நிவேதினி

சிலப்பேரு கிட்டதான் நெருங்கி உரிமையோடப் பழகத் தோன்றும்
முதன் முதலில்
இவளிடம் தோன்றியது.

ஆனா தயக்கமா பயமா
மரியாதையா எதுவோ
தெரியவில்லை
என் மனம் என்னை
இவளிடம் அருக அனுமதிக்கவில்லை
தள்ளியே அகல நின்றுவிட்டேன்.

பார்த்ததும்
பக்கத்துவீட்டுப் பெண்
அடுத்தவீட்டுக் கவிதையென
உணர்வு தரும் இவள் முக பாவனை.
பிடித்துப் போனவர்களுக்கெல்லாம்
டைரியில்
இரகசியமாய் என
செல்லப் பெயர்
வைத்துவிடுவது
வழக்கமாகிவிட்டது

முதன் முதலில்
ஒரு செல்லப் பெயரிட்டு
அதை தைரியமாக
வெளிப்படையாக
தவறாக நினைச்சிடுவாளோ
என்கிற
தயக்கமேக்கூட இல்லாமல்
அவள் பதிவுகளில் சென்று
கூப்பிட்டுப் பார்த்தது
இவளையாகத்தான் இருக்கும்.
"நிவேதினி" என்று

யாரிடமும் தோன்றிடாத எதிர்ப்பார்ப்பு
இவள் யதார்த்த உலகின்
நண்பனாக இருந்துவிடக் கூடாதா
என்று.
எப்படித் தொடங்குவேன்
என்னை உன் நண்பனாக ஏற்றுக் கொள் என்றா ?
நிஜவாழ்க்கையில்
ஒன்றிப்போன முகங்களுக்காய்
ஒரு நாளும்
என் வார்த்தைகளை
ஒப்பனை செய்ததேயில்லை.
எதையும்
தன்முனைப்பில் உருவாக்கி
வசப்படுத்திவிடும்
மெனக்கெடுதல்களில்
நம்பிக்கையற்றிருக்கிறேன் நிவேதினி
நிகழ்தலும்
நிறைவேறுதலும்
அதன்படியாக
நிகழவேண்டிடும் மாற்றத்திற்கென
காத்திருக்கிறேன்

எதில் சந்தோஷித்திருக்கிறாய்
எதில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
உன் தேடல்கள் தான் என்ன

கனவிடுக்குகளின் வழியே
அடைப்பட்டக் கதவுகளின்
திடம்‌ உடைத்து
அடையக் காத்திருக்கும்
உன் லட்சியங்கள் தான் என்ன ?

பெரும் அரங்கமொன்றின் நடுவே
தலையாறி ஒருவனால்
உன் பெயர்
அறையடிக்கப்
பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஆசைகளின் இறப்பை
அருகில் வைத்துக் கொண்டு
அடிமை உடைக்கும்
சுதந்திர விரும்பி போல்
கனவுகள்
தேடல்கள் என
ஏராளம் வைத்திருக்கிறாய்
பூட்டப் பட்ட சங்கிலியின்
கனம்
புன்னகைக் கொண்டு மறைபடும்
தருணம்
உரக்கக் கத்த முடியாமல்
வட்டமிட்டுக் கறங்கும்
காகிதத் தத்தைப்போல
எதை எதையோ செய்துவிடுகிறாய்
அதெல்லாத்திலும்
நன்மைகளை மாத்திரமே
விளம்பிக் கொடுத்திருக்கிறாய்.

