புகழ் தந்த அவமானம்

வாழ்க்கையே அனுபவம், அனுபவமே வாழ்க்கை என்று முடித்த கவிதாவின் கவிதையைக் கேட்டுவிட்டு 'இன்னொரு கவிதை சொல்லு கவிதா' என்று அவளது தோழிகள் வற்புறுத்தினர். கல்லூரியில் நிறைவு ஆண்டு விழாவையொட்டிக் அன்று கவிதை போட்டிகள் நடைபெற்றது.

கவிதாவுக்குப் போட்டி என்பதில் விருப்பமே இல்லை. ஏதாவது போட்டியில் கலந்து கொள் என்று எவரேனும் கூறினால் 'போட்டி என்பது பொறாமையின் வேட்டி, பொறாமையோ வயிற்றெரிச்சலின் வைப்பாட்டி' என்று கவிதா
கவிதையாக பதில் தருவாள். இருப்பினும் கல்லூரி நிறைவு நாளுக்காக நடக்கும் போட்டி, அதைப் போட்டி என்று எடுக்காமல் போட்டியில் கலந்து கொள்ளும் சககல்லூரி மாணவிகளையும் தனது தோழிகளையும் திருப்தி செய்ய, கவிதா அந்த கவிதைப் போட்டியில் கலந்து கொண்டாள்.

போட்டியில் பங்கு கொண்ட அனைவரும் தமது கவிதையை வழங்கினார்கள். போட்டியின் இறுதியில் பங்கு கொண்ட கவிதா தனது "நிலையற்ற வாழ்க்கை" கவிதையை முடித்தவுடன்தான், அங்கிருந்த மாணவிகளும் அவளது தோழிகளும் கவிதாவை இன்னொரு கவிதை வழங்கச் சொன்னார்கள். அந்நேரத்தில் சிற்றுண்டி மற்றும் தேனீர் வரவே, கவிதா அந்த நேரத்தில் இன்னுமொரு கவிதையை தொகுத்தாள். அதன் தலைப்பு ' பணிந்து வழங்கு, துணிந்து முழங்கு". தேநீர் முடிந்து நடுவர்கள் சிறப்பான கவிதையை தேர்வு செய்யத் தனியாக அமர்ந்தார்கள்.

அந்நேரத்தில் கவிதா அப்போதே கற்பனை செய்து அவள் தொகுத்த கவிதையை அங்குள்ளவர்களிடம் பகிர்ந்தாள். இதோ அந்தக் கவிதை:

“பணிந்து வழங்கு, துணிந்து வழங்கு"

பிறப்புடன் உடன்பிறப்பது பிறரிடம் பொருள் வாங்கல்
தாய்ப்பால் பெற்றபின் தந்தையிடம் பொருள் வாங்கல்
ஆசானிடம் கல்வி பயின்று அவர் புகழுரை வாங்கல்
நல்ல மாணவமாணவி என்ற சான்றிதழ் வாங்கல்
ஆசிரியர்களிடம் படிப்பில் புலியெனும் பேரை வாங்கல்
பட்டம்பெற்று வேலை வாங்கல் சம்பளம் வாங்கல்
திறமையாக உழைப்பவன் எனும் பாராட்டு வாங்கல்
காலம் தவறாது அலுவலகத்தில் பதவிஉயர்வினை வாங்கல்
வாழ்கைத் துணையொன்றைச் சமுதாயச் சந்தையில் வாங்கல்
குழந்தைகள் பெற்று வளர்த்துப் பள்ளிச்சீட்டு வாங்கல்
இப்படி வாங்கியே வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்!

குடும்பப்பொருளாதாரம் சீராகச் செழித்து வளர்ந்தப் பின்னே
பிறர்க்குக் கொடுப்பது நற்காரியமென்று அறிவோம் முன்னே
வாழ்க்கைத்துணைக்கு தூய அன்பை அள்ளிக் கொடுப்போம்
நம்மால் இயன்றவரை பிறர்க்கு மகிழ்ச்சியைக் கொடுப்போம்
ஏழைச்சிராருக்கு நம்மாலான கல்வி அறிவைக் கொடுப்போம்
பணிசெய்வோர்க்கு மரியாதை கலந்து ஊதியம் கொடுப்போம்
அனாதை விடுதிகளுக்கு இயன்றவரை பொருள் கொடுப்போம்
முதியோர் இல்லத்தில் வசிப்பவர்க்கு நேரத்தை கொடுப்போம்
அண்டைவீட்டினருக்கு புன்னகை சேர்த்து உதவி கொடுப்போம்
கொண்டாடும் திருநாட்களில் வறியவர்க்கு அமுது கொடுப்போம்
திருமண நாளில் முதியோருக்கு நல்ல விருந்து கொடுப்போம்
இன்னல் படுவோர்க்கு எதிர்பார்ப்பின்றி பொருள் கொடுப்போம்
ஏழைகளுக்கு உதவும் சேவகர்க்கு துணைக்கரம் கொடுப்போம்
பசிக்கொடுமைக்கு உணவு என்று கருணைகுரல் கொடுப்போம்
பிறர்க்கு கொடுக்கையில் அன்பையும் குழைத்து கொடுப்போம்

கொடுத்திட கொடுத்திட வருவது நிறைவான மகிழ்ச்சிதானே
கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்திடில் பேரமைதிதானே
பெயரும் புகழும் எதிர்நோக்கி கொடுப்பதும் நற்சேவைதானே
பலனை எதிர்பாராமல் கொடுப்பது அரிய கொடுப்பினைதானே

