வெற்றி கொள்ளு

வாழ்வதற்காய் பிறந்தவனே ! வாழ்ந்து காட்டு
வெற்றிதரும் வழிகளைநீ வகையாய் தீட்டு !
ஊழ்வினைகள் என்பதனை ஒழித்துக் கட்டு
உயருகின்ற நிலைதன்னை வரவாய்க் கூட்டு !
பாழ்படுத்தி உனையழிக்கப் பாடு கொள்வார்
பதுங்கிவரும் நரிபோலும் கேடு செய்வார்
வீழ்ந்திடவே வழிகண்டு விழித்து நின்று
வேதனைகள் எதுவரினும் வெற்றி ஆக்கு !

ஆற்றுவெள்ளம் போலநீயும் விரைந்து சென்று
அநியாயம் எதுவெனினும் இழுத்துச் செல்லு
போற்றுகின்ற போலிகளைப் புரிந்து கொள்ளு
படுகுழிகள் பார்த்துநீயும் பாய்ந்து செல்லு
வேற்றுமையின் உணர்வுகொண்டு வீழ்த்த எண்ணும்
வீணர்தம் வினைமுடித்து வெற்றி கொள்ளு
நாற்றதுபோல் நீவளர்ந்து நன்மை செய்வாய்
நல்லவனாய் நடித்திடுவார் நாறிப் போவார்.

விண்தொட்டு நிற்கின்ற விருப்பம் கொண்டு
விழிப்போடு வினைஆற்றி வெற்றி கொள்ளு !
அண்டத்தை அழித்திடவே ஆர்ப்ப றிப்பார்
ஆணவத்தை வீழ்த்தியிங்கு வெற்றி கொள்ளு !
தண்தமிழின் தரந்தன்னைத் தாழ்த்த எண்ணும்
தறுதலைகள் யாவரையும் வென்று நில்லு
உண்ணுகின்ற உழவினுக்காய் உழைத்து வாழும்
உழவர்தம் ஏற்றமதை எண்ணி வாழு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (5-Mar-23, 6:09 pm)
Tanglish : vettri kollu
பார்வை : 67

மேலே