102 கல்லாப்பெண் குடும்பத்தில் அழுத்தல் – மாதரைப் படிப்பித்தல் 9
கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
கலையு ணர்ந்தறி யாதவோர் கன்னியை
உலையு றுஞ்சமு சாரத்தின் உய்க்குதல்
நிலையு ணர்ந்தறல் நீந்தறி யான்றனை
அலைக டற்கண் அமிழ்த்தலை யொக்குமே. 9
– மாதரைப் படிப்பித்தல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
கல்வி அறிவு பெறாத ஒரு இளம் பெண்ணைத் துன்பமிக்க குடும்ப வாழ்வில் ஈடுபடுத்துவது, ஆறு குளம் போன்ற நீர்நிலைகளின் ஆழமறிந்து நீந்த அறியாதவனைக் அலைகள் பொருந்திய கடலினுள் மூழ்கச் செய்வதற்கு ஒப்பாகும்” என்று இப்பாடலாசிரியர் குடும்பப் பெண்களுக்கு கல்வி அவசியம் கூறுகிறார் இப்பாடலாசிரியர்.
உலைவு - துன்பம். அறல் - நீர்.