254 மானம் அழியாது தொண்டு செய்து வாழ்வதே மதிப்பு – கைக்கூலி 10
கலிநிலைத் துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
மண்ட லீகன்றன் தண்டனை நரகவ மானங்
கண்ட பேர்க்கெலாம் பயம்பெரும் பகையொடும் கவ்வை
பண்ட மிவ்வகை யீட்டலின் அனுதினம் பலரை
அண்டி மானமாத் தொண்டுசெய் துயிருயல் அழகே. 10
- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கைக்கூலி பெறுவதனால், இம்மையில் மன்னர் (அரசு) தரும் தண்டனை, இறப்பிற்குப் பின் நரகம் அடைதல், அவமானம், யாரைக் கண்டாலும் அகப்பட்டுக் கொள்வோமோ என்ற நடுக்கம், மற்றவரின் பகை, நீங்காத் துன்பம் நாளும் பெருகும்.
இத்தகைய இழிவுகளை எல்லாம் பொருட்படுத்தாது பொருள் ஈட்டுவதை விட, நீ அறிந்த பலரையும் அனுசரித்து, அவர்களைச் சார்ந்து மானம் அழியாது இயன்ற சேவை செய்து உயிர் வாழ்வது அழகாகும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
கைக்கூலி பெற்று வாழ்வது இம்மையிலும், மறுமையிலும் தீமை பயக்கும் என்றும், இயன்ற தொண்டு செய்து வாழ்வதே மதிப்புடையது என்றும் இப்பாடலாசிரியர் கூறுகிறார்.
மண்டலீகன் - மன்னன். கவ்வை - துன்பம்.