133 அருவ ஒப்புக்கு அழுதவள் உருவப் பெண் பெயர்க்கு உயிர்விடும் - கணவன் மனைவியர் இயல்பு 25

தரவு கொச்சகக் கலிப்பா

திருவனா யெனப்புகழ்ந்து தேவியை விளிக்கமா
மருமலர் துறந்துநெஞ்சின் வாழ்ந்ததென்னென் றழுதனள்
அருவமாதை யொப்புரைக்க வழுதுவாடு நங்கையாம்
உருவமாதர் பெயருரைக்கி னுயிர்துறப்பள் நெஞ்சமே. 25

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அழகில் நீ திருமகளாகிய இலக்குமிக்கு ஒப்பாவாய் எனப் புகழ்ந்து மனைவியை அழைத்தேன். செந்தாமரையை விட்டுத் திருமகள் உம்முடைய நெஞ்சில் வாழ்ந்தது எப்படி என்று மனைவி அழுதாள்.

அருவ மாதராகிய இலக்குமிக்கு ஒப்பாவாய் என்ற சொல்லையே பொறுக்காது அழுது வாடும் நங்கையாம் என் மனைவி உருவுடைய பிற பெண் பெயரை நான் சொன்னால் அவள் உயிரைத் துறப்பாள், நெஞ்சே!” என்றும், மனத்தாலும் சொல்லாலும் பிற பெண்களை நினைப்பதும், பெயர் சொல்வதும் கணவனுக்கு அழகல்ல என்று இப்பாடலாசிரியர் சொல்கிறார்.

திரு - திருமகள் (இலக்குமி). தேவி - மனைவி. விளிக்க - அழைக்க. மா - திருமகள். மலர் - தாமரை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-23, 6:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 7

சிறந்த கட்டுரைகள்

மேலே