நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரங் கிடையகத்து இல்லாகும் – நாலடியார் 360
நேரிசை வெண்பா
நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத்(து) இல்லாகும்; - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்கல் அன்னார் உடைத்து 360
- கயமை, நாலடியார்
பொருளுரை:
நீரினுள் தோன்றி மேலே நிறம் பசுமையுடையதாய் இருந்தாலும் நெட்டியின் உள்ளே ஈரம் இல்லையாம்; அதுபோல, நிறைந்த பெரிய செல்வ நிலையில் நின்றாலும், பாறையாகிய பெரிய கல்லைப் போல் வன்மையான உள்ளம் படைத்த கயவரை உடைத்து இவ்வுலகம்.
(கருத்து: கயவர்க்கு ஈர உள்ளம் இல்லை.
விளக்கம்:
நீர் செல்வத்துக்கும், பசுமை கவர்ச்சியாகிய தோற்றப் பொலிவுக்கும், ஈரம் இரக்கத்துக்குங் கொள்ளப்படும்;
ஓரும்: அசை.எதுகை நோக்கி நிறைப்பெருமென ஒற்றுமிக்கது.
பாறைபட்ட உள்ள முடையார் என்றற்கு,‘அறைப்பெருங்கல் அன்னார்' என்றார்.
படிமம் வகுத்தற்கும், இருத்தல் கிடத்தல் முதலியவற்றிற்குங் கூடப் பயன்படுதலில்லாத அறுப்புக்களை யுடைய பெருங்கல் அறையெனப்படுமாகலின், யாதும் பயன்படாமை கருதிற்றுஇவ்வுவமம். இதனினும் சிறந்த கல்லென்பது இதனாற் பெறப்பட்டது.