள்வான். இன்று என்னிடம் ஐநூற்று பதினெட்டு ரூபாய் இருக்கிறது. நீங்களும் ஏதாவது ஒரு சிறிய தொகையை எனக்கு வழங்கிச்செல்வீர்கள். சிலர் அவ்வப்போது எனக்குச் சாப்பாடு போடுவார்கள், பலர் இங்கே வந்து கூப்பாடு போடுவார்கள். இப்படித்தான் என் வாழ்க்கை நடக்கிறது. நீங்கள் மட்டும் அல்ல உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தினமும் ஏதாவது ஒரு தப்புத்தாண்டா செய்துகொண்டுதான் இருக்கிறான். பாவம் , இந்த இறைவன். எவ்வளவு பேரைத்தான், எத்தனை தடவை தான், எப்பேர்ப்பட்ட பாவங்களுக்காகத்தான் மன்னிப்பான். அவனுக்கும் கொஞ்சம் நிம்மதி வேண்டாமா? ஆமாம் , நீங்க இன்னொரு விஷயமும் கேட்டீங்க. மக்கள் எல்லோரும் நன்றாக இருந்தால் மருத்துவர்கள் எதற்கு என்று. நான் அதற்கு விளக்கம் கூறட்டுமா?
அரசியல்வாதி: சொல்லுங்களேன் சாமி
சந்நியாசி: அங்கங்கே மக்கள் நோய்வாய்ப்பட்டு துன்பப்படுகிறார்கள். தங்கள் நோய் குணமாகவேண்டும் என்று மருத்துவர்களிடம் செல்கிறார்கள். சிலர் குணமடைந்துவிடுகிறார்கள். சிலர் இறைவனிடம் சென்றுவிடுகிறார்கள். பல நோயாளிகள் குணமடைவது மருத்துவர்களின் சிகிச்சையால்தான் என்றால் சில நோயாளிகள் மரணம் அடைவதற்கும் மருத்துவர்கள் ஒளிவுமறைவாகக் காரணமாக இருக்கிறார்கள். இயற்கையும் இதற்குக்காரணமாக இருக்கிறது. இதன் விளைவு என்னவென்றால் உலக மக்கள் தொகை ஓரளவுக்கு சமன் நிலையில் இருக்கிறது. இல்லையென்றால் மிகவும் கூடுதலான ஜனத்தொகையினால் பலவித பாதிப்புகள் இருக்கும். அதனால் தான் சொன்னேன், மருத்துவர்களும் இந்த உலகம் நன்றாக இருக்க ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள் என்று.
அரசியல்வாதி: அடாடா, என்ன ஒரு சிந்தனை. ஒரு சந்நியாசியாக இருந்தும் இந்தமாதிரி கோணங்களில் அருமையாக அலசுகிறீர்கள். சரி, அப்போ நேரமாச்சு சாமி. நான் புறப்படறேன், என்னுடைய ஒரு பெண் தோழி எனக்கு வாட்ஸாப்பில் மெசேஜ் வைத்திருக்கிறாள். அவளுக்கு ஏதோ அவசரமாக ஒரு அஞ்சு லட்சம் பணம் தேவைப் படுகிறதாம். இப்போதே சென்று அவள் தேவையைப் பூர்த்தி செய்தால்தான் என்னுடைய சில சேவைகளையும் நான் செய்யமுடியும். நான் இன்னொருமுறை உங்களை சந்திக்கிறேன்.
சந்நியாசி: அப்போ என்னுடைய குருதக்ஷிணை?
அரசியல்வாதி: இந்தாங்க, இப்போ கையில பணம் எண்பத்திரெண்டு ரூபாய்தான் இருக்கிறது. ஏற்கெனவே உங்களிடம் ஐநூற்று பதினெட்டு ரூபாய் இருக்கிறது என்றீர்கள். இப்போ மொத்தம் உங்களிடம் அறுநூறு ரூபாய் இருக்கிறது. இதை வச்சிண்டு நீங்க ஒருமாசம் வரை தாராளமாக ஒட்டிவிடுவீர்கள். உங்களுக்கு பேங்க் அக்கௌன்ட் இருந்திருந்தா ஆயிரம் ரூபாய் போன்பேய்ப் பண்ணியிருப்பேன்.
சந்நியாசி: உங்கப் பேய்ப் பணம் எனக்குத் தேவையில்லை. எப்போதும் குறைந்தது அஞ்சாயிரம் ரூபாய் தரும் நீங்கள் எண்பத்திரெண்டு ரூபாய் தருகிறேன் எனும்போது என் உடம்பெல்லாம் கூசுது. உள்ளமெல்லாம்
உதறுது. போங்க , போங்க , போய் உங்க ஆடிட்டரை என்னிடம் உடனடியாக அனுப்பி வையுங்க.

(அரசியல்வாதி ஆடிட்டருக்கு ஐந்தாயிரம் போன்பேய் செய்துவிட்டு, சந்நியாசியைப் பார்க்கவேண்டாம் என்று போனில் மெசேஜ் வைத்துவிட்டு,
அவரது ஐந்து லட்சம் தோழியைத்தேடி விரைகிறார்.)

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Jan-23, 9:23 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 68

மேலே