154 அக மென்மை மாதரை அருளொடும் காக்க - கணவன் மனைவியர் இயல்பு 46

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

மென்மை யாகும் விழிமுதல் யாவையும்
நன்மை யாவிட ரின்றிநன் கோம்பல்போல்
வன்மை யின்மட மாதர்கள் பாற்கொடுந்
தன்மை யின்றித் தயையுற வேண்டுமால். 46

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”மென்மையுடைய கண்கள் முதலிய உடல் உறுப்புகள் யாவையும் நாம், நலம் பொருந்த துன்பம் நேராமல் நல்லவிதமாகப் பாதுகாப்பது போல், உடல் வலிமை இல்லாத மென்மையும், அடக்கமும் உள்ள பெண்களிடம் கடுமையாக இல்லாமல் அன்புடனும், ஆதுரத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்” என்று உள்ளத்தில் மென்மையான குணமுள்ள பெண்களை ஆண்கள் அன்போடு காக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மென்மை - அறிவுப் பொறியாகிய இயற்கையான மென்மை. ஓம்பல் - பாதுகாத்தல். மடம் - அடக்கம். தயை - இரக்கம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-23, 7:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே