அம்மாவின் தன்னலமற்ற அன்பு

அம்மாவின் தன்னலமற்ற அன்பு
அந்த சிறிய கிராமத்தில் வானொலி பெட்டியில் வானிலை அறிக்கை கூறிய செய்தி
எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியது.அந்த செய்தி ஒரு பலமான காற்றழுத்த மண்டலம்
கடலில் உருவாகி அடுத்த சில மணி நேரத்தில் கரையை கடக்கும் அதன் விளைவாக வரும் நான்கு
தினங்களுக்கு பலத்த மழை பெய்யும். கடலில் யாரும் மீன் பிடிக்க செல்லவேண்டாம். தாழ்வான
பகுதிகளில் மழை நீர் தேங்க கூடும். எல்லோரும் விழிப்புடனும் மிகவும் கவனமாகவும் இருக்க
வேண்டும் என்ற எச்சரிக்கை செய்தி தான் அது. அடுத்த நாள் விடியக் காலையில் ஆரம்பித்த
மழை ஓயாமல் பொழிந்து கொண்டிருந்தது. வீதியெங்கும் வெள்ளம் நிரம்பி குன்றும், குழியும்
நிறைந்து போக்குவரத்து நெரிசலால் வீதியே தடைப்பட்டு விட்டது. மின்சாரமும் பாதுகாப்பு கருதி
நிறுத்த பட்டது.கிராமமே இருள் மயமாய் காட்சியளித்தது.

அந்தக்கிராமத்தின் வீதி ஓரமாய் இருந்த ஒரு குடிசை வீட்டில் சிறிய விளக்கின் வெளிச்சத்தில்
கூனியபடி குடையைப் பிடித்துக் கொண்டு வாசல் படலையை இழுத்துக் கட்டி விட்டு மீண்டும்
வீட்டினுள் நுழைந்த முனியம்மா கால் தடுக்கி கீழே விழுந்து விட்டாள். "ஐயோ கடவுளே"
என்றபடி கையை ஊன்றி ஒருவாறு எழுந்து மெதுவாக எழுந்து நடந்து உள்ளே சென்று
நனைந்திருந்த உடையை மாற்றுவதற்காக மாற்றுடை ஒன்றை எடுத்துக் கதவை மூடினாள்.

கடிகாரம் விளக்கின் வெளிச்சத்தில் ஒன்பது மணியை காட்டியது. சுடுநீர் வைத்திருந்த
பிளாஸ்க்கை எடுத்து இருந்த சுடுநீரைக் கோப்பையில் ஊற்றிக் கொண்டு மேசையிலிருந்த மருந்து
டப்பாவினுள் இருந்து விளக்கின் வெளிச்சத்தில் மருந்தை சரி பார்த்துக் குடித்தாள்.
மழைவிடுவதாக இல்லை. கூரையில் மழைநீர் தங்கி மெல்ல வீட்டிற்குள் சொட்டி சொட்டி ஒரு
புறம் ஈரமாக இருந்தது. மறுபுறம் ஓலைப்பாயை போட்டு விட்டு விளக்கையும்
கொஞ்சம் தணித்துத் தலைப்பக்கமாக வைத்து விட்டு எப்போதும் போல ஒரு பெருமூச்சோடு
"தாயே மீனாட்சி " என்றபடி குளிர் தாங்க முடியாமல் தனது புடவையை இறுக்கி கொண்டு
சுருண்டுபடுத்தாள்.
கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவள் கால்பக்கம் ஈரமாய் இருப்பது
போல உணர்ந்து எழுந்து விளக்கை எடுத்துப் பார்த்தாள். கூரையால் சிந்திய தண்ணீர் எல்லா
இடமும் பரவி ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிப் பார்த்தாள் தூங்குவதற்கு இடமே இல்லை.
அண்ணாந்து கூரையைப் பார்த்தாள் மழை நீர் கூரையால் வழிந்து கொண்டிருந்தது. கால்களை
மடக்கியபடி ஒரு மூலையில் சரிந்து கொண்டாள். மழைத் தூறல் துளித்துளியாய் அவள் உடம்பை
நனைத்தது. அங்குள்ள போர்வையை எடுத்து மூடிக் கொண்டாள். ஏற்கனவே நொந்து
போயிருந்த மனக்குறமுல் இளம் சூடான கண்ணீர்த் துளிகளாய் அவளை அறியாமலே
கன்னங்களை நனைத்தன.
முனியம்மாவின் வாழ்க்கையில் கடவுள் எழுதிய தலை எழுத்து அவளைத் தனிமைக்கு தள்ளி
விட்டது. ஒரே ஒரு மகனைப் பெற்றவளுக்கு சில வருட தாம்பத்தியத்திற்குள் கணவரை இழக்க
வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.தனக்குத் தெரிந்த வீட்டுத் தொழிலைச் செய்து மகனை வளர்த்து

ஆளாக்கி விட்டால் போதும் என்ற துடிப்பு. அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து அப்பம்,
தோசை, பிட்டு, இடியப்பம் என்று உணவுகளை தயார் செய்து தலையில் சுமந்து கடைகடையாய்
கொடுத்து விட்டு மீதி நேரத்தில் கூலி வேலை செய்து சம்பாதித்து தனது ஒரு பிள்ளைக்காக
ஓடாய் தேய்ந்தாள். மகனின் பத்து வயது வரை தன்னால் முடிந்ததைச் சம்பாதித்து மகனைப்
படிக்க வைத்தவளுக்கு திடீரென உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. அவளால் அதிகாலையில்
எழுந்து உணவுகள் தயாரிக்கவோ, அடுப்பங்கரையில் வெப்பத்தை சமாளிக்கவோ முடியவில்லை.
இதை விட்டால் வேறு நிரந்தரமான வருமானம் ஏதுமில்லை என்பதால் தன்னால் முடிந்தவரை
உணவுகளை தயாரித்து விற்று வந்தாள். மகனுக்கான படிப்புச் செலவுகளும் வருமானத்தை விட
அதிகமாக இருந்தது. பிள்ளையின் படிப்புக் கெட்டு விடக் கூடாதென்பதில் அவள் கவனம்
சிதறவில்லை. வேறு ஏதாவது வேலை தேடலாம் என்று முயற்சித்தவளுக்கு வேலை கிடைத்தும்
மகன் ஜீவா சிறுவனாக இருந்ததால் தனியாக விட்டுச் செல்வதில் தயக்கமாக இருந்தது. நாட்கள்
ஓட அவனுடையச் செலவுகளை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டாள்.

ஜீவா கல்வி கற்ற பாடசாலை அதிபரின் உதவியுடன் அவனை விடுதியில் தங்க வைத்து படிக்க
வைக்கலாம் என்று முடிவெடுத்தாள். ஜீவாவிடம் சம்மதம் வாங்குவதிலும் அவள் மனம்
தயக்கத்துடனே இருந்தது. ஒரு பிள்ளை என்று வறுமையிலும் செல்லமாக வளர்த்த பாசம், எந்தச்
சின்ன வேலையும் செய்தறியாதவன் எப்படி விடுதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுவான் என்ற
பயம் ஒரு புறம் குழப்பமாயிருந்தது. தடுமாறிக் கொண்டிருந்த மனதை ஒரு நிலைப்படுத்தி
ஜீவாவிடம் சம்மதம் கேட்டாள். ஜீவா மாலை விளையாடி விட்டு உள்ளே வந்து படிப்பதற்காக
மேசையில் புத்தகங்களை பரப்பி வைத்து அடுத்த தினம் கொடுக்க வேண்டிய வீட்டுப் பாடங்களை
செய்து கொண்டிருந்தான். பாலைக் கோப்பையில் ஊற்றிக் கொண்டு அவனருகே முனியம்மா
அமர்ந்து "கண்ணு " எனத் தலையை வருடி விட்டாள் . "ஜீவா உங்கிட்டே கொஞ்சம் பேசணும் நீ
பள்ளி விடுதியில் இருந்து படிக்கிறியா? என்றதும் ஜீவா ஏக்கத்தோடு தாயைப் பார்த்தான்.
"ஏனம்மா உன்னால என்னைப் பார்த்துக்க முடியல்லையா? அவனது கேள்வி முனியாம்மாவின்
மனதை கண்ணாடி போல் நொறுக்கியது. கண்கள் குளமாகியதை முந்தானையால் மறைத்தபடி
"இல்லை ஜீவா, அங்கே இருந்தால் நீ நல்லாப் படிக்க முடியும் , பாடமெல்லாம் மற்றவர்களின்
உதவியோடு நன்றாக புரியும்,நிறையப் பேரோட விளையாடலாம்" என்று சொல்லிக் கொண்டு
இருக்கும் போதே "எனக்குப் பயமாய் இருக்கு நான் அங்கெல்லாம் போக மாட்டேன்
உன்கிட்டேயே இருக்கேனே " என்று ஜீவா மறுத்து கூறியதும் முனியம்மா அதிகமாக எதையும்
சொல்லி அவனை சங்கடப்படுத்த விரும்பாதவளாய் பால் டம்பளரை வைத்து விட்டு அவன்
தலையை ஒருமுறை தொட்டு விட்டு சென்று விட்டாள்.

பாடசாலை அதிபரிடம் அவள் மீண்டும் சென்று ஜீவாவின் மனநிலையைக் கூறினாள். ஓரிரு
வாரங்கள் கழித்து அதிபர் ஜீவாவை கூப்பிட்டு பேசி சம்மதிக்க வைத்தார். அவனும் மகிழ்ச்சியாக
விடுதிக்குச் செல்லத் தயாரானான். எல்லா ஆயத்தங்களையும் செய்து விட்டு விடுதிக்கு கட்ட
வேண்டிய முற்பணம் பாேதாமையால், காதிலிருந்த இரு தோடுகளையும் அடகு வைத்துப்
பணத்தைத் தயார்படுத்தி விட்டு அவனுடன் விடுதிக்கு சென்றாள்.

பேருந்தில் முனியம்மாவின் கையைப் பிடித்தபடியே ஜீவா இருந்தான் ஜீவா. பேருந்து செல்லும்
வழியில் இடையே பேசிக் கொண்டு வந்தவன் அம்மா உங்க தோட்டைக் காணவில்லையே
என்றான் பதட்டத்துடன். அடகு வைத்த விஷயம் ஜீவாவிற்கு தெரிய வேண்டாம் என
நினைத்தவள் ஜீவா நேற்று எங்கேயோ கழற்றி வைத்தேன் எங்கு என்று
தேடிக்கொண்டிருக்கிறேன் என்றபடி பேருந்தின் வெளியே பார்த்தாள். "அப்பா வாங்கிக்
கொடுத்தது என்று கவனமா வச்சிருந்தியே, ஏம்மா..." கவலையோடு அவள் காதுகளை
தடவினான். "சரி விடு ஜீவா பிறகு பார்த்துக்கலாம்" எனக் கூறி அவனை சமாதானப்படுத்தினாள்.
பள்ளி விடுதியின் முன்பாக பேருந்தும் நின்றது. பைகளைக் கையில் எடுத்துக் கொண்டு
இறங்கியவன் விடுதியின் வாயிலில் இருந்த சுவரில் தொங்க விடப்பட்டிருந்த பலகையைக்
கவனித்துப் படித்தவன் முகத்தில் இருள் சூழ்ந்தது . தயங்கியபடியே உள்ளே சென்றான்.
பொறுப்பாக இருந்த கிறிஸ்தவ மதக் குருவானவர் ஒருவர் ஜீவாவை பொறுப்பெடுத்தார்.
கலங்கிய கண்களுடன் தாயிடம் முத்தம் ஒன்றை பெற்றுக் கொண்டு திரும்பி திரும்பிப் பார்த்தபடி
உள்ளே சென்றான். ஜீவா கவலைப்படக் கூடாது என்பதற்காக தன்னைக் கட்டுப்படுத்தி
கண்ணீரையும் தனது வேதனையை முனியம்மா மறைத்தாள். சிறிது நிமிடத்தில் அவன் திரும்பி
வந்து அம்மா தோடைத் தேடி எடுத்திடம்மா என்று கூறி வெறுமையாயிருந்த அவள் காதுகளைத்
தொட்டுத் தடவினான். சரிடா நான் பார்த்துக்கிறேன் நீ கவலைப்படாதே மிகவும் கவனமா இரு ,
மாதம் ஒரு முறை அம்மா உன்னைப் பார்க்க வந்திடுவேன் எனக் கூறி அவனை மார்பாேடு
அணைத்து முத்தமிட்டாள். ஜீவாவைப் பிரிந்த நாட்கள் அவளுக்கு மிகவும் வெறுமையாகவும்
சூன்யமாகவும் வாழ்க்கையே ஒரு இலக்கு இல்லாததாகவும் இருந்தது. தனிமையை சமாளிக்க
எதாவது வேளையில் கவனத்தை செலுத்தி அதை வைத்து மறக்க முயன்றால் அப்பொழுதும்
ஜீவாவின் நினைவு வந்து அவன் சொன்னவை காதுகளில் ஒலிக்கும்.மனதில் அவனை ஒரு
வினாடி கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில்
அவனை பார்க்கச் செல்வாள். ஜீவாவுக்கு பிடித்த எல்லா உணவுகளையும், சி்ற்றுண்டிகளையும்
ஆர்வத்தோடு தயார் செய்து எடுத்துச் செல்வாள். ஜீவாவும் அந்த நாளுக்காக விடுதியில் காத்து
கொண்டிருப்பான். ஏங்கிய உள்ளங்கள் இரண்டும் சந்திக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.
காலச்சக்கரம் உருண்டோடியது உயர்கல்வி வரை விடுதியில் தங்கியிருந்தே கற்ற ஜீவா
முனியம்மா எதிர்பார்த்ததை விட அதிக திறமையானவனாக கல்வியிலும், விளையாட்டிலும்
சிறந்து விளங்கினான். வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று மாணவர்களுக்குள்
ஒருவனாக தேர்தெடுக்கப் பட்டான். உயர் பள்ளிக் கல்வி முடிந்து மேற்படிப்பிற்காக அவனது
திறமையால் பல சலுகைகள் இலவசமாக கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி மேற்படிப்பிற்காக
வெளியூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது அதை ஏற்றுக்கொண்டு வெளியூர் சென்றான்.

ஜீவா வளர்ந்து பெரியவனானாலும் முனியம்மாவிற்கு அவன் குழந்தை தான். அவனது
வளர்ச்சியைக் கண்டு சந்தோஷப்பட்டாலும் தாயாய் தான் அவனுக்கு செய்ய வேண்டிய எல்லா
தேவைகளிற்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தாள்.

ஜீவாவின் கல்லூரி நாட்கள் மிக வேகமாக ஓடியது மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது
அவனுக்கும், கல்லூரியில் அதே வகுப்பில் படிக்கும் சுமதிக்கும் படிப்பில் தோன்றிய
சந்தேகங்களை தீர்க்க வேண்டி சந்தித்த நட்பு நெருக்கத்தை ஏற்படுத்தியது நெருக்கம் நாளடைவில்

காதலாக மலர்ந்தது. ஜீவா தனது குடும்ப நிலைமையை எடுத்துச் சொல்லியும், உன்னைத் தான்
நான் விரும்புகிறேன் உன் குடும்பமோ அதன் நிலையோ எனக்கு தெரியவேண்டாம் உன் உள்ளே
இருக்கும் நல்ல மனிதத்தன்மையை நான் மதிக்கிறேன். உன்னைப் பற்றி வேறுயேதும் எனக்கு
தேவையில்லை. கல்யாணம் செய்து கொள்வோம் என்று பிடிவாதமாக இருந்தாள் சுமதி . அவள்
பணக்கார வீட்டுப் பெண் என்ற காரணத்தாலே முதலில் அவள் காதலை மறுத்தவன் எப்படியோ
நாளடைவில் அவள் எண்ணத்திற்கு தலை அசைத்து அவனும் தன் அன்பையும் காதலையும்
அவளிடம் தெரிவித்தான். அடுத்த விடுமுறைக்கு வந்த பொழுது தனக்கு நட்பாக ஆரம்பித்து
காதலாக வளர்ந்த விஷயத்தை அவன் தாயிடம் கூறி சுமதியின் பணக்கார குடும்பத்தைப்
பற்றியும் கல்யாணம் செய்து கொண்டால் அவனைத்தான் செய்து கொள்வேன் என்ற அவளது
பிடிவாதத்தை பற்றியும் அவனும் அதற்கு சம்மதம் தெரிவித்ததையும் அவனால் அவளோடு
மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பதையும் அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சியபடி
கூறினான். மனதுக்குள் பெரிய தயக்கம்,பணக்கார பெண் அவர்கள் உன்னை எவ்வாறு
நடத்துவார்கள் என்ற எண்ணங்கள் தடையாக தெரிந்தாலும் பிள்ளையின் விருப்பத்திற்கு எதிராக
எதையும் மறுக்காத தாயாகவே இருந்த அவளால் இதையும் மறுக்க முடியவில்லை. உன்
சந்தோஷம் தான் எனக்கு வேண்டும் என்று அவன் காதலை முனியம்மாள் ஏற்று சம்மதம்
என்றாள். ஜீவாவிற்கு அம்மாவின் அனுமதி கிடைத்ததில் மிக மகிழ்ச்சியாக இருந்தது.இந்த நல்ல
செய்தியை சுமதிக்கு அவன் கூறி அவளுடன் அவள் பெற்றோர்களைக் காண சென்றான்.
அவர்களும் அவனை கண்டு சுமதியின் விருப்பத்திற்கு தாங்கள் சம்மதிப்பதாக சொல்லி நல்ல
முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தலாம் என தங்களது முடிவையும் தெரிவித்தனர். சுமதிக்கும்
ஜீவாவிற்கும் திருமணம் விமரிசையாக நடந்தது. சுமதி வெளியூரைச் சேர்ந்தவள் என்பதால்
ஜீவாவும் வெளியூரிலேயே தங்கி விட்டான். அப்பப்போ வந்து அம்மாவை பார்ப்பான். சில
மாதங்கள் இவ்வாறு சென்றன,சுமதி மெல்ல ஜீவாவைத் தன் வீட்டிலேயே தங்கவைத்து அவனை
ஊருக்கே போக விடாதவாறு காரணங்களைக் கூறி அங்கு செல்வதை தடுத்தாள். முனியம்மாவால்
ஜீவாவை பார்க்கவே முடியவில்லை. அவள் மீண்டும் தனித்துப் போனாள். வருடங்கள் கடந்து
விட்டது முனியம்மா இந்த தனிமையில் வாழும் வாழ்க்கையை இனி பயனுள்ளதாகக் கழிக்க
வேண்டும் என்ற எண்ணத்தோடு சாப்பாடு தயாரித்து விற்கும் பணியில் இருந்து ஓய்வெடுத்து
கிராமத்துக் கோயிலில் சின்னச்சின்ன வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.
அதிகாலை எழுந்து கோயிலைச் சுத்தம் செய்வது, பராமரிப்பு வேலைகளை செய்வது என்று பகல்
பொழுதைக் கோவிலில் செலவிடுவாள். இரவில் தனது குடிசையில் தங்குவாள்.

அன்று அதிகாலையே ஆரம்பித்த மழையால் கோயிலுக்கும் செல்லவில்லை. வீட்டிலேயே தங்கி
விட்டாள். குடிசை முழுவதுமாய் மழை நீரால் நிரம்பியிருந்ததை பார்த்த கோயில் பூசாரி அவளைக்
கோயிலிலேயே தங்கும் படி கூற தன் வீட்டை விட்டுப் போக மனமின்றி அதை மறுத்தாள்.
அன்று பெய்த அடைமழையில் அவளால் நிம்மதியாக தூங்க முடியாத நிலையை எண்ணி
வேதனைப் பட்டாளோ, அல்லது தனது தனிமையான வாழ்க்கையை நினைத்து கலங்கினாளோ
அவள் கண்கள் கண்ணீரை சொரிந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி கோயிலில் சென்று
தங்கி விடலாம் என முடிவெடுத்தாள். அதிகாலை வரை எப்படியோ சமாளித்தவள் கொஞ்சம்
மழை ஓய்ந்ததும் கோயிலில் உள்ளே சென்று தங்கினாள்.

அந்த கிராமத்து கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை நடை பெறும் திருவிழாவிற்கு
வெளியூரிலிருந்தும் மக்கள் அதிகமாக வருவது வழக்கம். அன்று வருட திருவிழா கோவிலில் நடை
பெற்றுக் கொண்டிருந்தது. அங்குள்ள தெய்வத்திடம் வேண்டிய வரங்களை கொடுக்கும் கோயில்
என்றபடியால் மக்கள் இந்த விழாவிற்கு தங்கள் குடும்பத்தாரோடு வருவது பழக்கமாகி
பெரியவர்களும் சிறுவர்களும் கூட்டமாக வந்து தரிசனம் செய்வார்கள். தன் சிறுவயதில் சென்ற
ஞாபகத்தில் ஜீவாவுக்கும் இந்த திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
சுமதியை எப்படியாவது சம்மதிக்க வைக்கலாம் என்று பல முறை முயற்சித்தான் அவள் அங்கு
சென்றால் ஜீவாவின் அம்மாவை பார்க்கநேரிடும் அதன் பின் என்னென்ன விளைவுகள் ஏற்படும்
என்று கற்பனையில் கண்டு அதை அவள் விரும்பவில்லை வர மறுத்து விட்டாள். ஜீவா தன்
நண்பர்களோடு திருவிழாவிற்கு ஊருக்கு வந்தான். ஊர் வந்தவுடன் ஒரு வண்டியை எடுத்துக்
கொண்டு வீட்டை நோக்கிப் பறந்தான். "அம்மாவுடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கணும்,
சுமதிக்காக இவ்வளவு காலமும் அம்மாவை ஏன் என்று கூட திரும்பிப் பார்க்காமல் இருந்ததற்கு
தனது வருத்தத்தை தெரிவித்து தனது நிலைமையை விளக்க வேண்டும் என நினைத்து அவள்
தன்னை புரிந்து கொள்வாள் மன்னிப்பாள் என்று மனதை தேற்றிக்கொண்டு வீட் டு வாசலில்
அவளை அம்மா என அழுதவாறு கூப்பிட்டு வாசலில் நின்றபடி வீட்டைக் கவனித்தான் யாருமே
இல்லாத வெறுமையாய் பாழடைந்த வீடாய் இருந்தது. படபடவென வந்தது உடம்பில் ஏதோ
பதட்டம் அம்மாக்கு என்னாச்சு? எங்கே போயிருப்பாங்க? அவனை அறியாமலே அவளைப்
பார்க்கத் துடித்த இதயத்துடிப்பின் வேகம் அதிகமாகியது. அயல் வீட்டாரிடம் சென்று
விசாரிக்கலாம் என்றால் அவர்கள் யாவரும் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.

வேகமாக கோயிலை நோக்கித் திரும்பினான். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூசாரியை
சந்தித்து எப்படியாவது அம்மாவை பார்க்க வேணும் என்று நினைத்தான் ஆனால் திருவிழா நேரம்
எப்படி சாத்தியம் என்றபடி கோயிலின் வலது புறமாயிருந்த சாமி சிலைக்குச் சென்றான். அந்தச்
சிலை தான் கோயிலின் பிரதானமான வழிபாடு நடக்கும் இடம் என்பது ஞாபகம் இருந்தது. அங்கு
அந்த தெய்வத்திடம் தன்னை மறந்து கண்ணீருடன் அம்மா நன்றாக இருக்கணும் அவளுக்கு
ஒன்றும் ஆகி இருக்க கூடாது என்று தன் மனதாய் ஒருநிலை படுத்தி வேண்டி
கொண்டான்.அம்மா சிறுவயதில் அவனிடம் இந்த எல்லாம் தரும் சக்தி வாய்ந்த தெய்வத்திடம்
எது கேட்டாலும் நடக்கும் என்று அவனை தூக்கி காட்டியது நினைவுக்கு வந்தது கண்ணீர்
பெருக்கெடுத்தது. சுற்றிச் சுற்றி கூட்டத்தைப் பார்த்தான் எங்காவது தன் அன்னை தெரிகிறாளா
என்று பார்த்தான். நேரமாச்சு காலையில் சாமி வீதியைச் சுற்றி வருவார் அப்ப எல்லாரும்
கும்பிடுங்கோ இப்ப நேரமாச்சு என்று ஒரு அம்மா சொல்லி விட்டு இன்னும் சில நிமிடத்தில்
கேட்டை ப் பூட்டனும் என்று கூறியவாறே ஒரு வயதான அம்மா அவன் அருகே வந்து மின்
விளக்கின் வெளிச்சத்தில் அவனை உற்றுப் பார்த்தாள். அவன் கண்கலங்கியபடி நின்றான்.
ஒன்றும் யோசிக்காதே, இந்த ஆத்தா யாரையும் கை விட்டதில்லை, கவலைப்படாமல் போயிட்டு
காலையிலவா என்றவளின் முகத்தை பார்த்தவுடன் ஜீவா தன்னிலை மறந்தான் அவள் கையைப்
பிடித்து அம்மா என்றான். அவளால் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. தம்பி
யார் நீங்க கிட்ட வந்து முகத்தைப் பார்த்தாள். அம்மா என்னைத் தெரியலையா நான். ஜீவா
என்றதும் திகைத்துப் போய் நின்றாள். ஜீவா.நீயா எப்படி இங்கு என்று தடுமாறியபடி அவனை
இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். எவ்வளவு காலம் ஆச்சு உன்னை பார்த்து, இந்த

அம்மாவை மறந்து போய்விட்டயே என்று கூறி, உன்னை நினைத்து அழுதழுதே என் காலம்
போனது , கடைசியில் சாமிகிட்ட அடைக்கலமாக வந்து விட்டேன். அவன் தலையை
எப்பொழுதும் போல வருடினாள். அவனால் எந்தக் கேள்வியும் அவளைக் கேட்க முடியவில்லை.
தள்ளாடியபடி நடந்தவளை பக்குவமாகப் பற்றிப் பிடித்தான்.

