281 ஏழைக்கு இடாமல் செல்வர்க்கு வழங்குதல் இழிவு – கடும்பற்று 10

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

மெலியும் ஏழைக் கிடாமல் விளைபொன்னை
மலியுஞ் செல்வர்க்கு வாரி வழங்குதல்
நலியி லார்க்கருள் நன்மருந் தும்பெரு(கு)
ஒலிக டற்பெய் யுறையையும் ஒக்குமே. 10

– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”செல்வம் உடையவர் பசியால் மெலிந்து வாடும் ஏழைகளுக்கு உண்ண ஏதும் தராமல் தனக்குப் பெருகும் செல்வத்தைப் பெரும் செல்வர்க்கே வாரி வழங்குவது, நோய்த் துன்பம் இல்லாதவர்க்கு நல்ல மருந்து கொடுப்பதற்கும், ஒலிக்கின்ற கடலில் பெய்யும் மழைக்கும் ஒப்பாகும்” என்று ஏழை களுக்கு உதவுவதன் அவசியத்தை இப்பாட லாசிரியர் எடுத்துரைக்கிறார்.

விளை - (நலம்) தரும், பெருகும்.
மலியும் - பெருகும். நலி - துன்பம்; நோய்.
உறை - மழை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Feb-23, 7:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே