குழந்தைப்பிழை - 1

ஒரு பறவை தோளில் ஏறிவிட்டு
உன்னையே சுற்றிவர
ஆசையாய் இருக்கு.

கோலமிடும் அழகியலில் இருந்து
கோப முற்றத்தின்
மேற்கத்திய பனிப்படர்வுவரை
உனக்குள் தான்
எத்தனை காலநிலை பார்க்கிறேன்.

உன் சின்னஞ்சிறு
உதடுகள் குவிகிற போதெல்லாம்
உன் மூக்கு நுனியும் சேர்ந்தே குவிகிறது
இதெல்லாம்‌
முத்தமிடத்தானோ என்று நெருங்குகிறேன்
முத்தமிடுவதாகச் சொல்லி
ஏமாற்றுவதில்
சரிக்குச் சமமான
எதிரி தேடிக் கொண்டிருக்கிறேன்
வா கூட்டு சேர்ந்துகொள்.
குப்புறப் படுத்துக்கிடக்கும்
என் பின்னாலேறி
இடைஞ்சல் செய்வதாக நினைத்து
உன் கைகளால்
என் கண்களில்
தாளிட்டுக் கொள்ளாதே
உன் இரசியம் தேடும் என் காதுகள்
நீண்டுக்கொண்டே போகின்றன ..

விளக்கு சுற்றி விழுந்துகிடக்கும்
சலபம் போல
அதுத் துவழ்கிறேன்
என்னை உடுத்தியிருக்கும்
வரட்டுக் குப்பாயத்துக்கு
வாசனாதி தெளிக்கிறேன்.

உன் சிரிப்பின் காற்று உரசி
கொஞ்சம் மெல்லமாகட்டுமே என்றுதான்
அலைகளுக்குள் நின்றுவிட்டு
கைக்கூப்பி அழைக்கிறேன்.

அலைத்தொடும்
தூரம்வரை வந்துவிட்டு
அகப்படாமல் ஓடுகின்றன
உன் கால்கள்.
அதைக்காணும்
என் எண்ண அலைகள்
முறைக்கு முறை
தொடர முயன்றுத் தோற்கின்றன..

உன்னிடம்
மனதை இடரவிட்ட
கோழை ஆண்மைக்குள்
குழந்தைப் பிழைபோல நுழைந்துவிட்டாய்.
இப்போதெல்லாம்
பெரிய பைய்யன் போல
நடிக்கக்கூட முடியவில்லை எனக்கு.

பூக்காரன் கவிதைகள் - பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (6-Jan-23, 1:52 am)
பார்வை : 63

மேலே