272 பொன்னைப் புதைத்துப் புல்லன் மண் கொள்வான் – கடும்பற்று 1
கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
பொன்னினைப் புதைத்திடப் புவியைத் தோண்டுவோன்
தன்னிடந் தொட்டமண் தனையி ழுத்தலான்
உன்னுடை யதுநிதி உலக மேயிம்மண்
என்னுடை யதுவென இயம்ப லொக்குமே. 1
- கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
“வேண்டும் நற்செயலுக்குப் பொருள் தராமல் பேராசையோடு, அப் பொன்னைப் புதைக்க பூமியைத் தோண்டும் உலோபி தோண்டிய மண்ணைத் தன்பக்கம் இழுக்கின்றான். அப்பொழுது உலகைப் பார்த்து உலகமே! பொன் உன்னுடையது; இந்த மண்ணே என்னுடையது என்று சொல்வதற்கு ஒப்பாகும்” என்று பொன், பொருள் மீது பேராசை கூடாது என்கிறார் இப்பாடலாசிரியர்.
கடும்பற்று – பேராசை, இவறன்மை - உலோபம்.