எங்கள் வாழ்க்கை

எங்கள் வாழ்க்கை..!

குடும்பத்துடன் நான்கைந்து மாதம் சுற்றுப்பயணம் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டோம். நடைப் பயணம் மட்டும் தான் எங்களுடையது. அதுவும் காடு, மலை, வனாந்திரம், என்று எல்லா இடங்களையும் கடந்துதான் செல்ல வேண்டும். இதற்காக நாங்கள் அஞ்சவில்லை. இப்படி அடிக்கடி பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் இந்த முறை அதிக பட்ச தூரம் பயணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டோம்.
குடும்பம் என்பது நீங்கள் நினைப்பது போல பெற்றவர்கள் மட்டும் கொண்டதல்ல. எங்கள் குடும்பங்கள்,கிட்டத்தட்ட மாமா, அத்தை சித்தி, சித்தப்பா, பங்காளி இவைகளின் வகைகளில் நூறு பேருக்கு மேல் சேருவோம். உங்களுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் இவ்வளவு பேர்களா என்று.
உறவுகளுக்குள் சிக்கல் வருவதற்கு காரணம் என்னவாக இருக்கும்? முக்கியமாக தனி மனித சுய நலம், பேராசை, பொறாமை, அடுத்தவர் இடங்களை ஆக்ரமித்தல், இவைகள் தான் முக்கியமாக இருக்கும். எங்களை பொறுத்தவரை அவரவர் இடங்களில் நாங்கள் இருந்து கொள்வதால் இந்த சிக்கல்கள் எழும் வாய்ப்பு இல்லை. ஒரே பக்கமாக வாழ்வதால் எங்களுக்குள் இது எனக்கானது என்னும் எண்ணம் என்றும் எழுந்ததில்லை.
எங்களுக்குள் மோதல் என்பது பெண் விசயத்தில் மட்டும்தான். இருந்தாலும் பெண் யார் மீதாவது விருப்பபட்டு விட்டால் கண்டு கொள்ளாமல் விலகி சென்று விடுவோம். அதனால் கூட உறவுகள் தொடர்பு எங்களுக்கு பலமாக இருக்கிறது.
முக்கியமான விசயம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நாங்கள் இந்த பிரயாணத்தை மேற்கொள்வதற்கு காரணமே எங்கள் பகுதி முழுக்க வறட்சிதான். குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பிட உணவில்லை, என்ன செயவது? அதனால் இப்படி பிரயாணம் போவதால் வழியில் உணவுக்கும் தண்ணீருக்கும் வழி செய்து கொள்ளமுடியும் என்னும் நம்பிக்கைதான்.
பிரயாணம் கிளம்பி விட்டோம். நடை பயணம் என்பதால் நகர பகுதிகளில் நடமாட மாட்டோம். காடுகளில் ஓரங்களில், நடக்க ஆரம்பித்தோம். நிறைய பேர் எங்கள் குடும்பத்தை வியப்பாய் பார்த்தனர் இத்தனை பேரா?
இதனால் சில இடங்களில் பெரும் துன்பமும் அனுபவித்தோம். காடு கரைகளில் எங்களை நிற்க விடாமல் அடித்து துரத்துவார்கள். எங்களுக்கும் கோபம் வரும் எதிர்த்து மோத நினைத்தாலும் பெரும்பாலும் அடங்கிய நிலையில் சென்று விடுவோம். இதனால் இரவு நேரங்களில் நடக்க ஆரம்பித்தோம். காடுகள் வழியாகவே நடையை தொடர்ந்தோம். அப்படியும் எங்களில் பலர் உணவுக்காக சில ஊர்களில் நடமாடுவார்கள். அதற்கு பலனாக எங்களை மொத்தமாக அடித்து துரத்தும் நிலைமையும் எங்களுக்கு ஏற்பட்டதுண்டு.
நாங்கள் பலசாலிகளாக இருந்தாலும், நூறு பேராக இருந்தாலும், எதிர்த்து நின்றால் அவர்கள் ஓடிவிடுவார்கள் என்றாலும் பெரும்பாலும் உள்ளுக்குள் பய உணர்வு கொண்டவர்கள்தான்.
உங்களுக்கு எங்கள் பிரயாணத்தில் என்னென்ன நடந்தது என்று சொல்ல நினைத்தேன். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் நடந்து சென்ற பகுதிகளில் எல்லாம் பெரு மழை பிடித்து கொண்டது. இதனால் அங்கங்கு ஒதுங்கி நின்று பின் நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த இடத்தில் மழையை பார்க்காமல் நீண்ட நாட்கள் இருந்தோம். நாங்கள் போகும் இடங்களிலெல்லாம் மழை எங்களை ஏமாற்றவில்லை. அதனால் வெளி இடங்களுக்கு அதிகம் சுற்றாமல் அங்கங்கு தங்கியபடியே காலத்தை அனுபவித்தோம். அது மட்டுமல்ல மழையோடு மழையாக எங்களில் பலர் ஆடிப்பாடி சந்தோசமாக அனுபவித்தோம்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஓடிப்போயிருந்ததே தெரியவில்லை. ஆயிரம் மைல்களுக்கு மேல் பிரயாணம் செய்திருந்தோம். நல்ல உணவும் தண்ணீரும் போகும் இட்ங்களில் எல்லாம் கிடைத்தது. திருப்தியாகவே இருந்தோம்.
இனி நம் இருப்பிடங்களுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தோம். வண்டி வாகனங்கள் எங்களுக்கு ஏது ? மீண்டும் நடை பயணம். நடப்பதில் எங்களுக்கு சலிப்பே ஏற்பட்டதில்லை. மகிழ்ச்சியாக நடக்க ஆரம்பித்தோம்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து வந்து கொண்டிருந்தோம். எங்களின் இருப்பிடம் கண்ணுக்கு தெரிய தெரிய மகிழ்ச்சி பிடிபடவில்லை. இங்கும் மழை பெய்திருக்கிறது போலிருக்கிறது, எங்கும் பசுமையாய் காட்சியளிக்கிறது.
இதென்ன ஏதோ மறைப்பு போல பாதை முழுவதும் போட்டிருக்கிறதே? அத்தனை பேரும் அப்படியே நின்று விட்டோம். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் போதும் எங்கள் இருப்பிடத்துக்குள் போய் விடலாம். ஆனால் யார் இந்த பாதையை மறைத்தது?
ஓரு சில தைரியசாலிகள் அந்த மறைப்பை ஓங்கி தள்ளி விட முயற்சித்து அதை தொட்டவுடன் அலறி அடித்து திரும்பி ஓடி வந்தனர்.
கடவுளே என்ன அது? இதுதான் மின்சார வேலியா? நாங்கள் போகும்போது இது காணப்படவில்லையே? இந்த ஆறு மாதத்திற்குள் யார் இப்படி செய்தது?
இப்பொழுது நாங்கள் எப்படி எங்கள் இருப்பிடம் செல்வது? எங்கள் உறவுகளில் மூத்தவர்கள் ஒரு சிலர் வேறு வழியில்லை சுற்றித்தான் போக வேண்டும், என்று முடிவு செய்தார்கள். அதனால் ஒரு வாரமோ இரண்டு வாரமோ நாட்கள் அதிகம் ஆகலாம், என்ன செய்வது? அதை விட வழி முழுவதும் ஆபத்து வேறு..!
பயந்தபடியே இதோ இந்த மனிதர்களால் செல்லும் வழியெங்கும் விரட்டப்பட்டு நூறு பேருக்கு மேல் இருந்தும் பயந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும், சில மனிதர்களால் கற்களை வீசியும், காயங்கள் ஏற்பட்டு சிதறி எங்கு போய் ஒளிவது என்று தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்.
ஐயா நாங்கள் உங்களுக்கு என்ன செய்தோம்? எங்களுக்கென்றிருக்கும் காடும், காட்டு பாதையும் உங்களை என்ன செய்தன? எங்களின் இடங்களை இப்படி ஆக்ரமித்து சுற்றி வர மின்சார வேலியை போட்டு என்ன செய்ய போகிறீர்கள்?
மனிதர்கள் பேசிக்கொண்டு போவது காற்று வாக்கில் எங்கள் காதுகளில் வந்து விழுந்தது. மலை அடிவாரம் முழுக்க யாரோ ஒருத்தர் வாங்கி போட்டிருக்காராம், ஆன்மீக சுற்றுலா தளமாட்டம் செய்ய போறாராம், அதனால மிருகங்க எதுவும் உள்ள வராம இருக்கறதுக்கு சுத்தி கரண்டு வேலி போட்டிருக்காங்க.
நீங்கள் வாழ்வதற்கு யானைகளான எங்களின் வாழ்க்கையை ஏன் கெடுக்கிறீர்கள்? எங்கள் இருப்பிடத்தை பறித்து இப்படி ஊர் ஊராய் அலைய வைத்து., அப்படி என்ன மனிதர்கள் ஊரும் பேரும் போற்ற வாழ்ந்து விட போகிறீர்கள்? இதற்கு எங்களை ஏன் சித்ரவதை செய்கிறீர்கள்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (15-Mar-23, 10:39 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : engal vaazhkkai
பார்வை : 80

மேலே