விசையுறு பந்தினைப் போல் நூலாசிரியர் கவிதாயினி குமாரி லெட்சுமி அணிந்துரை கவிஞர் இரா இரவி

விசையுறு பந்தினைப் போல்!
நூலாசிரியர் : கவிதாயினி குமாரி லெட்சுமி
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
*****

நூலாசிரியர் கவிதாயினி குமாரி லெட்சுமி அவர்களின் இரண்டாவது நூல் இது. முதல் நூல் “கனவு மெய்ப்பட வேண்டும்”. இந்த நூல் “விசையுறு பந்தினைப் போல்” பாரதியாரின் கவிதைகள் மீது ஈடுபாடு கொண்டுள்ள புரட்சிப்பெண், புதுமைப்பெண் என்பதால் அவரது வைர வரிகளையே நூல்களின் தலைப்பாக்கி வருகிறார், பாராட்டுகள்.

வேளாண் அலுவலராக பரபரப்பாக அரசுப்பணியாற்றிக் கொண்டே கவிதை எழுதும் இலக்கியப் பணியையும் இனிதே செய்து வருகிறார். இந்தப் பெண்ணின் வெற்றிக்கு காரணமாக பின்நிற்பவர் இவரது கணவர். தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கி ஊக்கப்படுத்தி வருகிறார். அவருக்கும் பாராட்டுகள்.

காலம்சென்ற முதுபெரும் எழுத்தாளர் கவிஞர் திருச்சி சந்தர் அவர்களின் வேடந்தாங்கலில் வளர்ந்த பறவை தான் இந்நூல் ஆசிரியர். கவிதையை நூலில் மட்டுமல்ல கவியரங்கங்களிலும் அருவி போல கவிதைகளைக் கொட்டக்கூடிய ஆற்றல் மிக்கவர், வாழ்த்துகள்.

பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு மேற்கோளாக காட்டுவது மகிழ்ச்சி.

உன்னை நம்பு

பாறை தகர்க்கும் சிறு உளியாகு – உன்
வெற்றி இலக்கை வகுத்துக்கொள்
பாதை மறைக்கும் தடைகள் உடைத்து
வாழ்வை ஜெயித்து வெற்றி கொள்.

தன்னம்பிக்கை விதை விதைக்கும் வண்ணம் வைர வரிகளால் கவிதைகள் வடித்துள்ளார். சிறிய உளி தான் பாறையை உடைத்து சிலையாக்கும். தடைகளைத் தகர்த்து வாழ்வில் வென்று சாதனை படைக்க வழி செய்துள்ளார். உந்து சக்தியாக மன உறுதி தரும் விதமாக உள்ளன.

நுனி நாக்கில்!

அளவோடு அளவளாவிக் கொள்ளுங்கள்
அது ஒரு விஷமி
பிளவுகள் பிரிவினைகள் எல்லாமே
நொடிப்பொழுதில்
நுனி நாக்கில் உருவாகும்!

நட்புக்குள் அளவாகப் பேசுவதே சிறப்பு. தேவையற்ற பயனற்ற சொற்களைப் பயன்படுத்துவது தவறு. அனாவசியமான பேச்சு, பிரிவினை, பிளவு உண்டாக்கும் என்று எச்சரிக்கை செய்யும் விதமாக வடித்த வரிகள் நன்று. ‘அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல, அளவிற்கு மிஞ்சிய பேச்சும் நஞ்சு தான்’ என நன்கு உணர்த்தி உள்ளார்.

உயிர்ப்புடன் வாழ்ந்து பார்!

‘வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும்
உயிர்ப்புடன் வாழ்ந்து பார்
அப்போதே வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்!’

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் குறிப்பிடுவார்கள், “இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்” என்று. அதுபோலத் தான் உயிர்ப்புடன் இருக்க வேண்டுமென்று கவிதைகளில் வல்யுறுத்தி உள்ளது சிறப்பு. சும்மா இருந்தால் இரும்பு கூட துருப்பிடித்து விடும். அதுபோல தான் மனிதன் சும்மா இருந்தால் சோம்பேறி ஆகி விடுவான். உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று சுறுசுறுப்பைப் போதித்து உள்ளார், பாராட்டுகள்.

புதுக்கவிதைகள் மட்டுமல்ல துளிப்பாக்கள் ஹைக்கூ கவிதைகளும் உள்ளன. பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.

பிழைக்கிறான் முதலாளி
உழைக்கிறான் தொழிலாளி
சமமில்லாத்துவம்”

சமத்துவம் இல்லை வேறுபாடுகள் உள்ளன என்பதை “சமமில்லாத்துவம்” புதிய சொல்லாட்சியுடன் உணர்த்தியது நன்று.

மனதுக்குள் புகுந்து
கண்களில் வந்தது
கருணை!

எளியோரைக் கண்டு இரங்கிட வேண்டும், உதவிட வேண்டும், மனிதாபிமானம் வேண்டும், கருணை வேண்டும் என்பதை குறைந்த சொற்களின் மூலம் விளக்கியது சிறப்பு.

மன ஈர்ப்பு விசை!

ஈர்ப்பு விசையால் இப்புவியே வாழ்க்கையில்
நீ மட்டும் ஏன் இணக்கமின்றி
யாதும் உன் ஊரே
உன் கேளிர் தான் யாவருமே!

சின்ன புன்னகைகள் சீர் செய்யும் நட்பை
முகமாறுதல்களில்
பலயுக மாற்றங்கள் நடக்கட்டும்.

சாதி, மத, ஏழை, பணக்காரன் வேறுபாடுகள் இன்றி சமத்துவமாக மனிதநேயத்துடன் இணக்கமாக வாழ வேண்டும். பிணக்குகள் வேண்டாம் என அறிவுறுத்தியது நனிநன்று.

சித்தம் போக்கு

வெள்ளை காகிதம் கண்டதும்
நிரப்பத் துடிக்கும் கவிமனது
நிரப்பிக் கிடக்கும் கவிதைகள்
மனம் விட்டு வரத் தயங்கும்

வெள்ளைக் காகிதம் கண்டதும் கவிதை எழுதிவிட வேண்டும் என்று கவிஞர்களுக்கு தோன்றுவது இயல்பு. எழுதத் தொடங்கியதும் உடனே வரிகள் வந்து விழுவதில்லை. சிந்தித்து எழுத வேண்டும் என்பதை உணர்ந்து எழுதி உள்ளார்.

படை போன்று படைப்புகள் செய்தும்
நடையில் மாற்றமில்லை
பேனா!

பேனாவிலிருந்து தான் உயர்ந்த கருத்துகள் எழுத்துக்களாக வந்து எழுதுகின்றோம். ஆனால் அதற்காக பேனா கர்வம் கொள்ளாமல் இயல்பான நடையிலேயே உள்ளது. நடை மாறவில்லை என குறியீடாக விளக்கியது சிறப்பு.

நூலின் உள்ளே சென்று படித்துப்பாருங்கள். கவித்துவமான சொல்வளங்களுடன் புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை விருந்து வைத்துள்ளார்கள். நூலாசிரியர் கவிதாயினி குமாரி லெட்சுமி அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டுமென வாழ்த்தி முடிக்கிறேன்.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (4-Mar-23, 12:51 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே