நயன்தாரா மினரல் வாட்டர்

குமரப்பன் குள்ளப்பன் என்று இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். குமரப்பனுக்கு கல்யாணம் ஆகி ஒருமாதம் ஆகிறது. குள்ளப்பனுக்கு கல்யாணம் ஆகாமல் முப்பது வருடம் ஆகிறது. குமரப்பன் ஒரு நாள் குள்ளப்பனை தன் வீட்டிற்கு விருந்து உண்ண அழைத்தான்.

குமரப்பன்: என் கல்யாணத்தின்போது நீ பாடிய ' எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' என்ற பாடலை நான் மட்டும் இல்லை என் மனைவி 'குமரிப்பெண்' கூட மிகவும் ரசித்து கேட்டாள்.

குள்ளப்பன்: உன் பெயர்க்கு ஏற்றமாதிரி 'குமரிப்பெண்' என்ற பெண்ணை வளைத்துபோட்டுகொண்டுவிட்டாய். எனக்கும் குறைந்தது ஒரு 'குள்ளச்சி ' பெண்ணையாவது பாருடா.

குமரப்பன்: நிச்சயம் குள்ளா. உனக்கு நிச்சயம் ஒரு குள்ளச்சி கிடைப்பாள் .
சரி நாளை சாயங்காலம் வீட்டுக்கு வந்துடு. டின்னர் முடிச்சிட்டு போகலாம்.

குள்ளப்பன்: வெறும் கையுடன் வரமுடியாது.

குமரப்பன்: அப்போ கைகளில் மருதாணி வர்ணம் இட்டுக்கொண்டு வா.

குள்ளப்பன்: ஏண்டா இப்படி கழுத்தை அருக்கிறே. உன் கல்யாணத்திற்குப்பின் இப்போது தான் முதன்முறையாக உன் வீட்டிற்கு வரப்போகிறேன். குமரிப்பெண்ணுக்கு பிடித்த ஏதாவது பொருள் இருந்தால் சொல்லு. நான் வாங்கி வருகிறேன்.

குமரப்பன்: அவளுக்கு நயாகரா நீர்வீழ்ச்சின்னா ரொம்ப பிடிக்கும். அந்த நீர்வீழ்ச்சிக்குப்போய் ஒரு நூறு லிட்டர் தண்ணீர் கொண்டுவந்தால் அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும், இங்கே ரெண்டு நாளுக்கு குடிக்கவும் நல்ல நீர்வீழ்ச்சி தண்ணி எங்களுக்கு கிடைக்கும்.

குள்ளப்பன்: கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல உனக்கு இந்த அளவுக்கு கொழுப்புன்னா போகப்போக எப்படி இருக்குமோ. சரி, நானே ஏதாவது பார்த்து வாங்கி வருகிறேன்.
அடுத்தநாள் மாலை குமரப்பன் குள்ளப்பன் வருகைக்காக காத்திருந்தான். வீட்டிற்குள் கூப்பிடும் மணியோசை கேட்டு குமரப்பன் ஆர்வத்துடன் சென்று கதவைத்திறந்தான். அவனுக்கு ஒரே ஆச்சரியம். குள்ளப்பனுடன இன்னொரு குள்ளனும் உள்ளே நுழைந்தான். அந்த குள்ளன் எதோ பெரிய வண்ணமான அட்டைப்பெட்டியை தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். நுழைந்த குள்ளன் குள்ளப்பனைவிட இன்னும் குள்ளமாக இருந்ததால், அந்த இரண்டாவது குள்ளன் அட்டைப்பெட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்ததைக்கூட குமரப்பனால் உன்னிப்பாக பார்க்கமுடியவில்லை. அந்த குள்ளன் குள்ளப்பனைவிட மிகவும் வேகமாக இருந்தான்.

குமரப்பன்: வாப்பா குள்ளப்பா. இப்போதுதான் குமரிப்பெண்ணிடம் உன்னைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். என்ன ஏதோ வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு பார்ஸல்கள் வாங்கி வந்திருக்கிறேன்.

குள்ளப்பன்: குமரப்பா. இந்த இரண்டு பார்ஸல்களில் ஒன்று உங்களுக்கு இன்னொன்று எனக்கு.

குமரப்பன்: அப்படி என்றால் அட்டைப்பெட்டி எனக்கு, குட்டிகுட்டை உனக்கு அப்படித்தானே?

குள்ளப்பன்: சரியாகசொன்னாய் குமரா. அட்டைப்பெட்டி உனக்கு பரிசு. அதைத் தூக்கிக்கொண்டு வந்த குட்டை எனக்குப் பரிசு.

குமரப்பன்: கொஞ்சம் விவரமாக சொல்லடா குள்ளப்பா.

குள்ளப்பன்: இவன் பெயர் இருளப்பன். கடந்த ஒருமாதமாக நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகிவருகிறோம். கல்யாணம் ஆன பின் நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத்தெரியாது. அதனால்தான் எனக்கு இன்னொரு நண்பனை தேர்ந்தெடுத்துக்கொண்டேன். போகப்போக தெரியும் இருளப்பன் சங்கதி.

