86 கல்லா மக்கள் காலனை ஒப்பர் - மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும் 3

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

மாலினால் இருவரும் மருவி மாசிலாப்
பாலனைப் பயந்தபின் படிப்பி யாதுயர்
தாலமேற் செல்வமா வளர்த்தல் தங்கட்கோர்
காலனை வளர்க்கின்ற காட்சி போலுமே. 3

- மக்களை வளர்த்தலும் படிப்பித்தலும், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”தாய் தந்தையர் இருவரும் அன்பினால் கூடி, குற்றமில்லாத பிள்ளையைப் பெற்றபின் படிப்பிக்காமல் உயர்வான இவ்வுலகத்தில் செல்லமாக வளர்ப்பது தங்கள் உயிரைக் கொல்லும் கூற்றுவனை வளர்ப்பதைப் போன்றதாகும்” என்று படிப்பறிவில்லாத பிள்ளைகள் கூற்றுவனுக்கு ஒப்பானவர்கள் என்று கல்வியின் அவசியத்தை இப்பாடலாசிரியர் கூறுகிறார்.

குறிப்பு: கணவன், மனைவி இருவரும் அன்பினால் கூடி, மாசிலாப்பிள்ளைகளைப் பெறத் திட்டமிடல் வேண்டும் என்கிறார்.

மால் - அன்பு. மருவல் - கூடல். பாலன் - பிள்ளை. தாலம் - உலகம். செல்வம் – செல்லம்,
காலன் - கூற்றுவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-23, 12:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே