235 கள்ளால் வரும் இழிவு வழிநடைப் பிணமாகும் – மது அருந்துவதன் விளைவு 10

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

நரிநாய் பறவை சூழவழி
..நடுவிற் கிடந்த சவமதனை
உரியா ரிலரென் றிடுகாட்டுக்(கு)
..உடன்கொண் டேகிக் கட்டையில்வைத்(து)
எரியா நின்றேன் பிணம்விழித்திஃ(து)
..இன்தேன் மயக்கென் றியம்பிமெய்கொள்
அரியை யவிக்கு முன்னமெழுந்(து)
..அயற்கட் கடையுட் புகுந்ததுவே. 10

– மது அருந்துவதன் விளைவு
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை

”கள்ளுண்டு உணர்வு மழுங்கிய நிலையில் நரி, நாய், மற்ற பறவைகள் சூழ கவனிப்பாரற்ற நடு வழியில் சவமாய்க் கிடந்த ஓருடலை உரியவரில்லாத அனாதைப் பிணமென்று இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று கட்டையில் வைத்து எரிக்க நின்றேன்.

பிணம் விழித்து ‘இது இனிய தேன் போன்ற கள்ளுண்ட மயக்கம்’ என்று சொல்லி, அவ்வுடலை வைத்து நாங்கள் தீயால் எரிப்பதற்கு முன் எழுந்து பக்கத்தில் உள்ள கள்ளுக் கடைக்குள் சென்றது” என்று கள் அருந்துவதால் உண்டாகும் இழிவை இப்பாடலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

அரி - தீ.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Feb-23, 9:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

சிறந்த கட்டுரைகள்

மேலே