273 பொன்னைப் புதைப்பார் வாயில் மண்ணே புதையும் – கடும்பற்று 2

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

பொன்னைமா நிலத்தில்யான் புதைக்கும் ஏல்வையின்
அன்னையே யனையபா ரருளி நோக்கிநற்
சொன்னமென் வாயிடைச் சொரியு முன்றன்வாய்க்(கு)
என்னையே யிடுவனென் றிசைத்திட் டாளரோ. 2

– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பொன்னை நிலத்திலுள்ள மண்ணுக்குள் நான் புதைக்கும் வேளையில், தாயைப் போனற நிலமகள் என்னைப் பார்த்து அருள்கூர்ந்து நன்றாகச் சொன்னாள். என்னிடம் பொன்னைச் சொரியும் உன் வாய்க்கு என்னையே இடுவேன் என்று கூறினாளோ” என்று இப்பாடலாசிரியர் கேட்கிறார்.

குறிப்பு: பொருளின் மேல் பேராசை கொண்டு, நற்காரியங்களுக்குச் செலவு செய்யாமல் சேர்த்து வைக்கும் பொன்னும், பொருளும் அவர்க்குப் பயனற்றுப் போகும் என்கிறார் இப்பாடலாசிரியர்.

ஏல்வை – தருணம், வேளை, நேரம்,
அருளி – அன்போடு, அருள் கூர்ந்து,
இசைத்திட்டாள்-கூறினாள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-23, 7:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

சிறந்த கட்டுரைகள்

மேலே