ஆளுக்கு ஐநூறு
அண்ணே ஐயாயிரம் பேரை அழைச்சிட்டு வந்து நம்ம கட்சியைத் துவக்கிட்டோம். அந்தச் செலவே இருபத்தெட்டு இலட்சம். கட்சியை எப்படி வளர்க்கிறதுன்னு தெரியலியே!
@@@@@@
அதைப் பத்திக் கவலைப்படாதட தம்பி. அநியாயமா சம்பாதிச்ச சொத்து கணக்கில்லாம கெடக்குது நம்மகிட்ட. ஒரு தொகுதிக்கு ஐநூறு உறுப்பினர்களை நம்ம கட்சில சேர்த்துப் போதும். தேர்தல் ஆணையம் நம்ம கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்திடும்.
@@@@@
சரிங்க அண்ணே. எப்படி தொகுதிக்கு ஐநூறு பேரைச் சேர்க்கிறது?
@@@@@@
நலத்திட்ட உதவி வழங்குகிறோம்னு விளம்பரம் செஞ்சா ஒவ்வொரு தொகுதியிலும் ஐம்பதாயிரம் பேருகூட வரூவாங்க. நாம வர்ற சனங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஐநூறு மதிப்புள்ள மளிகைப் பொருள்களை வழங்குவோம். அதை கொடுக்கிறதுக்கு முன்னாடி கட்சி உறுப்பினர் அட்டையில் அவுங்க பேரு, வயது, பாலினம், முகவரி, புகைப்படம் ஒட்டி அவுங்களோட கையொப்பம் வாங்கிடனும். உறுப்பினர் அடையாள அட்டையையும் கொடுத்திடனும். இது போல செய்தால் கண்டிப்பாக பத்து இலட்சம் பேராவது நம்ம கட்சி உறுப்பினர்கள் ஆகிடுவீங்க.
@@@@@@
சரிங்க அண்ணே, அந்தப் பத்து இலட்சம் பேரும் நமக்கே வாக்களிப்பாங்களா?
@@@@@@
டேய் தம்பி தேர்தலில் நின்னு செயிக்கிறது நம்ம நோக்கம் இல்லை. நம்ம ஆளுங்க ஒவ்வொரு தொகுதியிலும் நிப்பாங்க. பணம் கொழுத்த பெரிய கட்சி நம்ம கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையைப் பார்த்து பயந்து நம்மகிட்ட பேரம் பேச வருவாங்க. நாம எவ்வளவு கேட்கிறோமோ அதைக் கண்ணை மூடிட்டு கொடுத்திடுவாங்க. நம்ம வேட்பாளர்கள் பணம் கொடுத்த கட்சிக்கு ஆதரவாக விலகுவதா அறிவிப்பு கொடுப்போம். நாம் வசூல் செய்யற பேரத் தொகையில் இருந்து போட்டியில் இருந்து விலகிய நமது கட்சி வேட்பாளர் ஒவ்வொருத்தருக்கும் அவுங்க சந்தோசப்படற மாதிரி ஒரு தொகையைத் தர்றோம். இதைத்தான் நாம் ஒவ்வொரு தேர்தலிலும் செய்யப் போறோம்.
@@@@@@@@
அண்ணே, நீங்க அரசியல் ஞானி அண்ணே. ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணி பழம்பெரும் அரசியல் தலைவர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைச்சு உங்களுக்கு 'அரசியல் ஞானி'ங்கிற பட்டத்தை உங்களுக்கு வழங்கச் செய்யறேன். அதுக்கப்பறம் நீங்கள் 'அரசியல் ஞானி அய்யாமுத்து'.
@@@@@@@@
பரவால்லடா தம்பி. நீ என் ஆசையை நல்லா புரிஞ்சு வச்சிருக்கிற.