ஊழம்பு வீழா நிலத்து - பழமொழி நானூறு 265
நேரிசை வெண்பா
நனியஞ்சத் தக்க அவைவந்தால் தங்கண்
துனியஞ்சார் செய்வ துணர்வார் - பனியஞ்சி
வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட!
ஊழம்பு வீழா நிலத்து. 265
- பழமொழி நானூறு
பொருளுரை: பனியால் வரும் குளிருக்கஞ்சி ஆண்யானை பெண்யானையைத் தழுவுகின்ற மூங்கில்கள் நெருங்கியிருக்கின்ற மலை நாடனே! ஊழாற் செலுத்தப்படும் அம்புகள் குறிக்கிலக்கானவனைச் சென்று சேர்தலன்றி நிலத்தின் மேல் வீழ்தல் இல; மிகவும் அஞ்சத்தக்க அவ்வம்புகள் தம்மீது வந்தால் செய்கின்றதன் நன்மை தீமையை அறிவார் அவற்றால் தமக்கு உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சுதல் இலர்.
கருத்து:
நன்மை தீமையறிவார் ஊழான் வருந்துன்பத்திற்கு அஞ்சுதல் இலர்.
விளக்கம்:
ஊழ் குறியறிந்து எய்தலின் தவறுதல் இல்லையென்பார், 'நிலத்துவீழா' என்றார்.
அம்பாதல் ஒப்புமை நோக்கி நிலத்துவீழா என்றாரெனினும், சென்று சேராதொழிதல் இல்லையென்பது அதன் பொருள்,
'அஞ்சார்' என்றார், நன்மை தீமையறிவார் தாம் அஞ்சினும் அவை விடா என்பதனை அறிந்தும் அவையும் தம்மால் முன்பு செய்து கொள்ளப்பட்டனவே என்று அறிந்தும் அஞ்சுதலிலராகலின்.
'ஊழம்பு வீழா நிலத்து' என்பது பழமொழி.