கோயிலின் பின்புறமாக இருந்த சிறிய கொட்டிலில் தரையிலே பாயை விரித்து இருக்கச்
சொன்னாள். சின்னப் பாத்திரத்தில் பஞ்சாமிர்தமும், இன்னுமாெரு பாத்திரத்தில் பொங்கலும்
எடுத்து வந்தாள். குடுவையிலிருந்த தண்ணீரைக் கைகளில் நனைத்து அவனது முகத்தை ஒற்றி
முந்தானையால் துடைத்தாள். ஜீவாவின் கன்னங்கள் ஈரமாகவே இருந்தது. ஏன் தம்பி
கண்கலங்குகிறாய், உன்னைப் பார்க்கத் தான் இந்த உயிர் இழுத்து கொண்டு இருக்கு, ஆத்தா
காலடியில் நான் நிம்மதியா இருக்கிறேன், நீ உன்னோட மனைவி பி்ள்ளைகளோட
சந்தோஷமாய் இரு, அதுவே எனக்குப் போதும். முந்தானையால் அவன் முகத்தைத் துடைத்து
விட்டு, சாமிக்கு படைச்சது சாப்பிடு இரண்டு தடவை நடுங்கிய கைகளால் ஊட்டி விட்டாள்.
தண்ணீரைக் குடித்து விட்டு வெளியில் இருந்த மரக்கட்டிலில் அமர்ந்து இருந்து சிறிது நேரம்
இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஜீவாவைத் தேடிக் கொண்டு நண்பர்கள் அந்த பக்கமாக
வந்தவர்கள் அந்த இடத்தி்ற்கே வந்து விட்டார்கள். ஜீவா உன்னை திருவிழா கும்பலே
எங்கெல்லாம் தேடுகிறது அம்மாவைப் பார்த்திட்டு வரேன் என்று போனாய், இங்கே வந்து
பாட்டிகிட்ட பேசிக்கொண்டிருக்கேயே என்றதும் இவங்க..என்று சொல்ல ஆரம்பித்தவனை
இடை மறித்து இந்தக் கூட்டத்துலேயும் இருட்டிலேயும் எங்க அம்மாவை கண்டு பிடிக்கிறது,
நாளை காலையில பார்த்துக்கலாம் என்று தம்பியை நான் தான் இங்கே அழைத்து வந்தேன் என
கூறிய பாட்டி என்ன காரணத்தாலோ தன்னை அவன் தாய் என்று காட்டிக் கொள்ளவில்லை.
ஜீவா அவளை பார்த்தவாறு இருந்தான். அவன் நண்பர்கள் பாட்டி சொல்லுறதும் சரி தான் என்று
கூறி பாட்டி உள்ளே சென்று கொண்டுவந்து கொடுத்த பொங்கலை பகிர்ந்து சாப்பிட்டு விட்டு
அந்த மரத்தடியில் தூங்கினார்கள்.

அதிகாலையே மக்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வந்து
கொண்டிருந்தார்கள். ஜீவாவும் நண்பரகளும் சாமியின் வீதிஉலா பார்க்கச் சென்றார்கள்.
திருவிழா நிறைவடைந்தது. ஜீவா தாயைப் பிரிய மனமின்றி தடுமாறினான். டேய் ஜீவா உங்க
அம்மா எங்க போயிருப்பாங்க, இவ்வளவு தூரம் வந்தும் பார்க்க முடியாமல் போச்சே என்பது
போல் கவலையுடன் அவனைப் பார்த்தார்கள். இவங்க தான் என் அம்மா என்று சொல்லத் துடித்த
உதடுகளை தடுத்து அன்று இரவு தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தை நினைத்தான்.
இரவு எல்லோரும் தூங்கிய பின் ஜீவாவை மெதுவாக தட்டியெழுப்பிய முனியம்மா உள்ளே
அழைத்துச் சென்றாள். ஜீவா நான் தான் உன் அம்மா என்று உன் நண்பர்களுக்கு சொல்லாதே
ஏம்மா அப்பிடி சொல்லுகிறாய், என்னால அப்படி இருக்க முடியாது என்று கூறியவனை நோக்கி
நான் சொல்லுறதைக் கேளு, என்னோட நிலைமை உன் குடும்பத்துக் கெளரவத்திற்கு
குறைச்சலாகி விடும் , நாளைக்கு சுமதிக்கு இது தெரிந்தால் உன் குடும்பத்தில் குழப்பம் வரும்,
இந்த உலகம் இப்ப பணம், அந்தஸ்து, கெளரவம் தான் பெரிசு என்று மாறிப் போயிற்று. பாசம்,
உறவு எல்லாம் இப்ப செல்லாக் காசு மாதிரி ஆகிவிட்டது . நீ வாழுற இந்த வாழ்க்கை அதனால்

