234 கள் களவு மயக்கம் காமம் தரும் – மது அருந்துவதன் விளைவு 9
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)
வறுமையால் களவு செய்வர்
..மையலாற் காமத் தாழ்வர்
குறுமைசேர் பகையி னால்வெங்
..கொலைசெய்வர் வசையி னோடுஞ்
சிறுமைதந் துயிரி ருந்துஞ்
..செத்தவ ராக்கி யிம்மை
மறுமையை யழிக்குங் கள்ளை
..மாந்தலெப் பயன்வேட் டம்மா. 9
– மது அருந்துவதன் விளைவு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கள்ளுண்பவர் தொடர்ந்து அருந்துவதால் தாங்கள் அடைந்த செல்வம், தொழிலில் கிடைக்கும் வருமானத்தை இழந்து வறுமை விரைவில் வந்து, மேலும் கள்ளுண்ண பொருளின்றி களவு செய்வர்.
அறிவிழந்து பெண்ணாசையால் மயக்கம் கொண்டு முறை தவறிப் பெண் சுகம் துய்ப்பர். குறுகிய மனப்பான்மையால் ஏற்பட்ட பகைமையினால் கொடுமையான கொலை செய்வர்.
கெட்ட பெயரோடும், இழிவோடும் உயிரிருந்தும் செத்தவராவர். அத்துடன் இந்த தீயபழக்கம் இப்பிறப்பில் பிறந்த பயனையும், மறுமைப் பயனையும் அழித்துவிடும்.
இத்தகைய தன்மையுடைய கள்ளை ஆவலுடன் அருந்துவது என்ன பயனை விரும்பி?” என்று களவு, மயக்கம், காமம் தரும் கள்ளை தவிர்க்கச் சொல்கிறார் இப்பாடலாசிரியர்.
மையல் - மயக்கம். குறுமை - சிறுமை.
மாந்தல் - குடித்தல். வேட்டு - விரும்பி.
குறிப்பு:
எத்தகைய குற்றங்கள் நிகழ்ந்தாலும் அரசுக்குக் கவலையில்லை; மதுபானம் குடிப்பவர்களும் பெருகவேண்டும்; அரசு வருமானமும் பெருக வேண்டும். அனைத்திற்கும் குறியீடு (Target) உண்டு.