சந்தித்து கொண்டபோது

சந்தித்து கொண்டபோது..!

பரபரப்பான அந்த சாலையின் நான்கு வழி பாதையில், ஒரு வழியாக வந்த ஏகப்பட்ட வாகனங்களாலும் மற்ற பக்கங்களில் வந்த மனிதர்களாலும், அந்த இடம் முழுவதும் அப்படியே ஸ்தம்பித்து நின்ற வேளையில்
யாருப்பா அது? எங்கையோ பார்த்தமாதிரி இருக்கு..!
அய்யா நான் இன்னாருங்க, உங்க கம்பெனியில கூட வேலை பார்த்தவனுங்க,
அப்படியா அதான் பார்த்த மாதிரி இருக்குன்னு நினைச்சேன். ஆமா என் கம்பெனியில
எங்க வேலை பார்த்தே?
அய்யா பொள்ளாச்சி பக்கம் இருக்கற கம்பெனியிலங்க..
அப்படியா.. ஆமா அங்க நிறைய கம்பெனி இருந்துச்சே? அதுல எதுல வேலை பார்த்தே?
அய்யா கயிறு தயார் பண்ணற கம்பெனியிலங்கோ
ஓ..ஆமா..ஆமா… சம்சாரத்தோட மாமன் கிட்டயிருந்து வாங்குன தோட்டத்துல ஆரம்பிச்சுது, ஆனா நீ அங்க என்ன வேலை பண்ணிகிட்டிருந்தே?
எடுபுடியாத்தான் இருந்தனுங்க, நீங்க எப்பவாச்ச்சும் ஒரு வாட்டிதான் வருவீங்க, அப்ப உங்க முன்னாடி நாங்க எல்லாம் வரக்கூடாதுன்னு எங்களை எல்லாம் உங்க பக்கத்துல விடமாட்டாங்க.
ஆமாப்பா, என்ன பண்ணறது எனக்கு சுத்தி சுத்தி கம்பெனிங்க இருந்துச்சு, அதுபோக ஓட்டல் லாட்ஜ், ஆசுபத்திரி எல்லாம் பார்க்க வேண்டி இருந்துச்சு, இருந்தாலும் உன்னைய பக்கத்துல எங்கயோ பார்த்த மாதிரி தோணுச்சே,
ஐயா ஒருவாட்டி நீங்க தோட்டத்துல கிணத்து மேட்டுகிட்ட விழுந்து பொள்ளாச்சியில ஆஸ்பத்திரியில நடக்க முடியாம படுத்திருந்தீங்க, அப்ப நான் உங்க மத்த வேலை எல்லாம் பார்த்தனுங்க, அப்புறமா ஒரு வாரம் வூட்டுல இருக்கறப்பவும் எல்லா வேலையும் பார்த்தனுங்க.
அடடா பார்த்தியா அதான் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். வருசமாச்சா? அதான் மறந்துட்டேன். ஆமா எத்தனை வருசமா என் கம்பெனியில வேலை செஞ்சே?
பத்து வருசமு இருக்குமுங்க, பதினைஞ்சு வயசுல வேலைக்கு வந்துட்டானுங்க, அப்புறம் என்னைய வேலைய விட்டு நிறுத்திட்டாங்க, நான் ரொம்ப கெஞ்சுனேனுங்க, அவங்க முதலாளி வேணாம்னுட்டார்ருன்னு சொல்லிட்டாங்க, நான் நீங்க வர்றப்ப எல்லாம் உங்களை பார்க்கறதுக்கு முயற்சி பண்ணிகிட்டிருந்தனுங்க,
அடடா நான் அப்படி சொன்ன மாதிரி தெரியலையேப்பா, எனக்கு அங்கயும் ஒரு கம்பெனி இருக்குங்கறதே நீ சொன்னப்பிறகுதான் ஞாபகமே வந்துச்சு.
அப்புறம் புழப்புக்கு என்ன பண்ணுனே?
போங்கடா..நீங்களும் உங்க் கம்பெனியும்னு பொள்ளாச்சி சந்தையில வந்து மூட்டை தூக்கிட்டு இருந்தேனுங்க
பார்த்தியா உன் கோபத்தை காட்டறேன்னு என்னை திட்டிட்டே, பரவாயில்லை, பேசு பேசு,
அய்யா தப்பா நினைச்சுக்காதீங்க, இந்த காலத்துல நேர்மையா வேலை செஞ்சா என்னிய மாதிரி ஆளுங்க இப்படித்தான் கஷ்டப்படோணுமுங்க,