என்று தனது கவிதையை வடித்து ‘வாழ்க்கையே அனுபவம், அனுபவமே வாழ்க்கை’ என்று முடித்த கவிதாவின் கவிதையைக் கேட்டுவிட்டு அங்கிருந்த அவளது தோழிகள் "ஆகா, ஆகா என்ன ஒரு அருமையான வாழ்கைக் கவிதை படைத்தாய் கவிதா. வாழ்க உன் கவிதைத்தொண்டு" என்று மனம்விட்டு வியந்து பாராட்டினார்கள். கவிதாவின் பரந்த உள்ளத்தையும் அவளது சேவை செய்யும் மனப்பான்மையையும் வெகுவாக மெச்சினார்கள்.

கவிதை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. முதல் மூன்று சிறந்த கவிதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவியர்களின் முகத்தில் மகிழ்ச்சி இனிய கவிதையைப்போல் அரும்பி மலர்ந்தது. இருப்பினும் அங்கு குழுமியிருந்த மாணவிகளின் முகத்தில் அந்தக் களிப்பு தெரியவில்லை. மாறாக ஏமாற்றமும் வருத்தமும் சந்தேகமின்றி காணப்பட்டது. காரணம், கவிதாவின் கவிதைக்குப் பரிசு எதுவும் கிடைக்கவில்லை என்பதுதான். ஆனால் கவிதா மிகவும் உற்சாகமாகவும் புன்னகையுடன் பரிசு பெற்ற மாணவிகளை வாழ்த்தி மகிழ்ந்தாள். இதைக்கண்டு அவளது தோழிகள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். இருப்பினும் அவள் மனம் புண்படுமே எனப் பரிசுபற்றிய பேச்சை எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

