மாமனே உன்னைத் தானே

சல சலத்து ஓடும் ஆற்றங்கரையின் ஓரத்திலே தன் துணிகளையெல்லாம் துவைத்துக்கொண்டிருக்கும் கலைவாணியின் சிந்தனைகளோ தன் செயலில் இல்லாமல் எதற்குள்ளோ சுழன்றவளாய் இருக்க அவளது கரங்களோ தன் வேலையை செய்துகொண்டிருந்தன. சுற்றியிருந்த தோழிகளின் கிண்டல் போச்சுக்களோ அவள் செவிகளில் விழுந்தும் விழாத நிலையிலும் முகத்திலே சிறு புன்னகையின் கீறல். ஆனால் உள்ளத்திலோ அத்தனை எண்ணச் சுவடுகளின் உலாக்கள். நாளைய பொழுதின் விடியல் அவளது வாழ்க்கையில் எப்படியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதனை அவள் எண்ணும் போதே கண்களின் ஓரத்திலே கண்ணீர் துளிகள் வழிந்தோடக் காத்திருக்க பெருமூச்சு விட்டவளாய் துவைத்த துணிகளை அள்ளிக்கொண்டு தோழிகளின் பட்டாளத்துடன் ஒத்தையடிப் பாதையால் தன் வீடு நோக்கி நடந்தாள் கலைவாணி.

நில்லாமல் சுழலும் எண்ணச் சுழற்சியைப் போல அழகாய் புலர்ந்தது காலைப்பொழுது. மேள, தாள சத்தங்களும் சிறுவர்களின் அமளிதுமளிகளும் குமரிகளின் சிரிப்பொலிகளும் அலங்கரித்து இருந்த அந்த வீட்டினை. ஆம், அது கலைவாணியின் வீடு. அவளுக்கு இன்று திருமணம். ஆனால் முகத்திலோ திருமணப் பெண்ணின் கலையைத்தான் கலைவாணியின் முகத்திலே காணமுடியவில்லை. அவள் ஆசைப்பட்ட மாமன் மௌனமாய் இருக்கிறான். எவ்வளவு போராடியும் அவன் அசைந்தபாடில்லை. ஓர் இரும்புக் கம்பியில் ரயில் வண்டி செல்லமுடியுமா? அதே போல் தான் இவளது காதலும். மாமன் மேல் கொள்ளைப் பிரியம் கொண்டவள் அவன் மனதைத்தான் இன்னும் கொள்ளையடிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாள். இவளின் தவிப்பையோ உணர வேண்டியவன் மனதை இரும்புக்கவசமிட்டு மூடிவைத்துள்ளான்.

உறவுகள் சுற்றி நிற்க ஐயரின் மந்திரங்கள் முழங்க 'பொண்ண அழச்சிட்டு வாங்க' என்ற குரலுக்கு மனமேடையில் அமர்ந்திட அடி வைத்து நடந்து வந்து கணத்த மனதுடன் அமர்கிறாள் கலைவாணி. இன்னொருவனின் கரங்களால் தாழி அணியும் நொடிக்கு சில நொடிகள் இருக்கும் போதே மண்டபத்தினுள்ளே சலசலப்புச் சத்தம் ஓங்கி ஒலிக்க அனைவரினதும் பார்வைகள் சத்தம் வருகின்ற திசை நோக்கி... அங்கே ஓர் ஆடவன் கர்பிணியான பொண்ணுடன் மணமேடை நோக்கி வந்துகொண்டிருக்க கலையின் குடும்பமோ அவனைத்த தடுக்க அனைவரையும் தள்ளிவிட்டு மணமகனை பிடித்திழுத்து அறைந்தான். சுற்றம் காரணங்கள் கேட்டபோதும் கோபம் தீரும் வரை அடித்தோய்ந்தான். யாரும் எதிர்பாரா நேரம் தாலியை எடுத்து கலையின் கழுத்திலிட்டு மூன்று முடிச்சிட்டான்.

அவனுடன் வந்த கர்ப்பிணிப் பெண்ணோ தன் நிலைக்கு மாப்பிள்ளையாய் இருப்பவன் தான் காரணம் என்று கூற சுற்றத்தின் கேள்விக் கணைகளினாலும் அவர்களது கேலிப்பேச்சுக்களாலும் தலைகுனிந்து நின்றான். கலையின் கழுத்தில் முடிச்சிட்ட கலையரசனோ அவன் கொண்டுவந்த தாழியை நீட்டி கட்டுமாறு கண்ணசைக்க அங்கே இன்னுமோர் திருமணம் அரங்கேறியது. இங்கு கலையின் கண்களோ தன் கழுத்தில் தொங்கும் தாலியியைக் கட்டிய தன் மாமனை விழியசையாமால் பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ளமோ கணத்த பாரத்தை இறக்கி வைத்தது போல் பாரமற்ற பஞ்சுபோல இருந்தது. அவள் ஆசைப்பபட்ட மாமன், எத்தனையோ போராடியும் அசையாமல் நின்றவன். தன்னை மறுத்ததற்காக காரணத்தை வெளிப்படுத்தாதவன் இன்று எப்படித் துணிந்து தன்னை ஏற்றான் என்ற கேள்வியும் நெஞ்சுக்குள்ளே எழுந்த வண்ணம்.

அவள் எண்ணம் அவனுக்கு புரிந்திருக்கும் போல...
கலையின் தந்தையை நோக்கி அவன் கால்கள் நகர்ந்து சென்றன. 'தனக்கு அவளை மணம்முடித்துத் தரக்கூடாது என்ற ஒற்றைக் காரணத்திற்காக எதுவுமே விசாரிக்காமல் இப்படிப்பட்ட ஒருவனையா தெரிவு செய்தீங்க. வசதி குறைவு என்டாலும் வாழ்க்கைய நடத்த துப்பில்லாதவன் இல்ல நான். மாமன் என்டு சுத்தி வந்தவளயும் தள்ளி நிறுத்தினதுக்கு காரணம் உங்கட இந்த குணத்தால தான். ஆனா இனி அவள விட்டுக்குடுக்கக் கூடாது, வாழத்துப்பில்லாதவன்டு நினைக்குற உங்களுக்கு முன்னுக்கு வாழ்ந்து காட்டனும் எங்குறதாலதான் அவள்ட கழுத்துல தாழிய கட்டினன். மாமன் மேல அவள் வெச்ச எல்லையில்லா காதலால தான் இன்டக்கி அவள்ட காதல் ஜெய்ச்சு இருக்கு...' என்று கூறிவிட்டு கலைவாணியின் கரங்களைப் பிடித்து தன் வீடு நோக்கி அழைத்துச் சென்றான் கலையரசன். கலைவாணியும் அவனின் இழுப்புக்கு நடந்து சென்றாள். அவளின் முகத்திலோ புன்னகை வீற்றிருக்க கண்களோ ஆனந்தக் கண்ணீரை சுரக்க மனமோ காதலில் ததும்ப தன் காதல் வாழ்க்கையை வாழ மாமனோடு செல்கிறாள்...

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (3-Mar-23, 11:10 am)
சேர்த்தது : அறூபா அஹ்லா
பார்வை : 111

மேலே