அருவி

அருவி

மலைமகளின் தலையினிலே பின்னிவிட்ட பின்னலிலே
முல்லைமலர் ஆரமென அருவியது அழகூட்டும்
தொலைதூரம் ஆறாகி அவைநடந்து செழிப்பூட்டும்
தாகத்தைத் தணிக்கின்ற அமுதாக சுவைகொடுக்கும்
இலைமரங்கள் தழைக்கவைத்து பசுமைஎனும் பாய்விரிக்கும்
இல்லாரும் உள்ளாரும் உயிர்வாழ மருந்தாகும்.
அலைமகளைத் தேடிஓடும் அதிசயந்தான் தண்ணீரும்
ஆர்ப்பரித்து மலையிருந்து கொட்டுவதால் அருவியாகும்.

தென்பொதிகை மலையினிலே அருவிபல துள்ளிவிழும்
தெம்மாங்கு இசையமைத்து இன்பமதைக் கொண்டுவரும்
குன்றாத குளுமையினைத் தன்னோடு கூட்டிவந்து
கொதிக்கின்ற உளத்தினுக்கு குளிர்ச்சிதனை ஊட்டிவிடும்!
தென்றலது தவழ்ந்துவரும் !கிளுகிளுப்பு கூடவரும் !
துள்ளாத மனந்தனையும் துள்ளிஎழ வைத்துவிடும்
வண்ணவண்ண மலரெல்லாம் அருவியிலே கலந்துவந்து
வாலிபத்தின் நரம்பினையும் முறுக்கேற வைத்துவிடும்.

வெண்தாடி வேந்தரைப்போல் வெள்ளருவி கொண்டதனால்
வேற்றுமையை வேரறுக்கும் வேலையதும் செய்கின்றாய்
விண்மேகம் கொட்டுகின்ற நீரதனை ஒன்றாக்கி
வெள்ளமென உருப்பெற்று வீரமுடன் விழுந்திடுவாய்
கண்கொள்ள காட்சியிதைக் கண்கொண்டு பார்த்தாலே
கவலையெல்லாம் தூசாகிக் காணாமல் ஓடிவிடும்
எண்ணமதில் எழுச்சிவரும் ! ஏற்றமதைக் கொண்டுதரும்
இதயத்தில் புதுஇரத்தம் இதம்பெற்று பாய்ந்துவிடும்.

உயரத்தில் பிறந்தாலும் தலைக்கனமே கொள்ளாமல்
உறவாட ஓடிவரும் மண்மகளை அதுதேடி !
தயங்காமல் தாவிவிழும் அருவியெனப் பெயரெடுத்து
தளர்ந்திருக்கும் உடலினுக்கும் உற்சாகம் தனைக்கொடுக்கும்.
பயமற்ற கன்றாகிப் பாய்ந்துவிழும் பேரழகால்
பரவசமே உள்ளமதில் பாய்ந்துவந்து ஒட்டிவிடும்!
மயக்கமெல்லாம் மாறிவிடும் மூலிகையும் கலப்பதனால்
மலைதந்த அருவியினை மனங்கொண்டு போற்றிடுவோம்,

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (5-Mar-23, 6:04 pm)
பார்வை : 123

மேலே