கல்லூரிவிழா நடந்து மூன்று நாட்களுக்குப்பிறகு கவிதாவின் தோழிகள் சிலர் உணவகம் ஒன்றில் சிறப்பு விருந்து ஒன்றுக்கு கவிதாவை அழைத்தனர். அங்கே சிறிய அளவில் சில கேளிக்கைகள் நடத்தினர். விருந்துக்கு முன்பாக கவிதாவை அழைத்துச் சிறிது நேரம் அவள் வாழ்க்கையைப் பற்றி பேசச்சொன்னார்கள். கவிதா தன் வாழ்க்கையை பின்வருமாறு பகிர்ந்து கொண்டாள்:
"என்னுடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பம். தந்தை உயர்நிலைப் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியர். அம்மா வீட்டோடு இருந்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மாலை வேளையிலும் மற்றும் விடுமுறை நாட்களிலும் வேறு பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் சொல்லி கொடுத்துத் தந்தை, கொஞ்சம் கூடுதல் வருமானம் ஈட்டினார். அப்போதுதானே இவ்வளவு பெரிய குடும்பத்தை ஓரளவுக்காவது நடத்த முடியும்.”
“ பள்ளியின் இறுதி ஆண்டு படிக்கையில் நான் ஒரு கவிதை விழாவுக்குச் சென்று என் கவிதை ஒன்றைப் பகிர்ந்து கொண்டேன். அந்த விழாவுக்கு வந்திருந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளர், விழா முடிந்தவுடன் என்னை தனியே அழைத்து "நீ சொன்ன கவிதை மிகவும் அருமையாக இருந்தது. நீ சம்மதம் தெரிவித்தால் நான் அடுத்துத் தயாரிக்கப்போகும் சினிமாவுக்கு நீ ஓரிரு பாடல்கள் எழுதித் தரலாம். எனக்கும் என் இசை அமைப்பாளருக்கும் பிடித்திருந்தால், அதை மெட்டுகட்டித் திரைத் பாடலாய் அமைப்பார். அதற்காக உனக்குத் தகுந்த சன்மானமும் கிடைக்கும் " என்றார்.
“நான் என் பெற்றோர்களிடம் இதைப் பற்றிப் பேசினேன். குடும்பத்தில் பண முடை இருந்ததால் என்னைத் திரைப்படப் பாடல் எழுத ஒப்புக்கொள்ளுமாறு சொன்னார்கள். அதன் பின்னர் நான் என் தம்பியுடன் அந்த இசை அமைப்பாளர் வீட்டுக்குச் சென்றேன். அவர் இரண்டு காதல் பாடல்களை எழுதித் தருமாறு சொன்னார். நான் காதல் பாடல்களை அப்போதுவரை எழுதியதில்லை. இருப்பினும் முயற்சி செய்து ஒரு பாடல் எழுதினேன். அந்த இசையமைப்பாளர் அதைப்படித்துவிட்டு 'பரவாயில்ல்லை. ஆனால் இன்னும் காதல் ரசம் பொங்குமாறு கொஞ்சம் திருத்தி எழுதினால் நன்றாக இருக்கும்" என்று சொல்லிவிட்டு ஒரு தனி அறையில் அமர்ந்து என்னைப் பாடலை அமைக்கச்சொன்னார். பதினாறு நிறைந்து பதினேழாவது வயதில் அப்போதுதான் நுழைந்த நான் கொஞ்சம் காதல் கற்பனை செய்தேன். தொலைக்காட்சி மற்றும் சினிமாப்படங்கள் நான் அவ்வப்போது பார்த்துவருவதால், அந்தத் தருணத்தில் நான் தனிமையிலும் இருந்ததால் என்னுள் சில புதுமையான காதல் உணர்வு தரும் எண்ணங்கள் எழுந்தது. சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டு ஒரு காதல் பாடலை எழுதினேன்.
என் பாடல் வரிகளைப்பார்த்துவிட்டு இசையமைப்பாளர் என் கையைபிடித்துக் குலுக்கினார். "கவிதா, எவ்வளவு காதல் உணர்வு உன் பாடலில், நெருக்கமாக பழகும் இரு காதலர்களின் மனநிலைகளை மிகவும் சிறப்பாக அமைத்திருக்கிறாய். நாளை நான் இந்தப்பாடலை தயாரிப்பாளரிடம் காண்பித்து உனக்குப்பின் தெரியப்படுத்துகிறேன்" என்றார். மூன்று நாளுக்குப்பிறகு தயாரிப்பாளர் என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு "வாழ்த்துக்கள் கவிதா, நீ எழுதிய முதல் சினிமாகவிதைக்கு என் இசையமைப்பாளர் அருமையான ஒரு மெட்டு கட்டியிருக்கிறார். இந்தப்பாடலை பாடப்போகும் பாடகர் பாடகி இருவரும் இப்போதுதான் முதன்முறையாகத் திரைப்படத்தில் பாடப்போகிறார்கள். பாடலை ஒலிப்பதிவு செய்தபின் உனக்குத்தெரிவிக்கிறேன். நீ வந்து பாடலை கேட்டுவிட்டு உன் பாடலுக்கான தொகையையும் பெற்றுக்கொன்று செல்லலாம்." என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
பின்னர் ஒரு வாரம் கழித்துத் தயாரிப்பாளர் என் வீட்டிற்கு ஒரு காரை அனுப்பிவைத்து என்னை அவர் வீட்டிற்கு வரச்சொன்னார். நான் என் அண்ணனுடன் அவர் வீட்டிற்குச்சென்றேன். நான் எழுதிய பாடலை திரைப்படப்பாடலாக என் காதுகளில் கேட்டு நான் உண்மையில் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக கொஞ்சம் வேதனை அடைந்தேன்.
இதைகேட்டவுடன் கவிதாவின் தோழிகள் "ஏன் கவிதா, எல்லோருக்கும் இதுபோன்று வாய்ப்பு அமைவதே மிகவும் கடினம். உன் கவிதை ஒரு திரைப்பாடலாக உருவாகியிருப்பது உனக்கும் எங்களுக்கும் கூடப்பெருமைதானே?" என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது கவிதா கூறினாள் "ஒரு விதத்தில் நீங்கள் கூறுவது சரிதான். ஆயினும் எனது பாடலைப் பாடகி பாடியவிதம், குறிப்பாக சரணங்களுக்கு இடையில் சரசமும் காமமும் பொங்க, கேட்ப்பவருக்கும் அத்தகைய எண்ணங்கள் உடனடியாக எழுமாறு, பாடகி முனகிய விதம் எனக்குப்பிடிக்கவில்லை". உடனே தோழிகள் "அதற்கு நீ என்ன செய்யமுடியும் கவிதா, இவையெல்லாம் இசையமைப்பாளர் பாடகர்களின் பாடு. எவ்வளவோ காமரசம் தரும் திரைப்பட பாடல்களை நாம் அன்றாடம் கேட்டவண்ணம் தான் இருக்கிறோம். 'நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சுதே யம்மா" என்ற பாடல் இதற்கு ஒரு உதாரணம். சரி உனது பாடலுக்கு எவ்வளவு பணம் கொடுத்தனர்" என்றனர். கவிதா "எனக்கு ரூபாய் 25000 கிடைத்தது. வாழ்க்கையில் முதன் முறை நான் சம்பாதித்தேன், அதுவும் இரண்டு மணிநேரம் மட்டுமே பாடல் எழுத நேரம் செலவிட்டு" என்றபோது தோழிகள் "வாழ்த்துக்கள் கவிதா. உன்னுடைய பரம தோழிகள் மட்டும் இல்லை விசிறிகளான எங்கள் பத்து பேருக்கும் நீ நல்ல விருந்து தரவேண்டும்" என்று அன்புக்கட்டளை இட்டபோது கவிதா "நிச்சயம், ஆனால் நமது இறுதித்தேர்வு முடிவுகள் வந்தபின்புதான்" என்றதும் அவளது தோழிகளின் முகங்கள் கொஞ்சம் வாடிவிட்டன.
இருப்பினும், "பரவாயில்லை கவிதா. உன்னுடைய எண்ணமும் எங்களுக்குப்புரிகிறது. நாம் அனைவரும் நன்கு உழைத்துப் படித்து இறுதித்தேர்வில் வெற்றிபெறவேண்டும் என்பது தான் உன்னுடைய எண்ணம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்" என்று கூறிவிட்டு அனைவரும் அறுசுவை உணவுகளைச்சுவைத்து சாப்பிட்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
அடுத்த மாதத்தில் தேர்வுகள் நடந்துமுடிந்தது. அதற்கு அடுத்த இரண்டு மாதத்தில் கவிதாவின் தேர்வு முடிவுகள் வெளியானது. மிகவும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று கவிதா அவளது உயர்நிலைபள்ளித்தேர்வுகளில் வெற்றி பெற்றாள். அவளது ஒரு தோழி வசந்தா மட்டும் துரதிருஷ்டவசமாக தோல்வி கண்டாள். மற்ற அனைவரையும் தேர்வினில் வெற்றிபெற்றார்கள். கவிதா மிகவும் வேதனை அடைந்தாள். வசந்தா அவள் வீட்டிற்கு வெகு அருகாமையில் இருந்ததால் கவிதா அவள் வீட்டிற்குச்சென்று அவளுடன் இரண்டு மணிநேரம் இருந்துவிட்டு அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வீடு திரும்பினாள்.
கவிதா தமிழில் பி ஏ (இலக்கியம்) படிக்க கல்லூரிகளுக்கு விண்ணப்பம் அனுப்பத்தொடங்கினாள். தமிழைப் போற்றவேண்டும் பாராட்டவேண்டும் என்கிற அவளது அளவுகடந்த விருப்பத்தை பூர்த்தி செய்ய அதை அவள் நல்ல ஒரு மார்கமாக கருதினாள்.

ஒரு நாள் அந்தப்படத்தயாரிப்பாளரிடமிருந்து கவிதாவிற்கு அலைபேசி அழைப்பு வந்தது. கவிதாவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துத்தெரிவித்துவிட்டு அவர் கவிதாவிடம் " உன்னிடமிருந்து இரண்டு பாடல்களை எதிர்பார்க்கிறேன். எனது நண்பன் ஒருவன் தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படத்திற்கு இந்த பாடல்கள் தேவை" என்றார். கவிதா " நன்றி சார். நான் வீட்டில் கேட்டுவிட்டு உங்களுக்கு தெரிவிக்கிறேன்" என்றாள். உடனே தயாரிப்பாளர் " உனக்கு இப்போது பதினெட்டு வயது ஆகிவிட்டது. இனிமேல் நீயே எல்லா முடிவுகளையும் எடுக்கலாம்" என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு " சரி, விரைவில் எனக்குத் தெரியப்படுத்து" என்று சொல்லி அலைபேசியை துண்டித்தார்.
கவிதா இதுபற்றி அவளது பெற்றோர்களிடம் பேசியபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் " அடாடா, உன்னுடைய பாடல்களுக்கு இப்படி ஒரு மவுசா? நிச்சயம் நீ பாடல்கள் எழுது" என்றனர்.
அதன் பிறகு கவிதா தனிமையில் அவள் தாயுடன் பேசினாள். " அம்மா , நான் முன்பு எழுதிய இரண்டு பாடல்களில், ஒரு பாடலை மிகவும் விரசமாகச் செய்துவிட்டார்கள். ஆனால் அந்தப்பாடல் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. இந்தமுறை நான் தயாரிப்பாளருக்கு சொல்லிவிடுவேன் " நான் எழுதும் பாடல்களை விரசம் திணித்து இசையமைத்துப்பாடினால் நான் இனி பாடல்கள் எழுதமாட்டேன் " என்று சொல்லிவிடப்போகிறேன்.
அவள் தாய் " கவிதா , உன் உணர்வுகள் எனக்குப்புரிகிறது. இருப்பினும் நீ கொஞ்ச நாட்கள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினால் நல்லது. நீ எழுதும் பாடல் வரிகள்தான் உன் கற்பனை வளத்தில் ஊறி வருகிறது. அவ்வரிகளைக்கொண்டு ஒரு இசையமைப்பாளர் எவ்வாறு மெட்டு போடுகிறார், எப்படி அந்தப்பாடலை ஒரு பாடகி பாடகர் மூலம் பாடவைக்கிறார் என்பதைப்பற்றி நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும்? உன் அப்பாவுக்கும் ஏதாவது உடம்புக்கு வந்தவண்ணம் இருக்கிறது. அவரது தம்பிகள் இருவருக்கும் உன் அப்பா அடிக்கடி பணஉதவி செய்து வருவதால் நமக்கு எப்போதுமே பணம் கொஞ்சம் முடையாகத்தான் இருக்கிறது. உன் தங்கை தம்பி இருவரும் இன்னும் பள்ளியில் படித்துவருகின்றனர். உன் அண்ணன் இப்போதுதான் பொறியியல் இரண்டாம் வருடம் படிக்கிறான். கொஞ்சம் நம் குடும்பத்தின் பொருளாதாரத்தை நினைவில் கொண்டு நீ பாடல்கள் எழுதுவது நல்லது என்று என் மனதிற்கு படுகிறது. ஆயினும் உன்னை நான் இந்த விஷயத்தில் வற்புறுத்தமாட்டேன். உனக்கு எது சரி என்று படுகிறதோ அப்படியே செய் கவிதா" என்றபோது கவிதாவுக்கு தர்மசங்கடமாக இருந்தது. குடும்பநிலையை மனதில் கொண்டு " சரியம்மா , அப்படியே." என்று சொல்லிவிட்டு உடனேயே அந்தத்தயாரிப்பாளருக்கு அலைபேசிமூலமாக சம்மதம் தெரிவித்தாள்.
பத்துநாட்கள் கழித்து கவிதாவை கூட்டிச்செல்ல அவள்வீட்டிற்கு ஒரு கார் வந்தது. அப்போது வீட்டில் இருந்த தம்பியுடன் கவிதா அந்தக்காரில் புறப்பட்டுச்சென்றாள். புதிய படத்தயாரிப்பாளர் கவிதாவை அவர் வீட்டில் வரவேற்றார். பிறகு பாடல்கள் குறித்த சூழ்நிலையை அவளுக்கு விளக்கினார். அதே நேரத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் பாடலுக்குரிய சூழ்நிலையை கேட்டுவிட்டு இரண்டு மூன்று மெட்டுக்கள் போட்டு காட்டினார். ஒரு குறிப்பிட்ட மெட்டை தயாரிப்பாளர் தேர்ந்தெடுத்து " இந்த மெட்டில் நீங்கள் பாடல் எழுதுங்கள் " என்று கவிதாவிடம் சொன்னார். கவிதா கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு ஏற்றமாதிரி பாடலை எழுதத்தொடங்கினாள்.

" உன்னைத் தொட்டால் எனக்கு குளுகுளு, என்கை பட்டால் உனக்கு ஜிலு ஜிலு " மின்னும் கன்னம் தக்காளி போல், இடை கொண்ட கனியோ பப்பாளி போல்" என்று கவிதா அரை மணிநேரத்தில் எழுதிய பாடலை இசையமைப்பாளர் வெகுவாக ரசித்தார். பாடல் வரிகளை மட்டும் அல்ல கவிதாவின் அழகையும் அவர் அவளுக்குத்தெரியாமல் ரசித்தார். "ரசிகர்களைக் கவரும் மிகவும் புதியமையான பாடலை எழுதினீர்கள் ' என்று வெகுநேரம் அவளுடைய கைகளைப்பற்றிக்கொண்டு பாராட்டினார். கவிதா ‘நன்றி சார்' என்று சொல்லி கைகளை அவரிடமிருந்து விலக்கிக்கொண்டாள்.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அதே இசையமைப்பாளருக்கு கவிதா, அஜந்தா எல்லோரா சிற்பங்களின் கவர்ச்சிகளை உணர்த்துவதுபோன்ற ஒரு காதல் பாடலை எழுதிக்கொடுத்தாள். பாடல் வரிகளைக்கண்டு இசையமைப்பாளர் கவிதாவை வைத்தகண் வாங்காமல் சில நேரம் நோக்கினார். அப்படிப்பார்க்கையில் அவர் பார்வை தன்னுடைய அங்க அழகுகளையும் பார்த்து ரசிப்பதை கவிதாவால் உணர முடிந்தது. அப்போதுதான் கவிதா உணர்ந்தாள் அவள் அன்று எடுப்பான சிகப்புநிறச் சேலையும் உடம்பை கொஞ்சம் பிடிக்கும் ரவிக்கையும் உடுத்தியிருந்தாள் என்று. கவிதா அழகான பெண் என்று கூறமுடியாது. ஆனால் பார்ப்பதற்கு ஒரு சராசரியான பெண்ணைவிட அழகாக இருப்பாள். அவளின் வாளிப்பான உடல் எந்த ஒரு ஆண்மகனின் கண்களையும் ஒருமுறை கவரும் வண்ணமே இருந்தது.
அந்த நிகழ்ச்சிக்குப்பின்னர் கவிதா பாட்டு எழுதச்செல்லும்போது தொளதொளவென்று சல்வார் கமீஸ் ஆடைகளையே அணிந்து சென்றாள். இந்த இரு பாடல்களுக்கும் இசையமைப்பாளர் புதிய பாணியில் இசையமைத்திருந்தார். இதில் ஒரு பாடலில், பாடகியின் முனகல்கள் காரணமாக பாடல் மிகவும் விரசமாக இருந்தது. அடுத்த மூன்று மாதங்களில் இந்தப் பாடல்கள் கொண்ட திரைப்படமும் வெளிவந்தது. இரண்டு பாடல்களுமே பிரபலமாகின. இப்பாடல்களை எழுதித்தந்ததற்காக தயாரிப்பாளர் கவிதாவிற்கு 50000 ரூபாய் கொடுத்தார்.

இதற்கிடையில் அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் மூன்று திரைப்படங்களுக்கு கவிதா மொத்தம் எட்டு பாடல்கள் எழுதினாள். இதில் ஒன்று, தாயின் பெருமைபேசும் பாடல், இன்னும் இரண்டு நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை தரும் பாடல்கள். எஞ்சிய ஐந்து பாடல்களுமே காதல் பாடல்கள். அதிலும் மூன்று பாடல்கள் கொஞ்சம் விரசம் பூசப்பட்ட பாடல்கள். இந்த மூன்று பாடல்களில் ஒரு பாடல் மட்டும் கவிதாவின் ஒரிஜினல் பாடல் வரிகள். மற்ற இரண்டு பாடல்களில் ஓரிரண்டு இடங்களில் வார்த்தைகள் மாற்றப்பட்டு, பாடலுக்கு காமத்தையும் விரசத்தையும் அதிகம் கூட்டியது. இந்தப் பாடல்களுக்காக கவிதாவுக்கு கிடைத்த தொகை நாலுலட்சம் ரூபாய். குறிப்பாக விரசம் நிறைந்த பாடல்கள் ரசிகர்களிடையே ஒரு பரபரப்பை உண்டாக்கியது. இந்தப்பாடல்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியானபிறகு கவிதா ஒரு செக்ஸ் பாடலாசிரியையாக சித்தரிக்கப்பட்டாள். இதனால் கவிதாவுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.

கவிதா மேற்படிப்புக்காக கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தாள். ஆனால் சினிமா பாடல்கள் தொடர்ந்து எழுதியதால் அவளது பெற்றோர்கள் " இப்போது உனக்கு சினிமாவில் எழுத நல்ல வாய்ப்புகள் வருவதால் , கல்லூரி படிப்பை அடுத்தவருடத்திற்கு தள்ளிப்போடலாமே" என்றபோது கவிதாவால் மறுக்கமுடியவில்லை. கைநிறைய காசு, வீட்டில் அனைவரும் வேண்டியதை வாங்கிக்கொள்ளவும் தம்பி தங்கைகளின் படிப்புக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.

கவிதா விரசம் நிறைந்த பாடல்களை எழுதுவதை குறைத்துக்கொள்ளத்தொடங்கினாள். இதனிடையில் கவிதா பாடல்கள் எழுதிய இரண்டு திரைப்படங்கள் சினிமா கொட்டகைகளில் திரையிடப்பட்டபோது, பாடல்களை இயற்றியவர்-பாடலாசிரியை கவிதா என்பது கவிதாவின் புகைப்படத்துடன் திரையில் பெரிய எழுத்துகளில் காட்டப்பட்டது. இந்த செய்தியை தனது தோழிகள் மூலம் அறிந்த கவிதா சம்பத்தப்பட்ட தயாரிப்பாளர்களுடன் பேசி அவளது அதிருப்தியை தெரிவித் தாள். திரையரங்குகளில் அவளின் புகைப்படம் இனிமேல் திரையில் வரக்கூடாது என்று அவள் அவர்களுக்கு கண்டிப்புடன் தெரிவித்துவிட்டாள்.

ஒரு முறை கவிதா, அவளுடைய தம்பியும் அண்ணனும் அந்த நேரத்தில் வீட்டில் இல்லாததால் தனியாக ஒரு தயாரிப்பாளர் வீட்டிற்கு சென்றிருந்தாள். தயாரிப்பாளர் மிகவும் இளமையான ஒரு வாலிபன். அவன் கவிதாவை பார்த்தவுடன் 'ஓ மை காட், யூ லுக் ஆஸம்" நீங்க உங்களுடைய பாட்டுக்களைப்போலவே இனிமையாக இருக்கீங்க." என்றபோது கவிதாவால் அந்தப் பாராட்டை நிராகரிக்கமுடியவில்லை. அவளை அறியாமலேயே "நன்றி, நீங்களும் நன்கு ஸ்மார்ட்டாக இருக்கீங்க' என்றதும் அவன் "நீங்க என் படத்திற்கு மூன்று காதல் பாடல்கள் எழுதித்தரவேண்டும்" என்றான். கவிதா ' நிச்சயமாக உங்களுக்குபிடித்தமாதிரி எழுதித்தருகிறேன்' என்றாள். அப்போது அந்த வாலிப தயாரிப்பாளன் கவிதாவின் கைகளை பிடித்து அவளை லேசாக தோளில் தட்டி " தட் இஸ் கிரேட்" என்றான். கவிதாவுக்கு உடம்பெல்லாம் குறுகுறுவென்று இருந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் கவிதாவும் அந்த இளைஞனும் பத்துமுறை சந்தித்துக்கொண்டார்கள். ஏனோ தெரியவில்லை. வழக்கமாக தனது தம்பி அல்லது அண்ணனை துணையாக கூட்டிச்செல்பவள் அந்த வாலிப தயாரிப்பாளரை சந்திக்கும்போதெல்லாம் தனியாகவே சென்று வந்தாள். இந்த செயல் இளமையின் தாக்கமா, வாலிபத்தின் ஏக்கமா, துள்ளும் இளைஞனின் ஊக்கமா என்பதை கவிதாவால் ஆராய்ந்து அறியமுடியவில்லை. அந்த தயாரிப்பாளரின் பெயர் மது. இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் அவன் கவிதாவை அவள் கன்னத்தில் லேசாக முத்தமிட்டான். முதல் முறை அவன் முத்தமிட்டபோது கவிதா " மது கொஞ்சம் கவனமாக இருங்க" என்று கவிதா மென்மையாக எச்சரித்தாள். இரண்டாம் முறை " ஏன் மது நாம் இருவரும் தொழில் நிமித்தமாகவே சந்திக்கிறோம். நம்மிடையில் வேறு எந்த வித உறவும் இல்லை. எனவே நீங்கள் என்னிடமிருந்து விலகியே இருங்கள்" என்று கொஞ்சம் தீர்க்கமான குரலில் எச்சரித்தாள். அவன் " மன்னிக்கவும் கவிதா. நீ என் பக்கத்தில் இருக்கும்போது எனக்கு அப்படிப்பட்ட உணர்வுகள் வருகிறது" என்று சமாளித்தான்.

ஒருமுறை அவன் கவிதாவுக்கு அவனது சில புகைப்படங்களை அனுப்பியிருந்தான். அப்படி அனுப்புகையில் அவனை அறியாமலே அவனும் அவன் மனைவியும் சேர்ந்து இருந்த ஒரு புகைப்படத்தையும் அனுப்பிவிட்டான். அதுவும் அவனின் திருமணநாள் அன்று எடுத்த புகைப்படம். அதை பார்த்துவிட்டு கவிதா அதிர்ந்துபோனாள். அடுத்த நாள் இருவரும் சந்தித்தபோது கவிதா அவனுடைய அருகில் அமர்வதற்கு பதிலாக அவன் எதிரில் அமர்ந்து கொண்டாள். மது சிறிது நேரம் கழித்து " என்ன கவிதா , பாடலுக்கு முன் ஊடலா" என்று சிரித்தபடி சொன்னான். கவிதா பதில் ஏதும் சொல்லாமல் கவிதை எழுதுவதில் கண்ணாக இருந்தாள். அவள் வீட்டிற்கு புறப்படுகையில் " கவிதா இன்று நாம் ஹோட்டலில் சேர்ந்து சாப்பிடலாமா?" என்றபோது கவிதா "இல்லை நான் வீட்டிற்கு செல்லவேண்டும்." என்று சொல்லிவிட்டு பக்கத்துக்கு அறைக்கு சென்று நீர் அருந்துகையில் அவளுக்கு பின்னாடியிலிருந்து வந்து மது, அவளை லேசாக கட்டியணைத்தான். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத கவிதா திடுக்கிட்டுப்போனாள். " ஏன் இப்படி நாகரீகமின்றி நடக்கிறீர்கள்? என்று கேட்க வாயெடுத்தவளை, மது அவள் வாயை மென்மையாக அவன் கையால் மூடிவிட்டு அவள் கன்னத்தில் 'இச் இச் இச் ' என்று மூன்று முறை முத்தங்கள் கொடுத்தான். கவிதா அவனிடமிருந்து சட்டென விலகி " நான் இனிமேல் உங்களை எப்போதும் சந்திக்கமாட்டேன்" இனிமேல் நான் சினிமாவுக்கு பாடல்களும் எழுதமாட்டேன்" என்று சொல்லிவிட்டு விருட்டென புறப்பட்டாள்.

கவிதாவிற்கு அடுத்த இரண்டு நாட்கள் சரியான தூக்கம் இல்லை. " எனது பருவம் தந்த கவர்ச்சியின் காரணமாக நான் மதுவிடம் கொஞ்சம் சிரித்து பேசியதை அவன் அவனுடைய ஆதாயத்திற்கு பயன்படுத்தத்தொடங்கிவிட்டான். அவன் ஏற்கெனவே திருமணமும் ஆனவன். அவனிடம் நான் இனியும் தொடர்ந்து பழகினால் என் கற்பு எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம். மேலும் அவன் என்னை வற்புறுத்தித் திருமணம் செய்துகொள்ளவும் விரும்புவான்." என்பது போன்ற சிந்தனைகள் அவள் மனதில் எழுந்தது. அவள் நினைத்தாள் " இருபத்தியிரண்டு வயது பருவ மொட்டாக இருக்கும் நான் ஏற்கெனவே செக்ஸ் பாடலாசிரியை என்று பெயரை வாங்கிவிட்டேன். கடந்த வாரத்தில் இந்த மதுவுடன் சேர்ந்து எழுதிய இரண்டு பாடல்கள் மிகவும் விரசம் உள்ளதாகத்தான் அமைந்தது. நான் கல்லூரியில் படித்தபோது என்னிடமிருந்த லட்சியம் வைராக்கியம் சிந்தனை இவை எல்லாம் எங்கே போய்விட்டது? பணம் என்றால் எப்படியும் எழுதலாம் என்ற ஒரு அவல நிலைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன். இத்தகைய நிலையில் , தமிழ் திரைப்படத்துறையில் பெண் பாடலாசிரியர்கள் எவருமே இல்லாத ஒரு சூழ்நிலையில், என்னை இந்த சமுதாயம் எப்படி பேசிக்கொண்டிருக்கும்? வரும் காலங்களில் , என் காதல் பாடல்களை எப்படி விமரிசிக்கும்?" என்று நினைத்து ஒரு கணம் அதிர்ந்து போனாள் கவிதா.
"இனியும் நான் மானமுள்ளவளாக, தன்மானம் நிறைந்தவளாக, என் கொள்கைகளிலில் பற்று கொண்டவளாக வாழவேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி, இந்த சினிமாத்துறையிலிருந்து விலகுவதுதான்"

கவிதா அவள் தாயுடன் இதைப்பற்றி விவாதித்தாள். அவள் தாய் கூறினாள் " கவிதா, நீ திரைப்பாடல்கள் எழுதத்தொடங்கியதிலிருந்து நம் குடும்பத்தின் பொருளாதாரம் நன்கு சீராகிவிட்டது. உன் அப்பாவிற்கு உரிய மருத்துவச்செலவுகளை எதிர்கொள்வது மிகவும் எளிதாகிவிட்டது. இது தவிர, உன் அப்பா அவரின் இரண்டு சகோதரர்களுக்கு மாதாமாதம் ஒரு தொகையை உதவியாக கொடுத்துவருகிறார். நானும் வீட்டில் ஒரு பணிப்பெண்ணை அமர்த்தியதால் என் உடல் நலனும் நன்றாக இருந்துவருகிறது. இவை எல்லாவற்றையும்விட உன்னுடைய பெயர் புகழ் இரண்டும் எவ்வளவோ பரவிவிட்டது. இந்த இளவயதிலேயே நீ திரைப்படத்துறையில் நல்ல பாடலாசிரியை என்ற பெயர் எடுத்துவிட்டாய். போகப்போக எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது. எனவே 'காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்' என்ற உவமையைத்தான் நான் உனக்கு என் அறிவுரையாகக்கூறுவேன்".

