496 விற்றதை மீட்டும் விலைமாதர் விற்பர் – கணிகையரியல்பு 23
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
பகருவங்கம் பலசரக்குத் தரகுசெல வாள்க’ள்’முதற்
..பணங்கூட் டின்றி
யகனிதம்பச் சரக்கொன்றைப் பலருக்குந் தினந்தினம்விற்
..றரும்பொன் வாங்கிப்
புகலுமிந்தச் சரக்குங்கை நீங்காது வணிகஞ்செய்
..பொதுமின் னார்போல்
சகமதனிற் பேரறிவி னோடுவாணி பஞ்செய்யும்
..சமர்த்த ருண்டோ. 23
– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
வணிகத்துக்கு வேண்டுவ கப்பல், பொருள்கள், பல்பண்டம், தரகாள், கைமுதல், பங்காளர் முதலிய பலவாம்.
விலைமகளிர் செய்யும் உடல்வணிகத்துக்கு வேண்டுவது உடல் ஒன்றேயாம்.
வணிகர்கள் விற்ற சரக்கை வாங்குவார்க்கே உரித்தாக்கிவிடுவர்.
பொதுமகளோ விற்ற உடலையும் தமக்கே உரித்தாக்கித் தம்பாலே வைத்துக் கொள்வர்.
ஆயின், பொதுமகள்போல் திறம் பெற வணிகஞ் செய்யும் தன்மையர் எவருளர்?
வங்கம்-கப்பல்.