253 ஈந்தோர்க்கெலாம் கைக்கூலி ஏற்போன் பிள்ளை – கைக்கூலி 9

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக் கேயலான்
மற்றவர்க் கிலையெனன் மனுவின் நீதியாம்
குற்றமே விடநிதி கோடி பேர்கையிற்
பற்றுவோ னவர்க்கெலாம் பாலன் போலுமே. 9

- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பெற்றவர் கையிலுள்ள சம்பாதித்த பொருள் பிள்ளைகளுக்கே உரிமையன்றி மற்றவர்களுக்கு இல்லை என்பது மனு நீதியாகும்.

அதனால், பாவம் அதிகரித்துக் கொண்டே ஆகுமாறு கோடி பேரிடம் பொருள் ஏற்கின்ற கைக்கூலி பெறுபவன் அக் கோடிபேருக்கும் பிறந்தவன் போலாகும்” என்று கைக்கூலி பெறுபவன் தன் பிறப்பையே கேவலப்படுத்தியவன் ஆவான் என்கிறார் இப்பாடலாசிரியர்.

மனு - சட்டம் வகுக்கும் வேந்து. நீதி - முறைமை. குற்றம் - பாவம். நிதி - பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 7:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே