நலம் விசாரித்தல்
கஞ்சிக்குத் தொட்டுக்க நேற்றுவைத்த
கருவாட்டுக் கறியைத் தருவாயா
நெஞ்சுக்குள் இறங்குகிற நொடியதில்
இஞ்சாத சுகத்தைத் தருவாயா
உள்ளுக்குள் வலிகள் வைத்து
வெளியே சிரித்திடச் செய்வாயா
கள்ளத்தை என்னுள் இல்லாது
அடியோடு அழித்திடச் செய்வாயா
வழுக்கை விழுந்தால் இளநீராய்
இனிக்கிற வித்தை சொல்வாயா
வழுக்கி விழுந்தால் வாழ்க்கையில்
எழுகிற சித்தைச் சொல்வாயா
இத்தனை கேட்டு உன்னைநான்
இனியொரு தொல்லை செய்யேனே
அத்தனே! நண்பன்நான் கேட்கிறேன்
இன்றுநீ உண்டாயா இல்லையா?