98 கல்லாப்பெண் நன்னெறி காண முடியாது – மாதரைப் படிப்பித்தல் 5

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

முடவரே நடக்கினும் மூங்கை பேசினும்
திடமொடந் தகர்வழி தெரிந்து செல்லினும்
மடமயி லனையர்நூல் வாசி யாரெனில்
அடமில்நன் னெறிதெரிந் தமையற் பாலரோ. 5

– மாதரைப் படிப்பித்தல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”கால் ஊனமுற்றவர் நடப்பதும், ஊமை பேசுவதும், கண்பார்வை இல்லாதவர் மனஉறுதியோடு வழி தெரிந்து செல்வதும் ஒரு வேளை நிகழலாம்.

ஆனால், அழகிய மென்மையான மயில் போன்ற பெண்கள் நூல்கள் வாசித்து கல்வியறிவு பெறவில்லையென்றால் குற்றங்குறைகளில்லாத நல்ல நெறிமுறைகளைத் தெரிந்து நடக்க இயலுமா!” என்று கேட்டு, கல்வி கற்காத பெண்கள் நல்ல நெறிமுறைகளைத் தெரிந்து கொள்ள முடியாது என்கிறார் இப்பாடலாசிரியர்.

மூங்கை - ஊமை. அந்தகர் - குருடர். மடம் – அறியாமை, மென்மை, அழகு, அடம் - குற்றம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-23, 11:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

மேலே