500 பொதுமகட்குக் கடவுள் பொன்னவனே யாவன் – கணிகையரியல்பு 27
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
விதிமுதன்மூ வரிலெவரும் கடவுளெனச் சிற்றிடையை
..வினவப் பூவாழ்
எதிரில்த மனியனென்றா ளரன்கோயிற் றாசியுனக்
..கியல்போ வென்றேன்
நிதியுடன்மைந் தரைப்படைத்தன் னாரதையென் காலி’ல்’வைத்து
..நிதமும் வீழ
மதிபடைத்துத் தமனியப்பேர் தான்படைத்த விதிக்கிணையார்
..மகிப வென்றாள். 27
– கணிகையரியல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
நுண்ணிடையாய்! படைப்போன் காப்போன் துடைப்போன் ஆகிய அயன் அரி அரன் என்னும் மூவருள் நீ வழிபடுங் கடவுள் யாவர் என்றேன்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் ஒப்பில்லாத படைப்போனாகிய பொன்னன் என்றாள். நீ அரன் கோவில் திருத்தொண்டு செய்யும் பணிப்பெண் ஆயிற்றே! நீ சொல்லுவது பொருந்துமோ? என்றேன்.
செல்வத்துடன் மக்களைப் படைத்து அம் மைந்தர் நாளும் அச் செல்வத்தை என் காலில் வைத்து வீழ்ந்து வணங்கும்படியான அறிவினையும் அவர்களுக்குப் படைத்துப் பொன் எனும் பேர் தனக்குப் படைத்துக்கொண்ட படைப்போனுக்கு இணையாக யாவரைச் சொல்லலாம் தலைவ என்றாள்.
விதி - படைப்போன். பூ - செந்தாமரை. எதிரில் - ஒப்பில்லாத. தமனியன் - பொன்னோன்.
தாசி - கோயிற் பணிப்பெண். தமனியம் - பொன். மகிப - தலைவ.