உலகம் என்ற எலிப்பொறி

உலகம் என்ற எலிப்பொறி

உலகத்தில் நாம் பிறந்தவுடன் நம் அன்னை நம்மை நன்றாக கவனித்துக் கொண்டு அலங்காரம் செய்து உணவளித்து வேண்டியவைகள் யாவையும் நாம் கேட்காமலே செய்து கொடுத்து நம்மை ஆசையோடு வளர்க்கிறார். அப்படி வளரும் பொழுது பல நீதிக் கதைகளையும் அதில் தோன்றும் சந்தேகங்களையும் விளக்கி அது எவ்வாறு உலக வாழ்க்கையில் நமக்கு உதவும் என அறிவூட்டுகிறாள். நாம் வளர்த்து பெரியவனாகிப் படிக்கும் பொழுதும் அவள் நம்மை அவளது குழந்தையாகவே எண்ணி தவறுகளைச் சுட்டிக் காட்டி நல்வழிப்படுத்துகிறார். சில நேரங்களில் நமக்கு அது கோபத்தை வரவழைக்கிறது அவளைக் கடின வார்த்தைகள் உபயோகித்து நாம் கத்தினாலும் அவள் தன் கடமையைச் செவ்வனே செய்கிறாள். நாம் அவளிடம் இருந்து கேட்பவைகள் நல்லது தான் என்று நமக்குத் தெரிந்தாலும் சில நேரங்களில் நம் சுதந்திரம் பறி போகிறதோ என்ற எண்ணம் மேலிடுகிறது.அவள் பிடியில் இருந்து வெளியே சென்றால் நாம் நினைப்பது போல் வாழலாம் அது நல்லது என நம் மனது எண்ணி எண்ணி அது ஒரு நாள் வென்று அந்த எண்ணத்தை அவளிடம் ஒரு முறைக்குப் பல முறை கூறி ஒரு நாள் அவளிடம் இருந்து பிரிந்து வெளியூர் சென்று விடுகிறோம். அதன் பின் ஏற்படும் பல நிகழ்வுகள் அன்னையின் அன்பையும் அவள் நம்மைப் பாதுகாத்ததையும் நாம் அறிகிறோம். நாம் வெளியே சென்று வேலையில் அமர்ந்து நமக்கு பிடித்தவாறு வாழ்க்கை நடத்தி வாழும் பொழுது உலகமும் நம் நண்பர்களும் நம்மைச் சுற்றி வருகிறார்கள்.இவர்கள் நமக்கு ஒரு துன்பம் வரும் நேரம் எவ்வாறு நெருக்கம் இல்லாமல் விலகி நிற்கிறார்கள் என்பது அதை அனுபவிக்கும் பொழுது தான் தெரிகிறது.
இது தான் வாழ்க்கையின் மிகப் பெரிய பாடம். யார் யார் எப்படிப் பட்டவர்கள் என்பதை அறிந்தபின் நாம் உணருவது. அன்னையின் தன்னலமற்ற அந்த அன்பையும் அவர் நமக்கு கொடுக்கும் பாதுகாப்பையும் நாம் எவ்வளவு பெரியவனாலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. நாம் இதை உணர வேண்டுமானால் கீழே வரும் இந்தக் கதையை படிப்போம். இதில் உள்ளவைகள் யாவும் நமக்கு அன்றாடம் நடக்கிறது.அதை அறியாமல் நாம் மீண்டும் மீண்டும் செய்த தவறையே செய்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.
ஒரு எலி சுவரின் ஓட்டை வழியாகப் பார்த்தது. அது வாழும் வீட்டில் உள்ள விவசாயியும் அவர் மனைவியும் ஒரு பையில் எதையோ எடுத்துப் பார்ப்பதைப் கண்டதும் அது அதிர்ச்சி அடைந்தது. அவர்கள் பையில் இருந்து வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
பயந்துபோன எலி இந்த வீட்டில் என்னை பிடிக்க ஒரு எலிப்பொறி என கீச் கீச் என்று எலிப்பொறி என அங்குமிங்கும் கத்திக் கொண்டே ஓடியது.
தரையைக் கிளறிக் கொண்டிருந்த கோழி நிமிர்ந்து பார்த்து இது உனக்கு ஒரு மோசமான செய்திதான். ஆனால் எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை என்றது.
அருகில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று முயல்களும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனக்கென்ன என்பது போல் தலையைத் திருப்பிக் கொண்டன.
மிகவும் பயந்திருந்த எலி அங்கு கட்டிப் போடப்பட்டிருந்த ஆட்டிடம் இதைச் சொன்னபோது அந்த ஆடோ எனக்கும் இதைக் கேட்க கஷ்டமாகத்தான் இருக்கிறது...உனக்காக பிரார்த்திப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றது.
தன்னைக் காப்பாற்ற யாரும் இல்லை என்று விரக்தியின் உச்சத்திற்கே சென்ற எலி நடப்பது நடக்கட்டும், இந்த எலிப்பொறியின் ஆபத்தை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என நினைத்து வீட்டிற்குள் மறைந்தது.

