132 நெடுவழித் துன்பமெல்லாம் அவர் புன்னகையால் நீங்கும் - கணவன் மனைவியர் இயல்பு 24
கலிவிருத்தம்
அந்தநாள் நடந்திலாத யானகன்ற நெடுவழி
எந்தவாறு சென்றதென்ன எனைவினவு சிலதிகேள்
பந்தவூர்தி யேறியே படர்ந்தனன் படர்ந்தநாள்
வந்தபீழை யாவுமன்பர் மந்தகாசந் தீர்ந்ததே. 24
- கணவன் மனைவியர் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நடக்க அறியாத யான் நீண்ட நெடுவழியை எப்படி நடந்தேனென்று என்னிடம் கேட்கும் தோழியே, கேள்!
காதல் என்ற உறவு வண்டியிலேறிச் சென்றேன். நடந்த பொழுது ஏற்பட்ட துன்பம் அனைத்தும் காதலரின் மகிழ்ச்சிப் புன்னகையால் நீங்கிற்று” என்று தோழியிடம் தலைவி தெரிவிப்பதாகவும், மனைவியிடம் கணவன் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இப்பாடலாசிரியர் தெரிவிக்கிறார்.
சிலதி - தோழி. பந்தம் - காதல். ஊர்தி - வண்டி. படர்தல் - நடத்தல். பீழை - துன்பம். மந்தகாசம் – மகிழ்ச்சிப் புன்னகை.