501 பொதுமகள் புணர்வு பொன்னால் ஆகும் – கணிகையரியல்பு 28

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

அந்தமுளா ளுரிமையாக வத்தமுளார் வாலியாவ
..வன்பின் றோன்றி
வந்தவனா னாயினேனே மூவரிலோ ரரியரியின்
..மகனை யன்னாள்
பந்தமுறச் செய்தனனம் மிருவரையார் சேர்த்துவைப்பார்
..பாவா யென்றேன்
ஐந்துவுலோ கங்களுளோ ரரிநமையோ ரரிசேர்க்கும்
..அறிநீ என்றாள். 28

– கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

அழகுள்ளவள் (சுக்கிரீவன்) மனைவியாகவும், பொருள் உள்ளவர்கள் அவளை மனைவியாகக் கைப்பற்றும் வாலியாகவும், யான் மனைவி வேண்டும் சுக்கிரீவனாகவும் உள்ளேன். முக்கடவுளருள் ஒருவனாகிய திருமால் சுக்கிரீவனை அவன் மனைவியுடன் சேர்த்து வைத்தான். நம்மிருவரையும் இணக்கி வைப்பவர் யாவர்? பாவையே! சொல் என்றேன். சுரங்கத்தெடுக்கும் ஐவகை முதற் பொருள்களுள் ஒன்றாகிய பொன் நம் இருவரையும் ஒரு அமளியில் சேர்த்துவைக்கும் நீ அறி என்றாள்.

அந்தம் - அழகு. உரிமை - மனைவி. அத்தம் - பொன். அரி - திருமால். அரியின் மகன் - சுக்கிரீவன்.
பந்தம் - இணைப்பு. அரி - பொன். அரி - கட்டில்; அமளி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-23, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே