87 சேயர் முன் தீமைசெய் பெற்றோர் தீப்பகை - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 4
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
தீதுநன் றறிகிலாச் சேய ரென்செய்வார்
கோதற அவரைநன் னெறியிற் கூட்டிடா(து)
ஏதங்க ளவர்முன்செய் திழிவைக் கற்பிக்குந்
தாதைதாய் புதல்வர்க்குச் சத்து ருக்களே. 4
- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
தீமையும் நன்மையும் தாமாகத் தெரிந்து கொள்ளும் தன்மையில்லாத பிள்ளைகள் என்ன செய்வார்கள்? குற்றங்கள் செய்வதிலிருந்து விலக்கி அவர்களைத் தாய் தந்தையர் நல்வழிப் படுத்தாமல், அவர்கள் முன் குற்றமானவற்றைச் செய்து இழிவையே கற்பிக்கும் தந்தையும், தாயும் பிள்ளைகளுக்குப் பகைவர்களே ஆகும்” என்று பிள்ளைகள் முன் தாய் தந்தையர் தவறான செயல்களைச் செய்யக் கூடாது என்கிறார் இப்பாடலாசிரியர்.
சேயர் - மக்கள். கோது - குற்றம்.