உண்மைதாம்ப்பா, பார்த்தா வயசு என்னைய விட கம்மியாத்தான் இருக்கும் போல இருக்கு, அதுக்குள்ள இங்க வந்திருக்கே? அதுவும் உன்னிய சுத்தி இத்தனை ஆளுங்க மேள தாளத்தோட ஆடிகிட்டிருக்கானுங்க
அய்யா எல்லாம் குடி பண்ணற வேலைங்க, உங்க ஆளுங்க என்னைய வேலைய விட்டு எடுத்துட்டாங்களா அந்த கோபம், சந்தையில மூட்டை தூக்குன வலி என்ன பண்ண சொல்றீங்க? தினோம் சரக்கு போட்டாத்தான் கேட்டுச்சு உடம்பு.
நீங்க மட்டும் என்னங்க, உங்க பின்னாடி இத்தனை காரு வண்டி, முதலாளின்னா முதலாளிதாங்க.
என்னப்பா நீ நாம எல்லாம் ஒண்ணுதாம்ப்பா, உனக்கு உடம்பு வலி, எனக்கு மனசு வலி, கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை எல்லாம் சொந்தம், பந்தம், சாதிக்காரன்னு சொல்லி இருக்கறதை எல்லாம் சுருட்டறதை பார்த்து பார்த்து மனசுல வலி வருது, அதனால எனக்கு கூட இந்த பழக்கம் இருக்கத்தான் செய்யுது, ஆனா உன்னிய மாதிரி எல்லாம் கிடையாது, ஆனா இந்த பழக்கத்துல கூட நான் இப்படி ஆகியிருக்கலாம்.
சட்டென்று போக்குவரத்து சீர் செய்யப்பட்டு கூட்டத்தின் நடுவே ஒரு குரல்
நேரமாச்சு, அங்க போய் சடங்கெல்லாம் செய்யணும்
அஞ்சு நிமிசத்துல வந்துடும், போன உடடனே “பாடிய உள்ள கொண்டு போய் அந்த அடுப்பு கிட்ட வையுங்க. சடங்கு செய்யறவங்க செய்யட்டும்.
சரிப்பா என் உடம்பை கொண்டு போறாங்க, நான் போய் என்ன நடக்குதுன்னு பார்க்கறேன்.
ஆமாங்க இப்ப கூட பாருங்க, நீங்க பெரிய மனுசங்க, போலீஸ் உடனே வந்து ட்ராபிக் சிக்கலை சரி பண்ணிட்டாங்க. என் உடம்பை அரை மணி நேரமா ரோட்டுல வச்சு போறதுக்கு வழியில்லாம காக்க வச்சிகிட்டிருந்தாங்க. அப்ப யாரும் ட்ராபிக்கை சரி பண்ண வரலை. நீங்க வந்த பின்னாலதான் போலீஸ் வந்து சரி பண்ணி விடறாங்க. என்ன பண்ணறது? நீங்க பெரிய ஆளுங்க,.
இதுக்கெல்லாம் கோபிச்சுக்காதப்பா, அதான், எவ்வளவு பெரிய மனுசன் நான், உன்னோட வந்து பேசிகிட்டிருக்கேனுல்ல
க்கும்..மனுசங்க கூட பேச முடிஞ்சாலும் எங்களை மாதிரி ஆளுங்க கூட பேச யோசிப்பீங்க. இப்ப, சுத்தமா மனுசங்க கூட பேச முடியாது அதான், இந்த ட்ராபிக் சரியாகறவரைக்கும் பொழுது போகணும்னு என்னைய மாதிரி ஆளுங்க கூட இப்ப வந்து பேசிகிட்டிருந்தீங்க,
சரிப்பா, கோபிச்சுக்காதே, கடைசியில நாம எல்லாம் ஒண்ணாத்தான போய்கிட்டிருக்கோம், நீ அப்படி போறே, நான் இப்படி போறேன், அவ்வளவுதான். வரட்டுமா
வர்றது எங்கயிங்க? போறது மட்டும்தாங்க. போங்க போங்க, பொறவாலயே வாறேன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Mar-23, 3:24 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 143

மேலே