குமரப்பன்: டேய் குள்ளப்பா, நீயும் நானும் இருபது ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அப்படி இருந்தும் உனக்கு என்மேல் எதற்கு சந்தேகம்?

குள்ளப்பன்: அப்படி இல்லடா குமரா. ஏதோ என் மனசுக்கு தோணிச்சு. அதனால் தான். எனக்கு இன்னொரு நண்பன் இருப்பதில் ஒன்றும் தப்பு இல்லைதானே?

குமரப்பன்: அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை குள்ளம். ஆமாம் அருளப்பன் பொருளப்பன் படிஅளப்பன் இப்படி பல நல்ல அப்பன்கள் இருக்கும்போது அவன் ஏன் இருளப்பன் என்று பேர் வைத்துக்கொண்டிருக்கிறான்?

குள்ளப்பன்: இதை நானும் அவனிடம் கேட்டேன். அதற்கு அவன் சொன்னான் "இந்தப் பெயரை எனக்கு நானே வைத்துக்கொள்ளவில்லை. நான் பிறந்தவுடன் என் முகம் இருள் சூழ்ந்து இருந்ததனால் இருளப்பன் என்று எனக்கு பெயர் வைத்துவிட்டார்கள். ஆனால் பேர் வைத்தபிறகுதான் நான் பிறந்தபோது பவர் கட் ஆகி ஹாஸ்பிடல் முழுவதும் இருள் படர்ந்திருந்தது தெரியவந்ததாம். அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் பவர் வந்துவிட்டதாம். ஆனால் என் பெயர் மட்டும் இருளப்பன் என்றே வைக்கப்பட்டுவிட்டது."

குமரப்பன்: இப்போது புரிந்தது. அதனால்தான் என்னவோ இவனுடைய முகம் கூட கொஞ்சம் இருள் சூழ்ந்தமாதிரி இருக்கிறது. சரி, அதை விடு, பெயரில் ஒன்றும் இல்லை. மனிதன் எப்படி பழகுகிறான் அதுதான் முக்கியம்.

குமரிப்பெண்: வாங்க குள்ளப்பன், ஏதோ எங்களுக்குப் பெரிய பரிசு வாங்கி வந்திருப்பீங்க என்று இருளப்பன் துணையோடு ஆசையோடு பெட்டியைத்திறந்தால், உள்ளே 25 லிட்டர் நயன்தாரா மினரல் வாட்டர்தான் இருக்கிறது.

குள்ளப்பன்: சாரி மேடம். நீங்க கேட்ட நயாகரா நீர்வீழ்ச்சி தண்ணீர் என்னால் பிடித்துக்கொண்டு வரமுடியவில்லை. ஏதோ என்னால் முடிந்தது நயன்தாரா மினரல் வாட்டர். இதையே நயாகரா நீர்வீழ்ச்சி தண்ணியாக நினைத்து குடிச்சுக்கோங்க இல்லை குளிச்சிக்கோங்க.

குமரிப்பெண் (வாய் விட்டு சிரித்தபடி): உங்களுக்கு மிகவும் நல்ல ஹால்ஸ்ய உணர்வு குள்ளப்பரே. எங்களது பரிசை மிகவும் பெரிதாகவும் அதே நேரத்தில் மிகவும் குறைந்தவிலையிலும் வாங்கி வந்துவிட்டீர்கள்.

குள்ளப்பன்: இரண்டு நாள் கழித்து இருளப்பன் உங்கள் வீட்டிற்கு வருவான்.

குமரிப்பெண்: ஐயோ, போதும்பா இந்த நயாகரா இல்லை.. இல்லை.. நயன்தாரா மினரல் வாட்டர்.

குள்ளப்பன்: அப்படி இல்லை மேடம். இந்த வாட்டர் கேனை கடையில் திருப்பி கொடுக்கவேண்டும். அதனால்தான் இருளப்பன் இரண்டு நாள் கழித்து வந்து இந்தக் கேனை உங்களிடமிருந்து வாங்கி கடையில் கொடுத்துவிடுவான். எனக்கும் கேன் டிபாசிட் 200 ரூபாய் திரும்பக்கிடைக்கும்.

சிறிது நேரத்தில் குமரிப்பெண் எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். இருளப்பன் அதை குடிக்கும்போது ரகசியமாக குள்ளப்பன் காதில் " என்ன தேநீர் ரொம்பவும் தண்ணீயா இருக்கு?". அப்படிச்சொன்னதை குமரப்பன் ஒட்டுகேட்டுவிட்டு சொன்னான் "குமரிப்பெண் குள்ளப்பன் தந்த பரிசினை தாராளமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டாள்" . அதைகேட்டுவிட்டு குள்ளப்பனும் இருளப்பனும் சமையல் அறையில் இருந்த குமரிப்பெண்ணும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கப்போகும் டின்னர் என்ன என்பதை நான் இப்போதே ரகசியமாக உங்கள் காதுகளில் சொல்கிறேன்.
1 நீர் தோசை
2 நீர் சோறு
3 நீர் மோரு
4 நீர் பாயசம்
5 இடையில் குடிக்க நயன்தாரா நீர்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (12-Feb-23, 9:25 pm)
பார்வை : 79

சிறந்த நகைச்சுவைகள்

மேலே