May be இருக்கலாம்

உடைந்த ஆப்பாயிலில் மஞ்சள் கரு வெள்ளைக் கருவைத் தாண்டுவதுபோல் உன்னைக் காணும்போதெல்லாம் என் சோகக்கரு உடைகிறது

கமெண்டுகளைப் படித்துக்கொண்டே பாடல் கேட்கையில் வந்து விழுகிற நோட்டிபிகேஷன் போல அவ்வப்போது வருகின்றன உன் ஞாபகங்கள்

வேறொரு கடையில் மளிகை வாங்கிவிட்டு அடுத்த கடையைக் கடக்கையில் வருகிற நடுக்கம் போல
இருக்கிறது இந்த உணர்வு

துணிகளின்றிக் கொடியில் காயும் க்ளிப்புகள் போல் நீயில்லா நேரத்தில் மாறுகிறேன்

ஸ்பேனர் இல்லாமல் என் இதயத்தைக் கழற்றும்வரை தெரியாது நீ இயந்திரப் பொறியியல் படித்தவள் என்று

அமரர் ஊர்தி ஓட்டிக் கொண்டிருந்த என் வாழ்க்கை இன்று ஆம்புலன்ஸ் டிரைவராய் ஆனது உன்னால்தான்

இவற்றை எல்லாம் பார்க்கையில்
உனக்கும் எனக்கும் காதல்
"May be" இருக்கலாம்.

எழுதியவர் : திசை சங்கர் (2-Feb-23, 12:47 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 123

மேலே