131 மணமகன் உடலுயிர் மனைவியின் உடைமை - கணவன் மனைவியர் இயல்பு 23
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் 5)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(1, 4 ஆம் சீர்களில் மோனை)
இந்த வுடலுளம் ஐம்பொறி
..இன்னுயிர் யாவும ணஞ்செயும்
அந்த நன்னாளில் இல்லவட்(கு)
..அன்போட ளித்தனன் யான்பொதுப்
பைந்தொ டியேயுனைச் சேர்ந்திடப்
..பாரிலெ னக்குடல் வேறிலை
சிந்தை புலன்களும் வேறிலை
..சீவனும் வேறிலை செல்வையே. 23
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”இந்த உடல், உள்ளம், ஐம்புலன்கள், எனது இனிய உயிர் அனைத்தும் நான் திருமணம் செய்த அந்த நல்ல நாளில் என் மனைவிக்கு அன்போடு அளித்து விட்டேன்.
அதனால், பொதுமகளே! உன்னைச் சேர இவ்வுலகில் எனக்கு வேறு உடல் இல்லை. உள்ளமும், புலன்களும், வாழ்க்கையும் வேறில்லை. நீ சென்றுவிடு” என்று கணவனின் உடலும், உயிரும் மனைவிக்கே உடைமை என்பதை இவ்வாசிரியர் உறுதிபட ஆண்களுக்கு நினைவுபடுத்துகிறார்.
சிந்தை - உள்ளம், சீவன் – சக்தி, வாழ்க்கை