582 ஆண்டான் அடிபோற்ற ஆகும் பெருமகிழ்வு - தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 40
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
கற்பினார் கணவர் தம்மைக்
…காண்டொறுங் களித்தல் போலும்
பொற்புறு சிறார்தாய் கையிற்
…பொருந்துபு மகிழல் போலும்
அற்புத வுவகை யோடும்
…அடிகளை யடிகள் போற்றா(து)
உற்பவ வுவர்ப்போ டேத்தும்
…உள்ளத்தார் கள்ளத் தாரே. 40
- தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
சொற்காத்துச் சோர்விலாக் கற்பினள் தன் கணவனைக் காண்டொறும் பெருமகிழ்வு கொள்வாள்.
சிறுமகார் தவமிருந்து ஈன்றெடுத்துப் போற்றும் தாய் திருக்கையைச் சாருந்தோறும் இன்புறுவர்.
இவைகளைப் போன்று எல்லாமாம் அடிகளாகிய கடவுளின் திருவடிகளைப் போற்றி நல்லோர் இன்புறுவர்.
அவ்வாறு செய்யாது பொக்கமிக்கவராய் வெறுக்கத்தக்க தீய செயல்களைப் புரியும் பாவிகள் வெறுப்புள்ளத்தராய் வழிபடுவார். அவர் படிறு நிறைந்த கள்ளத்தராவர்.
பொருந்துபு - சாருந்தோறும். உவர்ப்பு - வெறுப்பு.