ஒரு புத்தகம் அச்சிடும் நேரத்திற்குள்
அதிவேகமாய் ஊற்றெடுத்து
நினைவு நதியில்
ஆக்கைப்படகாகி
தோள்களினால் துடுப்பாகி
ஒருவர் தொடங்கி
பலருக்குமாய் பயணப்பட்டிருந்தாய்

தனிமையின் ஆசுவாசங்களின்
பழக்கமில்லாதவளுக்கு
துணையென நினைக்கிறாளோ
என்னவோ
தன்னை அழகுப் படுத்திவிட்டு
இன்னபிறரையும்
ஒப்பனை செய்கிறாள்
பலநேரமும்
எனக்குள் கேள்வி எழுகிறது
சமைக்கிறாளா
சாப்பிடுகிறாளா என்று
கேட்கவும்
பயமாக இருக்கிறது
என்றோ ஒருவருக்கு
கருத்திட்டதைப்போல
பெண்களிடம்
நலம் விசாரிக்கலாம் தான்
ஆனால்
பதில் குதர்க்கமாக வந்துவிட்டால்

உனக்குப் பிடிக்காததை கேட்டு
செஞ்சு
அது உனக்குப் பிடிக்காம போய்ட்டா
இதுவரை
அதி மென்மையோடு
மரியாதையோடு
கட்டிவைத்த என் நட்பு
ஏதோ நினைத்து
உன்னை எறிச்சலூட்டிடும்
என் சிறு சிறு
செய்கைகளினால்
உனக்கு புரியாமல் போகிறதைவிட
மென்மையாய்
கடந்துவிடுவது மேல் தானே

இப்படி சொல்லிக் கொள்ளாமல்
மனதால் மட்டுமே அருகி
நேசித்து
பழகிட நெருங்காமல்
அகலே தள்ளிநின்றுப் பார்த்தே
பிரார்த்தித்துச் செல்லும்
ப்ரியமான நட்புகளில்
நீயுமொருத்தி ஆகிவிட்டாய்

இங்குக் கிடந்த இத்தனை நாளின்
இடைவெளியில்
என் பயணம் முடிந்து
போகக் காத்திருந்த விருந்துகாரனிடம்
என் பிறநதநாள்
பரிசெங்கே எனக் கேட்கிறாய்
காகிதத்தில் எழுதி
ராக்கெட் செய்து காற்றிலே
பறக்கவிட்ட நேரங்களில் எல்லாம்
கண்டுகொள்ளாமல்
விட்டுவிட்டாய்.
என் கவிதைகளோ
மழை நனைந்து போனது.
உனக்காக அனுப்பிய
என் உணர்வுக்குமிழிகள்
நீ கால் வைக்கும் வாசற் கதவினிடையே
அழிந்த மையின் அரூபங்களென
உயிரற்றுபோய்
மண்டிக் கிடக்கின்றன

நெருங்க எத்தனித்த என் நட்பை
ஆரம்பம் முதலே
எதற்காகத் தள்ளி நிறுத்தினாய்
என் மனதிற்குள் அதனால்
உன்னை என்றுமே
அருக முடியாதென மாதிரி
கனத்த சிறையொன்றையல்லவா
எழுப்பி வைத்திருக்கிறேன்

நான் உன்னை இழக்க வேண்டியா
நீ என் நட்பை இழந்தாய்

இனியொரு நெருங்கும்
நண்பனிடம்
இப்படிச் செய்யாதே
அகம் திறந்து வை

இந்த ஆப் மூலம் ஒப்பனை எல்லாம் செய்யாதே
இங்கு
மேல சொன்னதைப்போல
உன்னைப் பார்த்த முதல் நாளில்
தோன்றியது
பார்க்க பக்கத்துவீட்டுப் பெண்போல
இருக்கும்
பாங்கும் முகபாவனையும்
யதார்த்தமும் தான்
உன் உண்மை அழகு
அதுதான் உனக்குப் பொருந்தும் ம்

மேன்மேலும் மரியாதைக் கூடுகிறது

என் நட்பின் மரியாதையானவளுக்கு

உனக்கெனவே
ஒவ்வொரு செங்கலென
என் அகம் கட்டிக்காத்துவைத்த
நம் நட்புடைந்தநாள் வாழ்த்து

என் வாழ்நாளின் மொத்த ஆசியும்
பிரார்த்தனையும்
உனக்கு

நிறைய சாதிக்கணும் சரியா

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (26-Feb-23, 4:13 am)
பார்வை : 68

மேலே