செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அன்னார் அவர்க்கு - நாலடியார் 374

நேரிசை வெண்பா

ஆணமில் நெஞ்சத் தணிநீலக் கண்ணார்க்குக்
காணமி லாதார் கடுவனையர்; - காணவே
செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
அக்காரம் அன்னார் அவர்க்கு 374

- பொதுமகளிர், நாலடியார்

பொருளுரை:

அன்பில்லாத உள்ளமும் அழகிய நீலமலர்போன்ற கண்களுமுடைய பொதுமகளிர்க்குப் பொருளில்லாதார் எத்துணை உயர்ந்தவராயினும் நஞ்சையொப்பத் தோன்றுவர்;

பலருங் காணச் செக்காட்டிப் பிழைப்பாரும் ஈட்டிய செல்வமுடையார் அவர்க்குச் சர்க்கரைபோல் விரும்பத்தக்கவராவர்.

கருத்து:

எந்நிலையினும் பொருளுடையாரையே விலைமகளிர் விரும்புவர்.

விளக்கம்:

அகமும் புறமும் தம்மியல்பில் மாறுபட்டு நிற்குங் கள்ளம் உணர்த்துவார், ‘ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்' என்றார்,

‘கடுவனையர்' என்றமையாற் பொருளின்மையே அவர்க்கு எடுப்பாய்த் தோன்றுதல் பெறப்பட்டது.

கொள்ளவென்றது, ஈண்டு உயிர்வாழலின் மேற்று; இதனால் காணமில்லாதார் எத்துணை உயர்ந்தவராயினும் எனமேல் உரைக்கப்பட்டது. பொதுமகளிர் அன்பு, பொருட்கே யன்றி அதுகொடுப்பார்க்கு அன்றென்பது பெறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-23, 3:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே