கொய்தளிர் அன்னார் விடுப்பர்தங் கையாற் றொழுது – நாலடியார் 373
நேரிசை வெண்பா
அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மால் ஆயினும் ஆகமன், - தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பர்தங் கையாற் றொழுது 373
- பொதுமகளிர், நாலடியார்
பொருளுரை:
அழகிய இடமகன்ற விண்ணுலகத்தின் தேவர்களால் வணங்கப்படுகின்ற சிவந்த தாமரைக் கண்களையுடைய திருமாலை ஒப்பவனாயினுமாக; கொடுக்கத்தக்க பொருள் தமது கையில் ஒன்றுமில்லாத ஆடவரை கொய்தற்குரிய இளந்தளிர் போன்ற மேனியையுடைய பொதுமகளிர் தம் கைகளால் வணங்கி விடை கொடுத்தனுப்பி விடுவர்.
கருத்து:
பொதுமகளிர் பொருளொன்றல்லது வேறு தகுதி கருதார்.
விளக்கம்:
‘மால்' என்றது பெருமையும், ‘செங்கண்' என்றதும் உருவும், ‘அமரர் தொழப்படு'மென்றது செல்வாக்கும் உணர்த்தின. உரு, திரு முதலியவற்றிற் சிறந்த ஆடவர்க்கு நல்லிலக்கணமாகத் திருமாலைக் கூறுதல் நூற்றுணிபாகலின் 1 ஈண்டுங் கூறினார்’
திருமாலாயினும் பொருளிலனேல் விடத்தக்கானென்னும் பொருட்டாகலின் மன் கழிவின்கண் வந்தது.
‘கொய் தளிர்' என்னும் அடை தளிரின் தகுதி கருதிற்று;
பொருளீட்டுதற்குரிய சிறந்த ஆடவனாகலானும் பொருளுண்டான காலத்து வருகவென விரும்புதலானும் பகைப்பதின்றி இனிதாக விடுத்தலின் ‘தொழுது விடுப்ப' ரென்றார்!