அன்றிரவு, எலிப்பொறியின் சத்தம். கோழி, முயல்கள், ஆடு எல்லாம் மனதுக்குள் சந்தோஷமடைந்தன.

சத்தம் கேட்ட விவசாயியின் மனைவி ஓடிச்சென்று பார்த்தார். ஆனால் அதில் மாட்டியிருந்தது ஒரு விஷப்பாம்பு. இருட்டில் அதைக் கவனிக்காமல் அவர் தனது கையை கூண்டைத் திறக்க உள்ளே விட, பாம்பு அவரைக் கடித்து விட்டது. உடனே மருத்துவமனை சென்று வந்தார்கள்.

மனைவி பிழைத்துக் கொண்டார், ஆனால் சளியும், காய்ச்சலும் தொடர்ந்து இருந்ததால் விவசாயி பக்கத்து வீட்டுக்காரர் ஆலோசனைப்படி கோழியை அடித்து சூப் வைத்துக் கொடுத்தார்.

அவர் நிலையும் தேறவில்லை. அதனால் அவரைப் பார்க்க உறவினர்கள் வந்த வண்ணம் இருந்தனர். வந்தவர்கள் பழம், ரொட்டி எல்லாம் வாங்கி வந்தார்கள்.

விவசாயியோ அவர்களை உபசரிக்க முயல்களை ஒவ்வொன்றாக அடித்து சமைத்துப் போட்டார்.

கடைசியில் அவர் மனைவியின் உடல்நலம் பூரண குணம் அடைந்தது. மனைவி மீது கொள்ளைப் பிரியம் வைத்திருந்த அவர், அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அந்த ஊரையே விருந்துக்கு அழைத்து கிடா (ஆடு) வெட்டிக் கொண்டாடினார்.

இவ்வளவு களேபரத்துக்கும் நடுவில், எல்லாவற்றுக்கும் காரணமான, எல்லோரும் மறந்து போன அந்த எலி சுவரின் ஓட்டை வழியாக நடந்ததை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
அவ்வப்போது பசி எடுக்கையில், அறையில் வைத்திருந்த, விருந்தினர் கொண்டு வந்த பழம், ரொட்டியை எல்லாம் ஒரு கை பார்த்தது.

இந்தக் கதையில் உள்ள கோழி கோழியல்ல; முயல் முயலல்ல; ஆடு ஆடல்ல; எலி எலியுமல்ல. உலகத்தில் நாம் காணும் ஆசைகொள்ள வைக்கும் தற்காலிக சுகம் அளிக்கக் கூடிய எல்லா பொருள்களும் அதிசயங்களும் அவை தான் நமக்கு வைக்கப்பட்ட எலிப்பொறிகள்.நமது நண்பர்களும், சுற்றங்களும்,மற்றவர்களும் நாம் கதையில் பார்த்த பிற மிருகங்கள். எப்பொழுது நாம் வீழ்ச்சி அடைவோம் என்று குறி வைத்தே இந்த உறவுகள் இயங்குகின்றன.இந்த படிப்பு நம்மைப் படைத்தவன் நமக்கு கொடுக்கும் ஒரு பெரிய பரீட்சை.இதில் தேர்ச்சி அடைந்து வெற்றி பெற்றால் வாழ்க்கை சுகமாக இருக்கும் என்பது தான் நாம் கற்கும் பாடம்.

எழுதியவர் : கே என் ராம் (10-Mar-23, 6:55 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 78

மேலே