இருக்கும் சந்தோஷமும் என்னால் மாறிடக் கூடாது, உன் அம்மா நான் உன் நன்மைக்காக தான்
சொல்லுறேன் யாருக்கும் நான் யார் என்று தெரிய வேண்டாம் என்று அவனை வற்புறுத்தி
சத்தியம் வாங்கியதை நினைத்தபடி கண்களைத் துடைத்தான். அவன் நண்பர்கள் சரி உங்க
அம்மாவை பார்க்கவில்லை என்றாலும் இவங்களை உன் அம்மாவை போல் நினைச்சுக் கொள்,
அடுத்த தடவை வரும் போது பார்த்துக்கலாம் என்று கூறி நண்பர்கள் அவனை
சமாதானப்படுத்தியதும் அவனுக்குள் வருத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது.மனம் முழுதும் ஒரு
இனம் புரியாத வலி. அதில் ஒரு நண்பன் பாவம் இந்த அம்மா இவர்களை பார்த்துக்கொள்ள
யாருமே இல்லை, இந்த வயசில கூடக் கஷ்டப்படுறாங்க ,அந்த சொல் அவன் மனதை ரணமாய்
தாக்கியது. பதிலேதும் இன்றி மெளனமாய் நின்றான். கையில் விபூதியை எடுத்து வந்த முனியம்மா
எல்லோரது நெற்றியிலும் பூசினாள். ஜீவாவின் நெற்றியில் பூசி விட்டு உன் அம்மாவை இந்த
ஆத்தா பார்த்துக்கும், நீ கலங்காமல் போயி்ட்டு வா தம்பி என்றாள். ஜீவாவினால் அழுகையை
அடக்க முடியவில்லை. தன் வாழ்க்கைக்காக தன்னையே தியாகம் செய்த அம்மா, இன்று தன்
சந்தோஷத்துக்காக மாறு வேடம் போட்டவளாய், ஏழைக் கோலமாய் நி்ற்பதை பார்த்து கலங்கிய
கண்களுடன் வரேன் அம்மா .என விடை பெற்றான், முனியம்மா கோயிலில் தன் காரியங்களை
கவனிக்க சென்றாள்.

பெற்ற தாயைக் கூடவைத்துப் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு பணமும், அந்தஸ்தும்,
கெளரவமும் தான் பெரிதென்று நினைக்கும் மனைவி சுமதியின் மனப்பான்மை ஜீவாவை
குற்றஉணர்வில் துடிக்கச் செய்தது. தாயா? தாரமா? என்ற வினாவுக்கு விடை கிடைக்காத
துரதிஷ்டசாலியாய் ஜீவா தவித்தான். தனக்காக கஷ்டங்கள் பல பட்டு தன்னை வருத்தி நல்ல
நிலையில் வளர்த்து விட்ட தாய்க்கு ஏதும் செய்யவில்லையே என்ற குற்றம் நிறைந்த மனதோடு
ஜீவாவின் வாழ்க்கை நடந்தது.

ஜீவாவைப் போல் எத்தனையோ பேர் ஏதோ ஒரு சூழ்நிலையாலும், சுயநலத்தாலும்
பெற்றவர்களை கவனித்துக் கொள்வதில்லை. நம்மை பெற்று வளர்த்து நம்
முன்னேற்றத்துக்காகவே தங்களை வருத்தி கொண்டு வாழ்வை அர்ப்பணித்தவர்கள் முதியோர்
இல்லங்களிலும்,
தெருவோரங்களிலும்,ஆதரவற்றவர்களாய் தவிக்கிறார்கள். பிள்ளைகளை வளர்ப்பதற்காக
எத்தனை பெற்றோர் தம்மையே தியாகம் செய்கிறார்கள் கடைசியில் எந்தவொரு உதவியும்
இன்றி கைவிடப்பட்ட நிலையில் பலர் வசவுகளை தாங்கிக்கொண்டு தன் தலை விதி என
வாழ்கிறார்கள். தெய்வங்களாக வணங்கப்பட வேண்டிய பெற்றவர்களுக்கு பிள்ளைகள் செய்யும்
நன்றி கெட்ட செயல் போலி கௌரவமும் நாகரிகமும் இருக்கும் காலம் வரை தொடர்ந்து
கொண்டே இருக்கும். நம் அடுத்த தலைமுறைக்கு இது செல்ல வேண்டாம் என இறைவனை
பிராத்தனை செய்வோம்.

எழுதியவர் : கே என் ராம் (18-Mar-23, 1:09 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 74

மேலே