581 எல்லாமாம் இறைவனை இடைவிடாது ஏத்து - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 39
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
குருவிறை சீட னாநங்
..கோனவன் குடிநா மன்னான்
ஒருபிதா நாஞ்சே யாண்டா
..னுவன்வழித் தொண்ட னாமவ்
உருவிலா னுடையா னாமே
..உடைமையன் னவனே தாதா
மருவிர வலனா மென்ன
..மதிமதி மதியில் நெஞ்சே. 39
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
அறிவிலா மனமே! எல்லாம் வல்ல இறைவன் உறுதிமொழி மொழிந்து உய்விக்கும் நல்லாசான் ஆவான். நாம் வழிப்பட்டொழுகும் மாணாக்கர். ஆண்டவன் செங்கோலும் வெண்குடையும் ஒண்கழலும் வெள்வாளும் வாய்ந்த வேந்தன். அவன்பால் அன்பகலாக் குடிகள் நாம்.
எவ்வுயிர்க்கும் செவ்விய தந்தை அவன். நாம் அவனின் காதலஞ் செல்வப்பிள்ளைகள். அவன் ஆண்டான். நாம் அடிப்பணி புரியும் தொண்டர்.
பிழம்புஇல் பிழம்புஇல் உள் பிழம்பாகிய உருவம் அருவம் அருவுருவம் என்னும் மூன்றுங் கடந்த முழுமுதலுடையான் அவன். நாம் அவனுடைமையாகிய அடிமை.
வேண்டத் தக்க தறிந்து வேண்ட முழுதும் தந்து காக்கும் வள்ளல் அவன். நாம் அவனால் வலியத் தந்தருளப்படும் பொருள்களைப் பெற்று வாழும் இரவலர். இவ்வுண்மையைக் கருதுவாயாக.
உருவிலான் - தோன்றி மறையும் மாயாவுருவிலாதவன்.
உடைமை - உயிரில் பொருள் ஆண்டவனின் உடைமை; உயிருள் பொருள் ஆண்டவனின் அடிமை,
உறுதிமொழி - உபதேசம்.