கவிதா அப்போது கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள் " அம்மா , உன்னுடைய தொலைநோக்கிலிருந்து நீ சொல்வது சரிதானம்மா. எனக்கே தெரிகிறது எப்படி இருந்த நம் குடும்ப பொருளாதாரம், தற்போது எவ்வளவு முன்னேறியுள்ளது என்று. ஆயினும் நான் கல்யாணம் ஆகாத ஒரு குமரிப்பெண். நான் சந்திப்பவர்கள் அனைவருமே ஆண்கள். பெரும்பான்மையானவர்கள் இதுவரை என்னிடம் மரியாதையாகவே நடந்துகொண்டு வருகிறார்கள். ஆயினும் ஒரு சிலர் என்னை பார்க்கும் பார்வைகள், என்னிடம் நெருங்கிவந்து பழக அவர்கள் மேற்கொள்ளும் உபாயங்கள் இவற்றை நீ அறியமுடியாது. இன்னொரு விஷயத்தையும் நான் இப்போது உன்னிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் இன்றுவரை ஐம்பது திரைப்பட பாடல்கள் எழுதியிருக்கிறேன். அவற்றில் முப்பது பாடல்கள் காதல் பாடல்கள், அவற்றில் பத்து பாடல்கள் விரசம் நிறைந்த பாடல்கள். இப்படிப்பட்ட வரிகளை நான்தான் எழுதினேனா என்றுகூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது. பாடல் வரிகளில் உள்ள விரசம், பாடுபவரின் குரலில் நிறைந்த விரசம், முனகும் சத்தம் இவற்றையெல்லாம் கேட்கும்போது நான் எழுதிய பாடல்களே என் காதுகளில் கர்ணகொடூரமாக விழுகிறது. நான் மேன்மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளிலும் இப்படிப்பட்ட மனம்வெறுக்கும் அனுபவங்களுடன்தான் வாழவேண்டுமா, சொல் அம்மா? இவற்றையெல்லாம் இப்போதுவரை உன்னிடம் சொல்லவில்லை. ஆனால் சூழ்நிலை நாளுக்கு நாள் எனக்கு சாதமாக இல்லை. சொல்லப்போனால் என்மேலேயே எனக்கு கொஞ்சம் சந்தேகமும் கூட வருகிறது."

கவிதாவின் அம்மா கண்மூடியபடி அவள் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தாள். அடுத்த ஐந்து நிமிடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. கவிதா அவள் தாயை பார்த்துக்கொண்டே இருக்கையில் தாயின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது. கவிதா " அம்மா, ஏனம்மா அழுகிறாய். உன்னை அழவைக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை அம்மா."
தாய் கண்ணீரை துடைத்தபடி கூறினாள் " கவிதா, நீ கூறியவற்றை நான் உன்னிப்பாக கேட்டேன். நீ சொல்லியவற்றிலிருந்து நீ சொல்லாத சில கசப்பான அனுபவங்களையும் என்னால் கற்பனை செய்து உணரமுடிகிறது. இப்போது நான் உன்னுடைய தாய் என்கிற முறையில் மட்டும் இல்லை உன்னுடைய ஒரு தோழியாகவும் கூறுகிறேன் " இன்றிலிருந்து நீ சினிமாப்பாடல்கள் எழுதவேண்டாம். இந்த அளவுக்கு நமக்கு நல்லவழி காட்டிய இறைவன் இனிவரும் நாட்களிலும் நம் நன்மைக்காக அருள்புரிவான். நீ பழைய கவிதாவாக, மக்களின் அறிவையும் சிந்தனையையும் தூண்டும் கவிப்பொறியாக மாறிவிடு. உன் அண்ணனுக்கு அவன் கல்லூரியில் நடந்த நேர்காணலில் வேலை கிடைத்துவிட்டது.அடுத்த வருடத்திலிருந்து அவன் வேலை செல்ல தொடங்கிவிடுவான். நீ நம் குடும்பத்தை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் உன் படிப்பின் மீதும் வாழ்க்கை கவிதைகளின்மீதும் நாட்டம் செலுத்து. இதுவரை நீ ஈட்டிய சம்பாத்தியத்திற்கு நம் குடும்பமே உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது."

கவிதா அவளுடைய பத்து உயிர்தோழிகளை அலைபேசியில் அழைத்து " வருகின்ற ஞாயிறு மாலை மைலாப்பூர் ' ராம் உணவகத்தில்' சந்திப்போம். ஏற்கெனவே நான் உங்களுக்கு தரவேண்டிய விருந்துடன் இரண்டாவது விருந்தையும் இம்முறை சேர்த்துத் தரப்போகிறேன்" என்று அழைப்புவிடுத்துவிட்டு வெகுநேரம் அவளின் எதிர்காலத்தைப்பற்றி சிந்தனை செய்தவண்ணம் இருந்தாள்.

அவளுக்கு அந்நேரத்தில் உதித்தது அவளுடைய கவிதை அல்ல. கவிஞர் கண்ணதாசன் எழுதிய 'வாழ நினைத்தால் வாழலாம் , வழியா இல்லை பூமியில்" என்ற சினிமா பாடல் வரிகள்தான்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Mar-23, 4:17 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 94

மேலே