ஒரு வித்தியாசமான திருமண அழைப்பு

இன்று காலை என் பால்ய நண்பன் ஒருவன் என்னை அலைபேசியில் அழைத்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். நானும் அவனும் சென்னையில் பள்ளியிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இருவரும் பட்டம் பெற்றபின் தொழில் நிமித்தமாக சென்னையிலிருந்து இடம் பெயர்ந்தோம். அவன் சவூதி சென்றான். நான் வடஇந்தியா சென்றேன்.

அதன் பின்னர் தென்னாற்காடு மாவட்டம் நெய்வேலியில் நடந்த என் திருமணத்திற்கு அவன் வந்திருந்தான். நானும் குருவாயூர் கோவிலில் நடைபெற்ற அவனது திருமணத்திற்கு சென்று வந்தேன். கடந்த இருபத்திஐந்து வருடங்களில் நாங்கள் ஐந்து முறை சந்தித்திருக்கக்கூடும். தற்போது நான் கோவையில் வாசம் செய்கிறேன். அவன் பெங்களூரு வசம் இருக்கிறான்.

சரி, நீங்கள் கொஞ்சம் எரிச்சல் அடைகிறீர்கள் என்பது தெரிகிறது. சொல்லவந்ததைச் சொல்லாமல் சும்மா ஜவ்வு மாதிரி இழுக்கிறார் இந்த மனிதர் என்ற உங்களின் நேர்மையான ஆதங்கத்தை நான் ஆமோதிக்கிறேன்.
இன்று காலை என் நண்பன் பேசுகையில் அவனுடைய மகன் காதல் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறான் என்றும் கல்யாணம் இந்த மாதக் கடைசியில் சென்னையில் நடக்கவிருப்பதாக சொல்லிவிட்டு "என் மகன் என்னிடமே 'உங்களுக்கு என் திருமணத்திற்கு வந்து ஆசீர்வாதம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இருந்தால் திருமணத்திற்கு வரலாம். ஒருவேளை வரவில்லயென்றாலும் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை' என்று கூறியதகவும் சொன்னான்.
அவன் ஐம்பது வருடங்களுக்கு மேலாக என்னுடைய நண்பன் என்பதால் அவன் என்னை என் ஊருக்கு வந்து அழைப்பதுதான் முறை என்றான். பின்பு 'நான் வாட்ஸாப் மூலமாக பத்திரிகை அனுப்பிவைக்கிறேன். உனக்கு வரவேண்டும் என்று தோன்றினால், உன் உடல் நலம் நன்றாக இருந்தால், உனக்கு வேறு வேலைகள் எதுவும் அந்தநாளில் இல்லாமல் இருந்தால் என் மகன் கல்யாணத்திற்கு வர முயற்சி செய். ஆனால் நான் உன்னை வற்புறுத்தமாட்டேன்" என்றான்.
நான் உடனேயே அவனுக்கு பதில் கூறிவிட்டேன் "நீ இப்போது வைத்தது உன் மகன் திருமணத்திற்கு வரவேண்டும் என்ற அழைப்பு அல்ல மாறாக திருமணத்திற்கு வரவேண்டாம் என்று வைத்த அழைப்பேயாகும். என் நேரம் உழைப்பு பணம் இவற்றை எனக்கு சேமித்துக்கொடுத்ததற்கு நான் நன்றிதான் சொல்லவேண்டும். நான் இங்கே கோவையில் இருந்தபடியே அவர்களை வாழ்த்துகிறேன்."

இந்த கட்டுரை மூலமாக நான் பகிரவிரும்பும் விஷயங்கள் இரண்டு. ஒன்று என் நண்பன், அவன் மகனின் தயவில்தான் வாழ்ந்துவருகிறான். அறுபது வயதுவரை என் நண்பன் ஊழியம் செய்து சம்பாதித்த பணத்தில் பாதி குடும்பத்திற்கும் மீதியை ஊதாரித்தனமாக செலவுசெய்துவிட்டு தற்போது மகன் போட்டால்தான் சோறு என்கிற நிலையில் வாழ்ந்து வருகிறான். சில வருடங்களுக்கு முன்பு என்னிடம்கூட கணிசமான ஒரு தொகையை 'விரைவில் திரும்பத்தருகிறேன்' என்று பெற்றுக்கொண்டு இன்றுவரை அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறான். அவனுடைய குணம் பழக்கவழக்கங்களை நான் நன்கு அறிந்திருந்ததால் அவனிடம் பணத்தை மீண்டும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவன்கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாமல் அவன் விதி விளையாடுகிறது என்பது, அவன் எனது நண்பன் என்ற வகையில் எனக்கு கொஞ்சம் வருத்தத்தை அளிக்கிறது.

இரண்டாவதாக, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், கையில் தனக்கென்று ஒரு காசுகூட இல்லாத நிலையில், ஒருவர் மனம் எப்படி இருக்கும் என்பதைத்தான் என் நண்பனின் இன்றைய ' என் மகனின் திருமணத்திற்கு வரவேண்டா(டு)ம்' என்பதை பறைசாற்றும் அலைபேசி அழைப்பு மிகவும் தத்ரூபமாக விவரித்தது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Mar-23, 3:23 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 64

மேலே